Published : 29 Jan 2019 01:20 PM
Last Updated : 29 Jan 2019 01:20 PM

சேவைக்கு மரியாதை! - சங்கரா கண் மருத்துவமனை தலைவர் ஆர்.வி.ரமணிக்கு ‘பத்மஸ்ரீ’

இந்தியாவில் லட்சக்கணக்கான ஏழைகளின் வாழ்வில் இலவச கண் மருத்துவம் மூலம் ஒளியேற்றுகிறது கோவை சங்கரா கண் மருத்துவமனை. கோவை மட்டுமின்றி,  இந்தியாவில் 7 மாநிலங்களில் கண் சார்ந்த மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர்

ஆர்.வி.ரமணிக்கு, நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்கொத்துகளும், மாலைகளும் நிரம்பி வழிந்த வரவேற்பறையில் அவரை சந்தித்து,  45  வருடங்களுக்கும் மேலாக தொடரும் மருத்துவப் பயணம் குறித்து பேசினோம்.

“1931-ல் கோவையில் இருந்த 3 மருத்துவர்களில் ஒருவர் என் தந்தை ஏ.வி.ராமநாதன். 1942-ல்  ப்ளேக் நோயால் பலர் ஊரையே காலி செய்துசென்று கொண்டிருந்த வேளையில், அப்போதிருந்த சில உபகரணங்களை வைத்துக்கொண்டு, ப்ளேக் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தார். காந்திபார்க் அருகில் பூர்வீக வீட்டில் கிளினிக் நடத்தி வந்தார்.

எனக்கு 10  வயதிருக்கும்போது ஒரு நாள் அவருடன் காரில் சென்றேன். எங்களைப் பார்த்த அப்பகுதி மக்கள் எழுந்து, மரியாதை செலுத்தினர். நாமும் டாக்டராக வேண்டுமென அப்போதே    முடிவெடுத்தேன். பல தடைகளைத் தாண்டி மருத்துவம் படிக்கச் சென்றேன். முதலாமாண்டு படிப்பின்போதே அப்பா காலமானார். குடும்பத்துக்கு மூத்த மகன் என்பதால் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல். சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ராதாவைக் கரம் பிடித்தேன்.

சங்கராச்சாரியாரின் சங்கல்பம்

சங்கரா கண் மருத்துவமனை காஞ்சி சங்கராச்சாரியாரின் சங்கல்பம். நானும்,  என் மனைவியும் திருமணத்துக்குப் பிறகு அப்பா கிளினிக் வைத்திருந்த இடத்தில், மருத்துவர் ராமநாதன் நினைவு மருத்துவமனை நடத்தினோம். அப்பா மீதிருந்த நன்மதிப்பால்,  தினமும் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். இருந்தும் ஒரு போதாமை இருந்தது. 

அப்போது,  ஆர்.எஸ்.புரத்தில் காஞ்சி சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதலின்படி காமாட்சி அம்மன் கோயில் கட்டப்பட்டு வந்தது. அங்கு இலவச மருத்துவ சேவை மையம்  அமையவிருப்பதும்  தெரியவந்தது. எதிர்பாராமல் கோயில் அறங்காவலர் பட்டாபிராமன் ஐயரைச் சந்திக்க நேர்ந்தபோது, மருத்துவ சேவை மையத்தை நான் எடுத்து நடத்த விரும்புவதாக தெரிவித்தேன். அவரும் மகிழ்ச்சியாக வரவேற்றார்.

1970-களில் மருத்துவத் துறையில் அரசு மற்றும் தனியார் மட்டுமே இருந்தனர். தன்னார்வ மருத்துவ சேவை போன்றவை இருக்கவில்லை. எனவே, இந்த மையம் மக்களுக்கு முழுமையாகப் பயனளிக்க வேண்டுமெனத்  திட்டமிட்டேன். இதில், சக மருத்துவ நண்பர்களும் இணைந்தனர். மருத்துவம் மட்டுமல்லாமல்,  இலவசமாக மருந்துகளும் வழங்கினர். 

மருத்துவ உதவிகள் செய்ய தன்னார்வலர்கள் இணைந்துகொண்டனர்.  இரு சிறு அறைகளில் மருத்துவ மையம் தொடங்கியது. “மருத்துவம் பார்த்து, மருந்தும் நீ கொடுப்பதால் ஐம்பது பைசா வாங்கிக் கொள். ஏழைகளால் ஐம்பது பைசா கொடுக்க முடியும். மருத்துவத்துக்கு கட்டணம் கொடுத்த எண்ணமும் அவர்களுக்கு இருக்கும்” என்றார் காஞ்சி சங்கராச்சாரியார். அதனால் கட்டணமாக ஐம்பது பைசா வசூலித்தோம்.

1977-ல் தொடங்கிய இலவச மருத்துவ மையம் கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, பல பகுதிகளில் இருந்தும் ஜாதி, மத பாகுபாடின்றி இங்கு வந்து மருத்துவம் பார்த்தனர்.  பின்னர், ரோட்டரி, அரிமா சங்கம் போன்றவற்றின்  நிதி மற்றும் மருத்துவ உதவிகளும் கிடைத்தன. க்ளினிக்கல் லேப், எக்ஸ்ரே என விரிவுபடுத்தினோம்.

ராவ் மருத்துவமனை உரிமையாளர் மேஜர் ராவ்,  அவரது மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்ய இடமளித்தார். 10 மருத்துவர்களுடன் ஆரம்பித்து, ஐந்து வருடத்தில் 75 மருத்துவர்களானோம். கோவை பிஎஸ்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார மையம் ஆரம்பித்து எங்களுடன் இணைந்து கொண்டன. 9 ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் தினமும் ஆயிரம் பேருக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினோம். பின்னர், காஞ்சி சங்கராச்சாரியார், “ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, மருத்துவ மையம் தனியாக இயங்கட்டும்” என்றார். எனவே,  ஸ்ரீகாஞ்சி காமகோடி மெடிக்கல் டிரஸ்ட் ஆரம்பித்தேன்.

கண் மருத்துவமனை

1985-களில் தமிழ்நாடு அரசு சார்பில், கிராமம் மற்றும் நகரங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் நிறைய அமைந்தன. அரசு செய்வதையே நாமும் செய்ய வேண்டாம், ஏதேனும் சிறப்புப் பிரிவு எடுத்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம். அப்போதுதான் கண் மருத்துவம் தேர்ந்தெடுத்தேன். அதற்கு இரண்டு காரணங்கள்.  கண் மருத்துவத்துக்கு இந்தியாவில் அதிக தேவை இருந்தது.

உலகில் கண் பார்வை இழந்தவர்களில் 3-ல் ஒருவர்  இந்தியாவில்தான் உள்ளனர். மேலும், பார்வை இல்லாதவர்களுக்கு, பெரும்பாலும் அதை சரி செய்துவிடலாம் என்பதுகூட தெரியாமலே இருந்தது. கண்ணுக்குப் பார்வை கொடுப்பதால்,  ஒரு நோயாளிக்கு உடனடியாக அவர் வாழ்வில் மாற்றம் ஏற்படுவதை கண் கூடாக பார்க்கலாம்.

கண் மருத்துவமனை கட்ட வேண்டும் என்றவுடன், எங்களது குடும்ப நண்பர் நடராஜன் ஐந்தரை ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கினார். மேஜர் ராவ், ஜி.வி.ஈஸ்வர், பண்ணாரி சுகர்ஸ் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரும் உதவினர்.

மக்கள் பங்களிப்புடன் தொடங்கிய சங்கரா கண் மருத்துவமனை மூலம் ஏழை, கிராமப்புற மக்களுக்கு தரமான கண் சிகிச்சை வழங்கிவருகிறோம். இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தற்போது வரை ஈடுபாட்டுடன் இருக்கிறார் என் மனைவி.

எங்கள் நிறுவனத்தில் 30 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிவோர் ஏராளம். இங்கு செய்வது வேலையல்ல, சேவை என்று புரிந்துள்ளனர். நம் ஊழியர்கள் பிறரிடம் மரியாதையாகவும், அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்றால், ஊழியர்களிடம்  முதலாளி மரியாதையும், அன்பும் செலுத்த வேண்டும். எனவே, மருத்துவர்கள் முதல், அடிமட்ட ஊழியர்கள் வரை ஒரே நோக்கத்துடன் செயல்படுமாறு எங்களுடைய பணி கட்டமைக்கப்பட்டுள்ளது.

கண் தானம்

கண் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருந்தாலும், பற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது. எனவேதான், தொடக்கம் முதலே கண் தான விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. விருதுகளும், அங்கீகாரமும், நாம் செய்யும் செயலும், செல்லும் பாதையும் சரியே என்பதை உணர்த்துகின்றன. அடுத்த தலைமுறையினரை மகத்தான சேவைகளில் ஈடுபட இது உந்துதலாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x