Published : 20 Dec 2018 11:15 AM
Last Updated : 20 Dec 2018 11:15 AM
பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான பின்னர், ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகி வென்றவர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், வெகு விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு, சிறப்பாக பேசவும், எழுதவும் செய்கிறார். பந்தநல்லூர் பாணி பரத நாட்டியத்திலும் நிபுணத்துவம் உடையவர். மிகச் சிறந்த இலக்கிய வாசகர். அண்மையில் பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி மாணவர்களிடம், தனது அனுபவங்களையும் ஆர்வங்களையும் பகிர்ந்துகொண்டார்.
“பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியன் சிவில் சர்வீஸஸ் என அழைக்கப்பட்ட தேர்வுகள், தற்போது ‘இந்தியன் அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீஸ்’ என்று அழைக்கப்படுகிறது. கல்லூரி நாட்களில் இந்தத் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல்தான் இருந்தேன். ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. ஆகவே, முடிந்தவரை மிகச் சிறப்பாக படிக்கவேண்டும் எனும் உறுதி இருந்தது.
பொறியியல் பட்டமும், முதுகலை மேலாண்மை பட்டமும் முடித்த உடனே திருமணமாகி விட்டது. ஒரு குழந்தைக்கு தாயும் ஆகிவிட்டேன். கணவருக்கு வெளிநாட்டில் பணி என்பதால், நானும் வெளிநாட்டில்தான் இருந்தேன். பின்னர், ‘ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாரானால் என்ன?’ என்ற எண்ணம் உதித்தது.
‘இந்து’ நாளிதழ் வாசித்தேன்...
தேர்வுக்குத் தேவையான புத்தகங்களை இந்தியாவிலிருந்து வரவழைத்துத்தான் படித்தேன். தேர்வுக்குத் தயாராகுபவர்கள் இந்து நாளிதழை வாசிப்பது அவசியம். வெளிநாட்டில் அந்த வாய்ப்பு இல்லாததால், தினமும் இன்டர்நெட்டில்தான் வாசித்து வந்தேன். எனினும், மிகுந்த கட்டுக்கோப்புடன் நேரம் ஒதுக்கி, முழு மனதுடன் முயற்சித்தேன்.
வீட்டையும், குழந்தையையும் பார்த்துக்கொண்டு, திட்டமிட்டபடி பாடங்களைப் படிக்க மிகுந்த சிரமப்பட்டேன். பல நாட்கள் 2, 3 மணி நேரங்கள் மட்டுமே தூங்க முடியும். என் கணவர் ‘ஏன் இவ்வளவு சிரமங்களை எடுத்துக்கொள்கிறாய்?’ என்று கவலைப்பட்டார்.
`ஐஏஎஸ்` குழந்தை
தாங்க முடியாத தருணங்களில் எல்லாம் நான் எனக்குள் சொல்லிக்கொண்டது ஒன்றே ஒன்றுதான். ‘இன்னொரு குழந்தை இருந்திருந்தால், அதற்கு நேரம் ஒதுக்கியிருக்க மாட்டோமா?’. ஏற்கெனவே ஒரு குழந்தைக்குத் தாயான நான், ஐஏஎஸ் தேர்வை இன்னொரு குழந்தையாக நினைத்துக்கொண்டேன்.
இன்னொரு குழந்தை இருந்தால் அதைப் பராமரிக்க நமக்கு நேரம் உருவாகும்தானே? நேர நிர்வாகம், நமது திட்டமிடல்களை நாமே மதிப்பது, சுய ஒழுங்கு ஆகியவை மிக முக்கியமானது. ஐஏஎஸ் அதிகாரிக்கு இருப்பது வெறும் அதிகாரம் மட்டுமல்ல. அதை மட்டுமே வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது.
தொலைநோக்குப் பார்வை
பொள்ளாச்சியில் நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது, ஏராளமான மரங்களை வெட்ட வேண்டிய நிலை உருவானது. சூழல் ஆர்வலர்கள் மரங்கள் வெட்டப்படுவதை விரும்பமாட்டார்கள். மரங்களை அப்படியே வேரோடு இன்னொரு
இடத்தில் நட்டு வளர்க்க முடியும். ஆனால், அப்படி செய்வதற்குத் தேவையான இயந்திரங்கள், வாகனச் செலவு, நிலம் ஆகியவற்றுக்கான நிதியும் கைவசம் இல்லை. இதையடுத்து, உள்ளூர் அமைப்புகள், சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், தொழில்துறையினர் என அனைவரையும் அழைத்து, உதவிகள் கேட்டோம். அனைவரும் இணைந்ததால், பல மரங்களைக் காப்பாற்ற முடிந்தது. நீண்டகால நோக்கில் எது மக்களுக்கு நல்லது என்பதை உணர்ந்து, பணியாற்றுவதே சரியானது.
ஐஏஎஸ் போட்டித் தேர்வுகளுக்குப் பல லட்சம் பேர் விண்ணப்பித்தாலும், உண்மையான அக்கறையுடனும், கறாரான சுய ஒழுங்குடனும் தேர்வுக்குத்தயாராகுபவர்கள் சில ஆயிரம் பேர் மட்டும்தான். நீங்கள் விரும்பும் சமூக மாற்றத்தை உருவாக்க நினைத்தால், இந்தியாவையே நிர்வகிக்கும் குடிமைப்பணி அதிகாரியாக மாறுவேன் என உறுதி கொள்ளுங்கள்” என நம்பிக்கையுடன் முடித்தார் காயத்ரி கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மாணவிகளின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ!
- என்.திருக்குறள் அரசி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT