Published : 22 Dec 2018 09:22 AM
Last Updated : 22 Dec 2018 09:22 AM

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடர் சென்னை சிட்டி - ரியல் காஷ்மீர் இன்று மோதல்

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் கோவை நேரு விளையாட்டரங்கில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சிட்டி எஃப்.சி - ரியல் காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.

சென்னை சிட்டி எஃப்.சிஇந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 டிராக்களுடன் 18 புள்ளிகளை குவித்து தொடர்ந்து பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன் தோல்வியை சந்திக்காமல் வலம் வருகிறது.

இந்த நிலையில் சென்னை சிட்டி எஃப்.சி தனது 9-வது ஆட்டத்தில் ரியல் காஷ்மீர் அணியுடன் இன்று மோதுகிறது. இரவு 7.30 மணிக்கு கோவை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்த ஆட்டம் குறித்து சென்னைசிட்டி எப்சி அணியின் பயிற்சியாளர் அக்பர் நவாஸ் கூறுகையில், ‘ஏற்கெனவே நடைபெற்ற ஆட்டங்களில் எங்கள் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளனர். குறிப்பாக தமிழக வீரர்கள், தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் தோல்வியடையாதது, எங்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

ரியல் காஷ்மீர் அணியுடன் மோதும் ஆட்டம், உள்ளூர் மைதானம் என்பதால் எங்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனினும், போட்டியில் வெற்றி பெற கடுமையாகப் போராடுவோம். நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.

ரியல் காஷ்மீர் அணியின் பயிற்சியாளர் டேவிட் ராபர்ட்சன் கூறுகையில், “இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 14 புள்ளிகளைப் பெற்றுள்ளோம். இந்த சீசனில் சென்னை சிட்டி எஃப்.சி பலம் வாய்ந்த அணியாக உள்ளது. எனினும், நாங்கள் கடுமையாகப் போராடி வெற்றி பெறுவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x