Published : 24 Jan 2019 06:09 PM
Last Updated : 24 Jan 2019 06:09 PM
தைப்பூசத் திருநாளன்று கோவை சிரவை ஆதீனம் கெளமார மடாலயத்தில் உள்ள தண்டபாணி கோயிலில் `உள்ளி விழவு` எனும் பெருஞ்சலங்கை ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தீரன் சின்னமலை விளையாட்டு மைய அறக்கட்டளை, கொங்கு பண்பாட்டு மையம் இணைந்து இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதென்ன உள்ளி விழவு?
அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் வீதி உலாவுக்குத் தயாராக நிற்கிறார். தும்பைப் பூ வெள்ளையில் வேஷ்டி-சட்டை தரித்து, தலையில் காவித் துண்டால் முண்டாசும், காலில் கனத்த மணிகளை உடைய சலங்கையும் கட்டிய இளைஞர் கூட்டம் அணிவகுத்து நிற்கிறது. இலைவடிவ தோலில் கோர்க்கப்பட்டிருந்தன சலங்கைகள். வழக்கமான பரதநாட்டிய சலங்கை மணிகளை விட ஐந்து மடங்கு பெரிய மணிகள். ஒவ்வொரு சலங்கையும் சுமார் 3.5 கிலோ எடையுள்ளவை.
முருகனுக்குரிய படையல் காணிக்கைகளை சுமந்து தேரை நெருங்குகிறார்கள் பெருஞ்சலங்கை இளைஞர்கள். தேரில் வீற்றிருக்கும் உற்சவ மூர்த்திக்குப் பூஜைகள் செய்யப்பட்டு, கொம்பு முழங்க, எக்காளம் ஒலிக்க, மேள தாளங்கள் இசைக்க தேர் புறப்படுகிறது. ஊர் மூத்தார் வாளெடுத்து கொடுத்து, பெருஞ்சலங்கை ஆட்டத்தை தொடங்கிவைக்கிறார்.
மொடா மொத்தளம், நகரா, கொம்பு, அளிக்கிச் சட்டி, தவில், கனக தப்பட்டை உள்ளிட்ட பாரம்பரிய இசைக் கருவிகள் இசைக்க, இளைஞர் குழாம் ஒத்திசைந்து கால்சலங்கையை அசைத்தபடி ஒயிலாக நடனமிடத் தொடங்குகிறார்கள்.
தேவராட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய நடன அசைவுகளை ஞாபகமூட்டுவதுபோல இருந்தாலும், பெருஞ்சலங்கையாட்டம் தனித்துவ மானது. அனைத்து மணிகளும் சேர்த்து எழுப்பும் ஒலியின் லயம், மணியணிந்த ஆயிரக்கணக்கான மாடுகள் புல்சரிவில் ஆவேசத்துடன் ஓடும் இசையலையை உருவாக்குகிறது.
இங்கிலாந்தில் ஆங்கிலேயர்களுக்கு முன் வாழ்ந்த கெல்டிக் பூர்வகுடிகளின் மாரிஸ் (Morris) நடனத்தின் சலங்கையும், ஆடும் முறையும் நம் உள்ளி விழவை அப்படியே ஒத்திருப்பது ஆச்சரியகரமான ஒன்று.
அழிந்து வரும் கலை
உள்ளி விழவு கொங்கு மண்டலத்தின் மிக முக்கியமான நாட்டார் கலைவடிவங்களுள் ஒன்று. ஆனால், இன்று ஏறத்தாழ அழிவின் விளிம்பில் இருக்கிறது. ஊளி எனும் சொல்லுக்கு பேரோசை என்பது பொருள்.
ஊளி என்பது மருகி உள்ளி என்றாயிருக்கலாம். விழவு என்றால் விழா அல்லது பண்டிகை. குளிர் காலத்தையொட்டி வரும் வசந்தவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும், ஆவணி அவிட்டம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களின்போதும் உள்ளி விழவு நடனம் நடைபெற்று வந்துள்ளதை பல்வேறு சங்க இலக்கியங்களின் வழியாக அறியமுடிகிறது. ‘கொங்கர் மணி அரை யாத்து மறுகில் ஆடும் உள்ளி விழவு’ என, கொங்கர் கோர்த்த மணிகளைக் கட்டிக்கொண்டு ஆடும் நடனம் என்கிறது அகநானூறு.
`உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே` என சேரர் தலைநகரம் வஞ்சியில் உள்ளி விழவு நடனம் நிகழ்ந்ததைச் சித்தரிக்கிறது நற்றிணை. சங்க கால காதலர் விழா நடனம் இது என்றும், ஊளி விழா என்பது காமன் பண்டிகையே என்றும் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் சான்றுகளுடன் குறிப்பிடுகிறார்கள்.
இத்தனை சரித்திரத் தொன்மம் கொண்ட இந்த பாரம்பரியக் கலை தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. கொங்கு பண்பாட்டு மையம் எனும் அமைப்பு, அழிந்து வரும் இக்கலையை மீட்டெடுக்கப் பாடுபடுகிறது. இளைஞர்களை ஒன்று சேர்த்து, ஆட்டக் கலைஞர்களைக் கொண்டு பயிற்சியளிக்கிறது. மேலும், விழாக்களில் நடனமாடி, இளம் தலைமுறையினரிடம் இந்த கலை வடிவத்தைக் கொண்டு சேர்க்கிறது இம்மையம். கலாச்சார திருவிழாக்களின் வழியாக, இக்கலை பிற பண்பாட்டைச் சேர்ந்தவர்களையும் சென்றடைகிறது.
உலகமயமாக்கலும், தொழில் நுட்பமும், வெகுஜன ஊடகங்களும் பண்பாட்டு அடையாளங்களை வேட்டையாடி வரும் சூழலில், கலை களைத் தக்கவைக்கும் இதுபோன்ற முயற்சிகள் போற்றுதலுக்குரியவை என்கிறார்கள் கலையார்வலர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT