Published : 28 Jan 2019 03:54 PM
Last Updated : 28 Jan 2019 03:54 PM

சீவி முடித்து சிங்காரித்து: ஆச்சர்யமூட்டும் மன்னார்குடி செங்கமலம்

சிறு வயதில் நம்மை தலை சீவி, சிங்காரித்து பள்ளிக்கு அனுப்புவாள் தாய். பெண்கள் தலை சீவாமல் திரிந்தால், `ஏன் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு சுற்றுகிறாய்?` என்று திட்டு வார்கள். இதெல்லாம் கொஞ்சம் மாறினாலும், பொதுவாக தலை சீவாமல் நாம் வெளியில் செல்வதில்லை. 

இது மனிதர்களுக்கு மட்டும்தானே? ஆனால், மேட்டுப்பாளையத்தில் ஒரு யானையை தலைசீவி, சிங்காரித்து அழைத்துச் சென்ற பாகனைப் பார்த்தபோது வியப்பு தாங்கவில்லை.

பொதுவாக, நம் நாட்டில் வாழும் யானைகளுக்கு தலையில் ரோமங்கள் இருக்காது, அப்படியே இருந்தாலும், மிகச்சிறிய அளவிலேயே அவை காணப்படும். ஆனால்,  மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்குச்  சொந்தமான செங்கமலம் என்ற பெண் யானைக்கு தலை நிறைய முடி! அதிலும் தினசரி அதை சீவி சிங்காரிப்பது அவசியம் என்னும் அளவுக்கு அடர்த்தியாக நீண்டு,  கூந்தலைப்போல இருப்பது காண்போரை ஆச்சரியப்படுத்துகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டியில், பவானி  ஆற்றங்கரையோரம் நடைபெறும் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமில் இந்தக் காட்சியை காணமுடிகிறது. இங்கு, அழகிய முடியுடன் காட்சியளிக்கும் செங்கமலம் யானைக்கு ரசிகர்கள் அதிகம். முகாமைப் பார்வையிட வரும் பொதுமக்கள் பலரும், வித்தியாசமாகவும் அழகுடனும் காட்சியளிக்கும் செங்கமலத்தை காணவே பெரிதும் விரும்புகின்றனர்.

இதனால், முகாமில் தற்போதுள்ள 27 யானைகளில் செங்கமலமே திரை நட்சத்திரக்  கதாநாயகிபோல முகாமுக்குள்  வலம் வருகிறது, தனித்த கவனமும் பெறுகிறது.

காலையில் சற்று வெயில் ஏறியவுடன், `ஷவர்பாத்` குளியலுக்காக `செங்கமலம்` கொண்டு செல்லப்பட்டு, வழக்கமான யானைகளைப்போல நீராட வைக்கப்படுகிறது. பின்னர், அங்கேயே இந்த யானையைப் படுக்க சொல்லும் அதன் பாகன்  ராஜகோபாலின் உத்தரவுக்கு ஏற்ப, தரையில் தலை சாய்த்துப் படுத்துக்கொள்கிறது.

இதையடுத்து, பெண்கள் எப்படி தங்களது கூந்தலைத் தனியே கழுவி நளினமாக சுத்தப்படுத்துவார்களோ, அதேபோல செங்கமலம் யானையின் தலையில் நீண்டு தொங்கும் கூந்தலுக்கு பிரத்யேகமாக ஷாம்பூ பயன்படுத்தி நுரை பொங்க தேய்த்துக்  கழுவப்படுகிறது. பின்னர், வழக்கமாக தலைக்கு குளித்த பெண்கள் செய்வதுபோல வெயிலில் சற்று நேரம் கோதிவிட்டு, அதன் கூந்தல் காய வைக்கப்படுகிறது. தொடர்ந்து, சிக்கல் விழாமல் நேர்த்தியாக சீவி விடப்படுகிறது.

ஏற்கெனவே இதன் தலைமுடி `பாப் கட்டிங்` ஸ்டைலில் வெட்டிவிடப்பட்டுள்ளதால், அதன் கூந்தல் முடி நெற்றியில் விழும்படி அழகாக சீவிய பின்னர்,  முக அலங்காரம் தொடங்குகிறது.

"பிற யானைகளை விட அழகாக காட்சியளிக்க வேண்டும் என `செங்கமலம்` விரும்புவதால்தான்,  தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் இந்த குளியல் மற்றும் சிகை அலங்காரத்துக்காக முழு ஒத்துழைப்பு தந்து, ஆடாமல் அசையாமல் சொன்ன பேச்சைக்கேட்டு  ஒத்துழைக்கிறது" என்கிறார் அதன் பாகன் ராஜகோபால்.

"யானை செங்கமலத்தின் தலைமுடியை பராமரிக்க தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. எந்த காரணத்துக்காகவும், அதன் முடியை அதுவே துதிக்கையால் பிய்த்து எறிந்துவிடாமல் இருக்க தனி பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. முகாமில் உள்ள பிற பெண் யானைகள், செங்கமலத்தின் தலையில் உள்ள ரோமத்தை ஆச்சரியமாகப் பார்த்து வருடிக்  கொடுக்கும்" என்கிறார் பெருமிதத்துடன்.

மாமூத் வகையின் பரிணாம மிச்சமா?

அதிசயிக்கத்தக்க வகையில் தலையில் நீண்ட ரோமங்களுடன் காணப்படும் இந்த யானை குறித்து வனத் துறையின் விலங்கியல் மருத்துவர் மனோகரனிடம் கேட்டோம். “பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் வாழ்ந்து வரும் யானைகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் காலமாற்றத்தில், தற்போது ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள் மட்டுமே மீதமுள்ளன. முன்னொரு காலத்தில் சைபீரிய பனிப்  பிரதேசங்களில், உடல் முழுக்க ரோமங்களுடன் `மாமூத்` என்னும் வகை யானைகள் இருந்ததாக ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன் பரிணாம மிச்சத்தில் இதுபோல சில யானைகளுக்கு உடலில் ரோமங்கள் இருக்கலாம். யானைகளுக்கு பொதுவாக உடலில் நீண்ட முடிகள் இருக்காது. கடலில் வாழும் உலகின் மிகப்பெரிய உயிரினமான திமிங்கலத்தின் வகையாகவே, நிலத்தில் வாழும் மிகப் பெரிய உயிரினமான யானைகள் தோன்றின என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த யானைக்கு இப்படி முடி இருப்பது கொஞ்சம் ஆச்சரியம்தான்" என்றார். எது எப்படியோ? செங்கமலம் யானை தனது சிகை அழகால் பலரையும் கவர்ந்திழுத்து வருகிறது என்பதே உண்மை.

யானைகளுக்கும் டி.என்.ஏ. பதிவு!

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடைபெறும் முகாமில், 27 யானைகள் பங்கேற்றுள்ளன. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில், யானைகளுக்கு சத்தான உணவு, அவற்றுக்குப் பிடித்தமான கரும்பு உள்ளிட்ட பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு, நடைபயிற்சி, பவானியாற்று நீரில் ஷவர்பாத் குளியல், பூரண ஓய்வு, பிற யானைகளோடு விளையாட்டு என புத்துணர்வுக்கான பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

யானைகளுக்கு ஏற்படும் சிறு பிரச்சினைகள் கண்டறியப்பட்டு,  உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், யானைகளின் டி.என்.ஏ.  மாதிரிகளை பதிவு செய்ய முடிவுசெய்து, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து வந்த  டாக்டர் சங்கர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், டி.என்.ஏ.  பதிவுக்காக அனைத்து யானைகளின் ரத்த மாதிரிகளையும் சேகரித்தனர்.

டி.என்.ஏ.வை பதிவு செய்வதன் மூலம், எதிர்காலத்தில் யானைகளின் எந்த ஒரு பிரச்சினைக்கும் இதைப்  பயன்படுத்திக் கொள்ளலாம், மனிதர்களைப் போன்றே ஒவ்வொரு யானைகளின் டி.என்.ஏ.வும் மாறுபட்டவை என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். இதேபோல, ஒவ்வொரு யானையின் உடலில் இருந்தும் ஒரேயொரு ரோமம் மாதிரிக்காக எடுக்கப்பட்டு, மருத்துவப் பயன்பாட்டுக்காக கொண்டு செல்லப்பட்டது.

கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் பெரும்பாலும்,  அசாம், கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்து குட்டியாக வாங்கப்பட்டவையாக உள்ள நிலையில், இந்த டி.என்.ஏ.  பதிவு மூலம் இவற்றின் குணாதிசயம், இயல்பு, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள இயலும் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x