Published : 23 Nov 2018 06:58 PM
Last Updated : 23 Nov 2018 06:58 PM

கோவை தினம்: தொலைச்சது ஆத்தை மட்டும் இல்லீங்கோ!

கோயமுத்தூரூ கிழகோடி ஊரு ஒண்டிப்புதூரு. அங்கிருந்து கிழக்கு மோனா பிரிட்டிஷ்காரன் போட்ட தார் ரோட்டுலயே போயி ரெண்டு மைல்  போயி சோத்தாங்கை பக்கமா திரும்பி, மறுக்காவும்  முக்கா மைல் நடந்தா ஒட்டபாளையம் அணைக்கட்டு.

சுத்துப்பத்து நூறு கிராமத்துக்கும் கம்பு, சாமை, கரும்பு, ராகின்னு அமோக விளைச்சல் எடுக்க காரணமான நீர்க்கட்டு. சுத்தி எல்லா பக்கமும் தென்னை, வாழைத்தோப்புகளா மினுங்கும். எல்லாத்துக்கும் மீறி அந்தக் காலத்து இளசுகளுக்கு கொண்டாட்டம் தந்த நீர்ப்பரப்பு.  கத்தாழைக் கிழங்கு, எருமுட்டி, ஸ்கூட்டர் டயரு, டியூப்னு எது கிடைச்சாலும் அதைக் கட்டிட்டு நீச்சல் பழகாத பசங்களே இல்லை. சனி, ஞாயித்துக்கிழமை, மே மாச லீவுல மட்டும் இல்ல, பள்ளிக்கூடத்தை கட் அடிச்சுட்டும், ஒண்ணுக்கு, ரெண்டுக்கு வருதுன்னு வாத்தியார்கிட்ட பொய் சொல்லிட்டும் வந்து அணைக்கட்டுல குதியாட்டம் போடாதவங்களே இல்லை.

அணைக்கட்டுக்கு கீழேயும், மேலேயும் அஞ்சு மைல் தூரத்துக்கு வெங்கச்சாங் கல்லுமேடு, மொட்டைப்பாறை, தோப்புப்பாறை, வண்டிமண்ணு குழின்னு அத்தனையும் நொய்யல் ஆத்து தண்ணி போற வழிதான்.  எனக்கு அம்மாவும், அக்காவும் துணி துவைக்கப் போகும்போது கூடவே போய் பழகிய பழக்கம். மத்த பசங்க மாதிரி நீச்சல்ல போகாம அம்மா மாதிரியே கரையோரமா பாத்து பதனமா உக்காந்து குளிக்கவே பழகிப்போச்சு. அப்படியும் மணிக்கணக்குல ஆனாலும் தண்ணிய விட்டு வர மனுசு வராது. நானும் தம்பியும் இடுப்பழவு ஆழத்துல தவக்கா முக்குளி போடறதுக்கே, ‘அம்மா டேய் பாத்துடா. ஆழத்துக்கு போயிடாதீங்க!’ன்னு கூப்பாடா போடும்.

நீலிக்கோனாம்பாளையம் ஊர்க்கவுண்டர் பய. நாலாங்கிளாஸ் படிக்கும்போது கத்தாழை முட்டியக் கட்டிட்டு பசங்களோட பசங்களா வந்து குதிச்சு மண் எடுத்த கொடங்குல சிக்கி பொணமாத்தான் மீண்டான். அதுலயிருந்து அம்மாவுக்கு பயம்னா பயம். வகுப்புல கண்ணையன், சிவராசு, பாபு, கோயிந்தராசு, செல்வராசு எல்லாரும் ஒட்டபாளையம் ஆத்துல இந்தக்கரைக்கும் அந்தக்கரைக்கும் நீச்சல்லயே போய் திரும்பறதை கதை கதையா சொல்லும்போது பொறாமையா இருக்கும்.

இது ஒரு பக்கம்னா தெரு ஓரமா நெளியற சாக்கடையில மண்புழுவைத் தோண்டியெடுத்து, ரெண்டு காசு தூண்டிலையும் வாங்கி தட்டுக்குச்சியில மாட்டிக்கிட்டு போய் தண்ணியில போட்டா ஜிலேபி கெண்டை, பட்டை கெண்டைன்னு கிடைக்கும். ராத்திரியில் ஒரு வேளை மொளசாத்துக்கு ஆகும். பல பசங்க நீச்சல்ல போய் பாறை வங்குக்குள்ளே கெளுத்தி மீன், மீசை மீன்னு புடிச்சுட்டு வருவாங்க. முள்ளுக்குச்சிய  நீளமா செதுக்கி எடுத்து ஆத்தங்கரையோரம் இருக்கிற வங்குக்குள்ளே விட்டா பால்நண்டு, கொறநண்டுன்னு நாலஞ்சு நண்டுக அதைப் புடிச்சுக்கிட்டே வெளிய வரும். அதுமட்டுமா? தோப்பு நாயக்கர் தோப்புக்குள்ளே போனா ஓசியிலயே இளநீ தண்ணீ கிடைக்கும். அங்கங்கே வான் ஒசக்க நிக்கிற பனை மரங்கள்லயிருந்து உழுந்து கிடக்கிற பனம்பழங்கள் சூப்பி சூப்பி சாப்பிட்டா சக்கரையா இனிக்கும். வந்த பசியெல்லாம் காணாமப்போகும்.

ஆத்தோரமா ஒரு ஊத்து தோண்டி உட்டா போதும். அதுல சுரக்கும் தண்ணீ அமிர்தமா இனிக்கும். அதனால ஆத்துக்குப் போகும்போது குடிக்கத்தண்ணீ கொண்டு போகவேண்டிய தேவையே வந்ததில்ல. வேச காலத்துல அளவா ஓடற தண்ணீ திடுதிப்புன்னு அங்கங்கே குட்டையா தேங்கிடும். சில சமயம் வறண்டும் போய்விடும். அதுவே ஆடி வந்தா செந்தண்ணியா பெருக்கெடுக்கும். ஐப்பசி அடைமழைக்கு சொல்லவே வேண்டாம். ஒரு தடவை ஒட்டபாளையம் அணையில பொங்கிய வெள்ளம் வண்ணாத்தி வள்ளம், ஆணைவாரி பள்ளம்ன்னு பாஞ்சதோட, காமாட்சிபுரம், ஸ்டேன்ஸ் காலனி ஊடுகளுக்குள்ளேயும் நாலு மைல் தூரத்துக்கு நிரவிடுச்சு. அப்பத்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அதை காலளவு வேட்டி மடிச்சுக்கட்டீட்ட வந்து பார்த்தது இப்ப மாதிரி இருக்கு. 

ஆறு வறண்டு கிடக்கிற காலத்துல தொவைக்கிறதுக்கு தார்ரோட்டு கல்லுக்குழி, ஏராட்ரூம் கல்லுக்குழிக்குத்தான் துவைக்கப் போகணும். குட்டை மாதிரி நின்னு கிடக்கிற கல்லுக்குழியில துவைக்கிற துணி ஊழை நாத்தமா நாறும். என்னதான் இருந்தாலும் ஓடற ஆத்து தண்ணியில துவைக்கிற மாதிரி இருக்குமான்னு அம்மா பொலம்பாத நாளிருக்காது.

மேகோட்டு மானத்துல இடி இடிச்சு மின்னல் மின்னினா வெள்ளியங்கிரி மலையில் பேஞ்ச மழை ஆத்துல வெள்ளமா ஓடி ஒட்டபாளையம் அணைக்கு வரும்னு  அம்மா அனுபவ நம்பிக்கை ததும்ப சொல்லுவா. அண்ணன்தான் அம்பர் சைக்கிள் எடுத்துட்டு சொய்ய்ன்னு போய் அதைப் பார்த்துட்டு, ‘அம்மா ஆத்துல செந்தண்ணிதான் ஓடுது. அதுல தொவைக்க முடியாது. ரெண்டுநாள் போகட்டும்!’ன்னு சொன்னதெல்லாம் இப்ப நடந்தது போல் இருக்கு.

அப்படி ஒரு நாள் புதுத்தண்ணு வந்த சூட்டுல அம்மாகூட நானும் தம்பியும், வண்டிமண் குழிக்குப் போயிட்டோம். அம்மாவும், அக்காவும்  துவைக்கிறதுக்கு கல்லு தேடிட்டு இருந்த சமயம். அங்கெ எங்களை விட சின்ன பொடிப் பசங்க ஏழெட்டு பேர் முக்குளி போட்டுட்டு இருந்ததைப் பார்த்து எங்களுக்குள்ளே ஆசை முக்குளி போட்டுச்சு.

நானும், தம்பியும் டவுசரக் கழட்டி வீசிட்டு, ஒரு துண்டை மட்டும் கோவணமா கட்டிக்கிட்டு எகிறிக் குதிச்சுட்டோம். சலசலன்னு ஓடுது தண்ணீ.  அந்தக் கரையோரத்துல ஆள் அளவுதான் ஆழமிருக்கும். அன்னெய்க்குன்னு எப்படி அவ்வளவு ஆழம் ஆச்சோ தெரியலை. தண்ணீயில எட்டிக்குதிச்ச உடனே கால் நிலத்தை தொடலை. உடம்பு மேலேயும் கீழேயுமா போயிட்டுப் போயிட்டு வருது. எனக்கும் அப்பால தம்பீ. வவக்கு, வவக்குன்னு தண்ணீயக் குடிச்சுட்டு மூழ்கி, மூழ்கி வெளிய வர்றது தெரியுது.

அப்புறம்தான் தெரிஞ்சது நாங்க குதிச்சது மண்ணெடுத்த குழின்னு. நீச்சல்ல இருந்த எங்க சோட்டு பசங்க, நாங்க நீச்சல் தெரியாம தண்ணியில சாவுப் போராட்டம் நடத்தறோம்னு புரிஞ்சுட்டாங்க. கரையில நின்னவங்க சிலபேரு ஆத்துக்குள்ளே குதிக்கிறாங்க. முக்குளி போட்டவங்க கைகளை தண்ணீயில வீசி வீசி நீச்சல் எங்களைப் பார்த்து வர்றாங்க. எனக்கோ தண்ணியில அந்தரத்துல மிதக்கிற மாதிரி இருந்தாலும், தம்பி தண்ணியில தவிக்கிற தவிப்புதான் கண்ணுல தெரியுது.

எனக்கு எப்புடி அப்படியொரு துணிச்சல் வந்ததுன்னு தெரியலை. கண்டபடி கையாக்காலை உதறினதுல தம்பி பக்கத்துலயே போயிட்டேன். அவன் அரைஞாண் கயிறோட கோவணமும் மாட்டினதுதான் தெரியும். கரைக்கு நடந்தனா? நீச்சல்ல வந்தனான்னு கருப்பராயனுக்குத்தான் வெளிச்சம். தம்பியும் மீண்டு... நானும் மீண்டு...

அம்மா, அக்கா எல்லாம் கரையில் பதறிப்போய் நின்னாங்க.  ரெண்டு பசங்களையும் அந்த நொய்யலாத்தாதான் காப்பாத்தினான்னு ரெண்டு கையும் எடுத்துட்டு மானத்தைப்பார்த்து கும்பிட்டு கண்ணீர் உட்டுட்டா அம்மா.  அதுக்கப்புறம் நொய்யலாத்துக்குப் போனாலும் அவ்வளவு சுலபமா தண்ணிக்குள்ளே எறங்கிட மாட்டோம். நின்னு நிதானமா, தண்ணியில் , கால் வைத்து, கைவைத்து நீரடி பாத்து பதனமா தவ்வி தவ்வி...

இப்ப அதே நொய்யலாறு சாக்கடை தண்ணியும், சாயத்தண்ணியுமா நாறுது. உப்பும், கசடு களிம்புமா ஒரம்பெடுத்து ஊறுது. மேகோட்டு மானம் பொத்துகிட்டு ஊத்தி வெள்ளியங்கிரி மலையிலிருந்து தண்ணி கரைபுரண்டு ஓடி வந்தாலும் இந்த ஒட்டபாளையம் ஆத்துல மட்டும் நுரைச்சு நொங்கெடுக்கும் ரசாயனத் தண்ணியாத்தான் வருது. எப்பவாச்சும் ஒரு நாள் ஆத்தோரம் போனலே சொறி, சிரங்கு வந்தவன் மாதிரி ஆயிரம் நாள் சொறிஞ்சுட்டு திரியவேண்டி இருக்கு. நாகரீகங்கிற வாழ்க்கை போர்வையில நாம தொலைச்சுது ஆத்தை மட்டும் இல்லீங்கோ ... நம்மளையும், நம்ம சந்ததிங்களையுந்தானுங்கோ. அதுக்கு இந்த நதியை தவிர வேற உதாரணம் வேணும்ங்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x