Published : 23 Jan 2019 01:31 PM
Last Updated : 23 Jan 2019 01:31 PM

ராணுவ தளவாட உற்பத்தி மையமாகுமா கோவை?

ஒரு நாட்டின் வலிமை, அந்த நாட்டின் ராணுவ பலத்தில்தான் உள்ளது. வில்லும், வேலும், வாளும் வைத்திருந்த இந்தியர்களை,  வெள்ளையர்கள் வெல்லக் காரணமாக இருந்தவை நவீன ஆயுதங்கள்தான். சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய நாடு ராணுவ வலிமை மிகுந்த நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.  எனினும், நவீன ஆயுதங்களைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமும் தொடர்கிறது.

இந்த நிலையை மாற்றி, உள்நாட்டு ஆயுதத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்க மத்திய அரசு முடிவு செய்து, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் கோவையும் இணைகிறது. ராணுவ தளவாட உதிரி பாகங்கள் தயாரிக்கும் மையம் கோவையில்  அமையவுள்ளது. இதன் வளர்ச்சி ராணுவ தளவாட உற்பத்தி மையமாக  (டிஃபென்ஸ் ஹப்) கோவையை மாற்றும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் தொழில் துறையினர்.

ஆயுத இறக்குமதியில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது இந்தியா. சுவீடனைச்  சேர்ந்த ஆய்வு நிறுவனமான `ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனம்` வெளியிட்டுள்ள விவரங்களின்படி, 2013 முதல் 2017-ம் ஆண்டு காலகட்டத்தில் உலக அளவில் ஒட்டுமொத்தமாக நடைபெற்ற ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 12 முதல் 14 சதவீதம். ரஷ்யா, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்கிறது.

"நாட்டின் பாதுகாப்புத் துறை பட்ஜெட்டில் பெருமளவு தொகை ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர சலுகைக்கு செலவிடப்படுகிறது. ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான தொகை குறைவாகவே இருக்கிறது. விமானங்கள் மற்றும் போர் தளவாடங்கள் போதுமான அளவுக்கும், நவீனத்துவத்துடனும் இல்லை" என்றெல்லாம் புகார்கள் எழுந்தாலும்,  ராணுவ ஆயுத பலத்தை உயர்த்த மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், ஆயுத தேவைகளில் பெருமளவு இறக்குமதியை நம்பித்தான் இருக்கிறது.

நாட்டுக்குத் தேவைப்படும் ஆயுதங்களில் 70 சதவீதத்தை உள்நாட்டிலேயே தயாரிக்கவேண்டும் என்ற இலக்கை 2005-ம் ஆண்டிலேயே நிர்ணயித்த இந்தியா, தற்போது 35-40 சதவீதத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, இந்தியாவில் உள்ள தொழில்முனைவோருடன் கைகோர்த்து வருகிறது இந்திய ராணுவம். இதையொட்டி, கோவையில் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் தயாரிக்கும் மையத்தை அமைக்க தொழில் துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இரு நூற்றாண்டுகளுக்கு முன் விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்த கோவையில், 1888-ல் முதல் பஞ்சாலை தொடங்கப்பட்டது. பி.எஸ்.ஜி. கல்லூரி தொடங்கப்பட்டு, ஏராளமான பொறியாளர்கள் உருவாகினர். அதற்குப் பிறகு கோவையில்  இன்ஜினீயரிங் தொடர்பாக சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகரித்தன.

பொதுத் துறை நிறுவனம் எதுவும் இல்லாமலேயே, கோவை மக்களின் கடும் உழைப்பு, தொழில் வளர்ச்சியில் ஆர்வம், விடாமுயற்சியால் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, பெரிய தொழில் நகரமானது கோவை. வேளாண் கருவிகள், நூற்பாலைகள், ஜவுளித் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள், மோட்டார் பம்புகள், வெட் கிரைண்டர்கள், வாகன உதிரி பாகங்கள், காற்றாலைக்கான பாகங்கள், தங்க, வைர நகைகள் என பல்வேறு தயாரிப்புகளின் மையமானது கோவை.

1998-ல் நேரிட்ட தொடர் குண்டு வெடிப்பு, அதற்குப் பின் மின் தட்டுப்பாடு, பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்டவை தொழில்துறையைப் பாதிக்கச் செய்தாலும், பின்னடைவுகளில் இருந்து மீண்டுவர பெரும் முயற்சி மேற்கொண்டனர் கோவை தொழில்முனைவோர். ஏறத்தாழ ஒரு லட்சம் தொழில் நிறுவனங்களுடன், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறது கோவை தொழில் துறை.

கொடிசியா முயற்சி

"1969-ல் உருவான கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா), கடந்த சில ஆண்டுகளாகவே ராணுவ தளவாட உற்பத்தி மையத்தை கோவையில் அமைக்க முயற்சித்து வருகிறது" என்கிறார் கொடிசியா முன்னாள் தலைவரும், ராணுவ தளவாட கண்டுபிடிப்பு மைய (இன்னோவேஷன் சென்டர்) உறுப்பினருமான வி.சுந்தரம்.

"அருகில் உள்ள சிறிய நகரமான பாலக்காட்டில்கூட பொதுத்துறை நிறுவனம் உள்ளது. கோவை தயாரிப்பாளர்கள் பாலக்காட்டுக்கு உதிரிபாகங்களை அனுப்பிவைக்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் 2-வது பெரிய நகரமான கோவையில் இதுவரை பொதுத்துறை நிறுவனம் அமையவில்லை.

கோவையில் அதிக அளவு வாகன உதிரிபாகங்களைத் தயாரிக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைந்துள்ளன. மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் வருகையும், அவற்றின் தொடர் வளர்ச்சியும், ஒரு கட்டத்தில் பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்துவிடும். மின் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் குறைவு என்பதால், தற்போது உதிரி பாகங்களை உற்பத்தி செய்துவரும் நிறுவனங்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகும்.

எதிர்கால தொழில்துறையினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதைக் கருத்தில்கொண்டு, ராணுவம் அல்லது ரயில்வேக்கு உதிரி பாகங்களை தயாரிக்கும் முயற்சியில் கோவை தொழில்முனைவோர் ஈடுபட வேண்டுமெனக் கருதினோம்.

இதற்கு, நவீனத் தொழில்நுட்பம், முதலீடு, சந்தை வாய்ப்புகள் அவசியம். இதற்காக கோவையில் ஒரு இன்குபேஷன் சென்டரை அமைக்க உதவுமாறு, நான்கு ஆண்டுகளுக்கு முன் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனை அணுகினோம். இந்த மையம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்குவிப்பு, ஆலோசனை, கல்வி நிறுவனங்களுடன் இணைந்த செயல்பாடுகள், சந்தை வாய்ப்பு ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவும். மேலும், புதிய தொழில்முனைவோருக்கு முதலீட்டாளர்களையும் ஈர்க்கும்.

இதற்கிடையில், நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். கோவையின் தேவையை அறிந்திருந்த அவர், ராணுவ உயரதிகாரிகளை அழைத்து, கோவை கொடிசியா அமைப்பு சார்பில் இன்குபேஷன் மையம் அமைக்க உதவுமாறு அறிவுறுத்தினார். இந்தியாவிலேயே, ஒரு தொழில் அமைப்புக்கு இன்குபேஷன் மற்றும் இன்னோவேஷன் மையம் அமைக்க வாய்ப்புக் கிடைத்தது என்றால், அது கொடிசியாவுக்குத்தான். மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் கீழ் செயல்படும், அடல் இன்னோவேஷன் மிஷன் திட்டத்தில் கடந்த ஆண்டு கொடிசியாவுக்கு இன்னோவேஷன் மையம் அமைக்க கொள்கை ரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ராணுவ தளவாட கண்காட்சி

இதையடுத்து, ராணுவத்துக்கு உபகரணங்கள், உதிரிபாகங்கள்  வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைப் பார்வையிட்டு வருமாறு ராணுவ அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

 இதையடுத்து, அந்த நிறுவனங்களை எங்கள் குழு பார்வையிட்டது. தொடர்ந்து, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், ராணுவம் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் பங்கேற்ற, ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்றது. ராணுவத்தின் தேவைகள் குறித்து கோவை தொழில் துறையினர் புரிந்துகொள்ள இந்தக் கண்காட்சி மிகவும் உதவியாக இருந்தது.

கோவை கொடிசியா சார்பில் இன்குபேஷன் மற்றும் இன்னோவேஷன் மையம் அமைக்க கள்ளப்பாளையம் பகுதியில்  ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்துள்ளோம். இதில் 15000 சதுர அடி பரப்பில் கட்டிடங்கள் கட்டப்படும்.

இதற்காக கொடிசியா ரூ.10 கோடி செலவிடும். இந்த மையத்துக்குத் தேவையான இயந்திரங்களை வாங்க மத்திய அரசு ரூ.20 கோடி நிதி வழங்குகிறது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த மையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

50 உதிரிபாகங்கள்

இந்த மையத்தில் முதல்கட்டமாக ராணுவம், கப்பல் படை, விமானப்படைக்குத் தேவையான 50 உதிரிபாகங்கள் தயாரிக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. இயந்திர அடிப்படையிலான உதிரிபாகங்களாக இவை இருக்கும். ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், போர்க்கப்பல், போர் விமானம் உள்ளிட்டவற்றுக்கான பல்வேறு உதிரிபாகங்கள் தயாரிக்கப்படும்.

நான்கு ஆண்டுகளில் இவற்றின் டிசைன்கள் உருவாக்கப்பட்டு, ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். இந்தப் பொருட்களைத் தயாரிக்க டெண்டர் விடும்போது, சிறு, குறு, நடுத்தரத் தொழில்முனைவோர் பங்கேற்று, ஆர்டர் பெறுவார்கள். நிச்சயம், வெளிநாட்டுப் பொருட்களுக்கான விலையைக் காட்டிலும், உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு விலை குறைவாக இருக்கும். இந்தப் பொருட்கள் ராணுவத்துக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்போது, கூடுதலாக பொருட்கள் தயாரிக்க ஆர்டர்கள் கிடைக்கும். ஆர்டர்களைப் பெறுவோருக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை கொடிசியா இன்னோவேஷன் மையம் வழங்கும்.

ஒரு தொழில் நிறுவனம் ராணுவ தளவாட உதிரிபாகங்களை மட்டுமே 100 சதவீதம் தயாரிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக தயாரிக்குமாறு அறிவுறுத்துவோம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தொழில் நிலையை ஆய்வு செய்தால், ராணுவத்துக்கு பொருட்கள் வழங்கியதன் மூலம் என்ன வருவாய், லாபம் கிடைத்துள்ளது என்பதைக் கண்டறியலாம். அதன் பிறகு, முழுமையாக ராணுவத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தலாம்.

ராணுவத்துக்கும் அந்த தொழில்முனைவோர் மீது நம்பிக்கை ஏற்படும். அப்போது, ஆர்டர்கள் அதிக அளவில் கிடைக்கத் தொடங்கும். இறக்குமதி குறைந்து, உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் ராணுவத்தில் அதிக பயன்பாட்டில் இருக்கும்.

ராணுவ ஆர்டர்களைப் பெறுபவர்கள், இன்னோ வேஷன் மையத்துக்கு சிறிய நிதி பங்களிப்பைத் தர வேண்டும். அதன் மூலம் இன்னோவேஷன் மையமும் வளர்ச்சி யடையும். இதனால் இன்னும் அதிக கண்டு பிடிப்புகள் உருவாகும். தொழில்முனைவோரும் அதிக அளவிலான தயாரிப்புகளில் ஈடுபடுவர்.

இதன் மூலம் கோவை ராணுவ தளவாட உற்பத்தி மையமாக உருமாறும். வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்" என்றார் நம்பிக்கையுடன்.

கோவை மீதான நம்பிக்கை...

கோவையில் ராணுவத் தொழிற் பேட்டை அமைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வரும் பாஜக மாநிலப் பொதுச் செயலர்

வானதி சீனிவாசன் கூறியதாவது:

மத்திய அரசு கோவையில் ராணுவத்தொழிற் பேட்டைக் கான கண்டுபிடிப்பு மையம் அமைக்க  ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது முழுக்க  ஆராய்ச்சிக்கான தொகையாகும். இதில், ராணுவத் தளவாடங்களுக்கான உதிரி பாகங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். புதிதாக ராணுவ தளவாடங்களும் கண்டுபிடிக்கப்படும். இந்த மையம் ஒரு தொடக்கமாகும்.

சர்வதேச அள வில் விற்பனை செய்யக்கூடிய அளவுக்கு பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்கவும் இந்த மையம்  அடித்தளம் அமைத்துக் கொடுக்கும். இந்தியாவிலேயே பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேரடியாக ஒரு தொழில் அமைப்புக்கு “கண்டுபிடிப்பு மையம்’’ வழங்குவது இதுவே முதல்முறை. மத்திய அரசு மற்றும் பாதுகாப்புத்துறைக்கு,  கோவையின் மீதான அக்கறையையும், நம்பிக்கையையும் இது காட்டுகிறது. இந்த மையம் சிறு, குறுந்தொழில் முனைவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

 

கல்லூரி மாணவர்களுடன் இணைந்து...

kalloorijpgright

"கோவையில் செயல்படத் தொடங்கும் இன்னோவேஷன் மையம், அமிர்தா, பிஎஸ்ஜி, ராமகிருஷ்ணா உள்ளிட்ட பொறியியல் கல்லூரிகளுடன் இணைந்து, ராணுவ தளவாட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். இதற்காக, கல்லூரிகளில் உள்ள வசதிகளும், பொறியியல் மாணவர்களின் அறிவுத் திறனும் பயன்படுத்தப்படும்.

ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கல்வி நிறுவனங்களும், தொழில் அமைப்புகளும் இணைந்தே செயல்படும். அதேபோல, இங்கும் இணைந்து செயல்படுவதன் மூலம், மாணவர்கள், தொழில்முனைவோர் என இரு தரப்பினரும் பயனடைவர்.

புதிய ஆயுதங்கள் கண்டுபிடிப்புக்கும் உதவியாக இருக்கும். இது தேசத்தின் வலிமையை மேம்படுத்தும்" என்கிறார் வி.சுந்தரம்

 

ரூ.100 கோடி மதிப்பில் நிறுவனம் தொடங்க திட்டம்!

தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை நகரங்களை இணைக்கும் வகையில்,  ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் (காரிடார்) அமைக்கப்பட உள்ளது.  இந்த நகரங்களையொட்டி நெடுஞ்சாலைகளில் ராணுவ தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் தனியார் துறையினரும் பங்கு கொள்ள மத்திய அரசு ஊக்கமளிக்கிறது. இந்த திட்டத்தை திருச்சியில் நடைபெற்ற விழாவில்,  ராணுவ அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.

100-kodijpg

இதேபோல, கொடிசியா உறுப்பினர்கள் இணைந்து, பெரிய அளவில் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து கொடிசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி

கூறும்போது, ‘ சுமார் 2000 சிறு, குறுந் தொழில்முனைவோர் இணைந்து, ரூ.100 கோடி மதிப்பில் ராணுவ தளவாட தொழிற்சாலையை கோவையில் தொடங்க முடிவு செய்துள்ளோம். முதலில் சிறு குழுக்களாக ராணுவ தளவாட உதிரிபாக உற்பத்தியில் ஈடுபடவும், பின்னர் அனைவரும் இணைந்து பெரிய நிறுவனத்தைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனம்போல, மிகுந்த தொழில் திறனுடன் இந்த நிறுவனம் செயல்படும். ராணுவத்தின் தேவைகளை, தனியார் நிறுவனங்களைக் காட்டிலும், இந்த கூட்டு நிறுவனத்தால் மிகச் சிறப்பாக நிறைவேற்ற முடியும்.

ஏனெனில், 2000 தொழில்முனைவோரின் புத்தியும், சக்தியும் முழுமையாக இந்த நிறுவனத்துக்குக் கிடைக்கும். எந்தப் பிரச்சினைக்கும் உடனடியாக தீர்வுகாண முடியும். இந்த நிறுவனம் வளரத் தொடங்கும்போது, ராணுவம் வழங்கும் ஆர்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, கூட்டு நிறுவனம் பெரிதும் வளரும். இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்' என்றார் பெருமிதத்துடன்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x