

என் மீதான எதிர்பார்புகளை நான் பூர்த்தி செய்துள்ளேன் என்று இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் கூறினார்.
உ.பி. மாநிலம் லக்னோவில் அண்மை யில் நடைபெற்று முடிந்த உலக மகளிர் குத்துச் சண்டைப் போட்டியின் 48 கிலோ எடைப் பிரிவில் மேரி கோம் தங்கம் வென்றார்.
6-வது முறையாக உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் அவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒரு முறை வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில் அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி:
2001-ல் உலக மகளிர் போட்டியில் முதன்முதலாக நான் பங்கேற்றபோது எனக்கு போதிய அனுபவம் இல்லை. அப்போது எனக்கு குறைந்த அளவே திறமை, சாதுர்யங்கள் இருந்தன. ஆனால் இப்போது 2018-ல் நான் பங்கேற்றபோது அதிக போட்டிகளில் பங்கேற்ற அனுபவமும், திறமையும் இருந்தது.
அந்த அனுவபங்களைக் கொண்டு நான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றேன். இந்தப் போட்டியில் நுழையும் என் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதை நான் இப்போது பூர்த்தி செய்துள்ளேன். எந்த ஒரு வெற்றியும், கடுமையான உழைப்பு இல்லாமல் கிடைக்காது. எனவே எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் சரி முழு முயற்சியுடன் வீரர், வீராங்கனைகள் இறங்கவேண்டும். முழு ஈடுபாட்டுடன் இருந்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்.
இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ