

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய தொழில்நகரமான கோவைக்கு, கல்வி, மருத்துவம், தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றுக்காக பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இதனால், மக்கள் தொகையுடன், வாகனங்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், போதிய சாலை வசதி, வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.
வாகனங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, பெரும்பாலான சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட சில சாலை மட்டுமே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை, போக்குவரத்து போலீஸார், நகரின் முக்கிய மையங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைத்தும், கூடுதல் எண்ணிக்கையிலான காவலர்களை பணியில் அமர்த்தியும் சமாளிக்கின்றனர். எனினும், போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதுடன், விபத்துகள் நேரிட்டு, பலர் உயிரிழப்பது வேதனைக்குரியது.
விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள், சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாகும். கோவையின் முக்கியப் பிரச்சினையாக மாறும் போக்குவரத்து நெரிசலை ஆரம்ப கட்டத்திலேயே சீரமைக்க வேண்டிய பொறுப்பு, மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் உள்ளது.
போக்குவரத்து நெரிசலால் அவதி
கோவையில் சில இடங்களில், இலவச வாகன நிறுத்து மிடத்தை மாநகராட்சி மற்றும் போலீஸார் ஏற்படுத்தியுள்ளனர். எனினும், இங்கு குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களை மட்டுமே நிறுத்த இடம் உள்ளது. போதிய இடம் இல்லாததால் வாகனங்கள் சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது, அருகில் உள்ள சாலைகளையும் பாதிக்கிறது. எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மல்டி லெவல் பார்க்கிங் (பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்) திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கோவை நகரில் மல்டி லெவல் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. எனினும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் இடமாற்றம் உள்ளிட்ட காரணங்களால், இந்த திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. பின்னர், முதல்கட்டமாக 3 இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
முத்தான 3 திட்டங்கள்!
கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் 11,647.6 சதுர மீட்டர் பரப்பில் 1,990 இருசக்கர வாகனங்கள், 979 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், 4 தளங்களுடன் ரூ.69.80 கோடி மதிப்பில் மல்டி லெவல் பார்க்கிங் மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதேபோல, டவுன்ஹால் பெரியகடைவீதியில் 4287.3 சதுரமீட்டர் பரப்பில் 1,341 இருசக்கர வாகனங்கள், 483 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 4 தளங்களுடன் ரூ.28.84 கோடி மதிப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
மேலும், கிராஸ்கட் சாலையில் 3,113 சதுரமீட்டர் பரப்பில் 1,466 இருசக்கர வாகனங்கள், 847 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 5 தளங்களுடன் ரூ.32.33 கோடி மதிப்பில் மல்டி லெவல் பார்க்கிங் மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. மொத்தம் 7,106 வாகனங்களை நிறுத்தும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த, மாநகராட்சி சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.என்.ஐ.டி.பி.) ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பின்வாங்கிய தனியார் நிறுவனங்கள்
இந்த திட்டத்துக்கு நகராட்சி நிர்வாகத் துறையின், நிர்வாக அனுமதி கிடைத்தது. இதையடுத்து, தொழில்நுட்ப அனுமதி பெறுவதற்கான பணிகள் தொடங்கின. ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாநகராட்சியின் நிபந்தனைகள் கடுமையாக இருந்ததால், இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த எந்த ஒப்பந்த நிறுவனமும் முன்வரவில்லை.
அதுமட்டுமின்றி, ஏற்கெனவே இந்த திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்த இரு தனியார் நிறுவனங்களும், மாநகராட்சியின் நிபந்தனைகளால் திட்டத்தை செயல்படுத்தத் தயங்கின. இதனால், அந்த இரு தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தம், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர், மல்டி லெவல் பார்க்கிங் திட்டத்தில் சிறிது மாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு செய்தது. மூன்று இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் திட்டம் செயல்படுத்த திட்டமிட்டிருந்தாலும், முதல்கட்டமாக ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் மட்டும் மல்டி லெவல் பார்க்கிங் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், டி.பி. சாலையில் மாநகராட்சி சார்பில் ரூ.77 கோடி நிதி ஒதுக்கி, மல்டி லெவல் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்துவது எனவும், பின்னர் அதை பராமரிப்புக்காக ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைப்பது எனவும் தீர்மானிக்கப்படும். பழைய திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டு, 460 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு மட்டும் மல்டிலெவல் பார்க்கிங் திட்டத்தை அங்கு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, ரூ.42 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. இதில், மூன்று நிறுவனங்கள் பங்கேற்றன. இவர்களது அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் இரு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால், என்ன காரணத்தாலோ அந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் இந்த திட்டத்தில் சிறிது மாற்றம் செய்து, டெண்டர்விட திட்டமிடப்பட்டுள்ளது. எப்போதுதான் மல்டி லெவல் பார்க்கிங் திட்டம் நடைமுறைக்கு வருமோ என்று காத்திருக்கின்றனர் கோவை மக்கள்.
விதிமீறினால் அபராதம்!
மாநகர போக்குவரத்து போலீஸார் கூறும்போது, “நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, மாநகர போலீஸார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். விதிகளை மீறி, நெரிசலை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல, சாலைகளில் அனுமதியற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது” என்றனர்.
மாநகராட்சி தனி அலுவலர் உறுதி!
இது தொடர்பாக மாநகராட்சி தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கூறும்போது, “சில காரணங்களால் மல்டி லெவல் பார்க்கிங் திட்டம் தாமதமாகிறது. விதிமுறைகள் ஒத்துவராத காரணத்தால், இந்த திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தகுந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மீண்டும் டெண்டர் நடைபெறும்” என்றார்.