Last Updated : 28 Jan, 2019 01:07 PM

Published : 28 Jan 2019 01:07 PM
Last Updated : 28 Jan 2019 01:07 PM

ஆங்கிலேய ஆட்சியருக்கு 144 ஆண்டுகளுக்கு பின் நன்றி விழா - பொட்டல்காடுகளை விவசாய பூமியாக மாற்றியவர்:  குலையன்கரிசல் கிராமத்தில் விவசாயிகள் நெகிழ்ச்சி

பொட்டல்காடுகளாக இருந்த பகுதிக்கு தாமிரபரணி தண்ணீரை கொண்டுவந்து விவசாய நிலமாக மாற்றிய ஆங்கிலேய ஆட்சி யருக்கு 144 ஆண்டுகளுக்கு பின் விவசாயிகள் நன்றி விழா எடுத்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருநெல்வேலி ஆட்சியராக இருந்தவர்களில் ஆர்.கே.பக்கிள் முக்கியமானவர். 1866 முதல் 1868 வரை மற்றும் 1870 முதல் 1874 வரை திருநெல்வேலி ஆட்சியராக பக்கிள் பணியாற்றியுள்ளார்.

இவரது ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் இன்றும் அவரது பெயரை தாங்கி நிற்கின்றன. அந்த வகையில் பக்கிளால் கட்டப்பட்டது தான் ஸ்ரீவைகுண்டம் அணைக் கட்டு.

தாமிரபரணி ஆற்றில் மழைக்காலங்களில் கடலுக்கு வீணாகச் செல்லும் தண்ணீரை மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்துக்காகவும் பயன்படுத்த பக்கிள் முயற்சியால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு உருவாக்கப்பட்டது. தாமிரபரணி தண்ணீரை ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் தடுத்து வடகால், தென்கால் என இரண்டு பிரதான கால்வாய்களை உருவாக்கி, அதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை வளமாக்கினார் பக்கிள்.

பெட்டைகுளம்

வடகால் பாசனத்தில் குலையன் கரிசல் கிராமத்தில் அமைந்துள் ளது பெட்டைகுளம். கடந்த 1874-ம் ஆண்டில் முதன் முதலாக தாமிரபரணி தண்ணீர் பெட்டை குளத்தை கடந்து வடகால் வழியாக தூத்துக்குடி வரை பாய்ந்தோடி யது. பொட்டல்காடாக இருந்த தங்கள் பகுதிக்கு தாமிரபரணி தண்ணீரை கொண்டுவந்து, விவசாய பூமியாக மாற்றிய ஆங்கிலேயே ஆட்சியர் ஆர்.கே.பக்கிளுக்கு நன்றி விழா எடுக்க குலையன்கரிசல் கிராம மக்கள் முடிவு செய்தனர்.

144 ஆண்டுகளுக்கு பின்

அதன்படி இந்த விழா முப்பெரும் விழாவாக நேற்று நடைபெற்றது. ஊர் மக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் நேற்று காலை பெட்டைகுளம் கரையில் திரண்டு தாமிரபரணி நதிநீருக்கு வழிபாடு நடத்தினர். தண்ணீரில் பூக்களை தூவி பூஜை செய்தனர்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அங்குள்ள அம்மன் கோயிலுக்கு வந்தனர். அங்கு பெண்கள் பொங்கலிட்டு தாமிர பரணி அன்னைக்கு நன்றி தெரி வித்தனர். தொடர்ந்து அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு ஊர் வலமாகச் சென்ற மக்கள், கிறிஸ்தவ முறைப்படி பிரார்த்தனை செய்து வழிபட்டனர். ஊர்வலத்தில் சிலம்பாட்டம், களியலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் களை கட்டியிருந்தன.

பக்கிள் படம் திறப்பு

தொடர்ந்து குலையன்கரிசல் விவசாயிகள் சங்க வளாகத்தில் விழா நடைபெற்றது. தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு ஆர்.கே.பக்கிள் திரு வுருவ படத்தையும், கல்வெட்டை யும் திறந்து வைத்தார்.

பின்னர் ஆட்சியர் பேசியதாவது:

கடந்த 1874-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சிய ராக இருந்த ஆர்.கே.பக்கிள், தாமிரபரணி நதிநீரை சீராக கால்வாய், கரை, குளம் அமைத்து வடகால் பாசனமாக்கி கொண்டு வந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பொட்டல் நிலங்களை வளம் கொழிக்கும் விவசாய பூமியாக மாற்றினார்.

குலையன்கரிசல் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆர்.கே.பக்கிளை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் வகையில் கல்வெட்டு மற்றும் அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கால்வாய்களை தூர்வாரி கரைகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆறுமுகமங்கலம் குளத்தை ரூ.10 லட்சம் மதிப்பிலும், பேய் குளத்தை ரூ.50 லட்சம் மதிப்பிலும், கோரம்பள்ளம் குளத்தை ரூ.11 கோடி மதிப்பிலும் தூர்வாரவும், பழுதடைந்த மதகுகளை ரூ.2 கோடி மதிப்பில் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

நிகழ்ச்சியில் சென்னை துறை முக சபை ஓய்வு பெற்ற துணைத் தலைவர் எஸ்.வீரமுத்துமணி, கிராம விவசாய சங்கத் தலைவர் பி.சசிவர்ணசிங், ஓய்வு பெற்ற பேராசிரியர் பால்ராஜ், விவசாய சங்க நிர்வாகிகள் ஏ.எஸ்.பால சந்திரன், என்.வி.ராஜேந்திர பூபதி, ஏ.கருணாகரன், பி.குணதுரை, ஸ்பிக் மக்கள் தொடர்பு அலுவலர் அமுதா கவுரி, டாக்டர் ஜெகதீச பாண்டியன் மற்றும் ஊர் பிரமுகர் கள், விவசாயிகள், கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

நன்றி மறவாதவர்கள்

இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “144 ஆண்டுகளுக்கு முன் வெறும் பொட்டல்காடாக இருந்த எங்கள் பகுதியை தாமிரபரணியில் இருந்து வழித்தடம் அமைத்தும், குளங் களை ஏற்படுத்தியும், செழிப்பாக மாற வைத்தவர் ஆங்கிலேய ஆட்சி யர் பக்கிள் துரை.

அவர் மேல் கொண்ட விசுவாசத்தினால், எங்கள் சுற்று வட்டார கிராமங்களில் பலரும் தங்களின் குழந்தைகளுக்கு பக்கிள் என பெயரிட்டுள்ளனர். சிவத்தையா புரம், சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம், கூட்டாம்புளி, குலையன்கரிசல் போன்ற கிரா மங்களில் இன்றைக்கும் நிறைய பக்கிள் துரைகள் இருக்கிறார்கள்.

இன்றும் நாங்கள் அவரை மறக்கவில்லை. தமிழர்கள் நன்றி மறவாதவர்கள் என்பதை நிரூபிக் கும் வகையில் கிராம மக்கள் ஒன்று கூடி அவருக்கு நன்றி விழா எடுத்துள்ளோம்” என்றனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x