

கடந்த 15-ம் தேதி நள்ளிரவு வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த ‘கஜா’ புயலால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 7 தமிழக மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்தப் புயலால் 63 பேர் மரணமடைந்ததாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களும் லட்சக்கணக்கில் சேதமடைந்துள்ளன. ஓட்டு மற்றும் கூரை வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏராளமான தன்னார்வலர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்தப் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இன்னும் பல கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள ஆம்பலாபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இயற்கை விவசாயியான இவருக்கு, கவியாழினி என 5 மாத கைக்குழந்தை உள்ளது. ‘கஜா’ புயலால் இவரின் குடிசை வீட்டில் மரம் விழ, கைக்குழந்தையோடு மொத்தக் குடும்பமும் நிவாரண முகாமில் தஞ்சமடைந்தது.
வீட்டை இழந்து, வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கும் தமிழ்ச்செல்வனின் மிகப்பெரிய சோகம், அவருடைய கைக்குழந்தைக்குப் பால் கிடைக்கவில்லை என்பதுதான்.
“தாய்ப்பால் கொடுப்பவர்கள் சத்தான உணவு சாப்பிட வேண்டும். அப்போதுதான் நன்றாகப் பால் சுரக்கும். ஆனால், எல்லாவற்றையும் இழந்து நிவாரண முகாமில் நாட்களைக் கழித்துவரும் எங்களுக்கு, மூன்று வேளையும் ஏதாவது உணவு கிடைக்கிறதா என்பதே மிகப்பெரிய கேள்வி. இந்த நிலையில், சத்தான உணவுக்கு எங்கு போவது? அதனால், போதிய தாய்ப்பால் இல்லாமல் என் குழந்தை கஷ்டப்படுகிறது” என்று தேம்புகிறார்.
பால் பாக்கெட்டுகளை அவ்வளவாக அறியாத கிராமம் இது. தினமும் புதிதாகக் கறந்த பாலை, மாடு வளர்ப்பவர்களிடம் இருந்து நேரடியாகப் பயன்படுத்துபவர்கள் தான் இங்கு அதிகம். ‘கஜா’ புயலால் ஏராளமான மாடுகள் இறந்துவிட, இருக்கும் மாடுகளும் மேய்ச்சலுக்கு நிலமின்றித் தவித்து வருகின்றன. மாட்டுக் கொட்டகைகளைப் புயல் புரட்டிப் போட்டதோடு நின்றுவிடமால், மாடுகளின் தீவனமான வைக்கோல் போர்களையும் சீரழித்துவிட்டது. எனவே, டெல்டா மாவட்டங்களில் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து பாக்கெட் பால் கொண்டு சென்றாலும், மின்சாரம் இல்லாததால் சேமித்து வைக்கும் வசதி இல்லை. குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்காமல் இருந்தால், மூன்று மணி நேரத்துக்குப் பிறகு பால் கெட்டுவிடும். எனவே, குறைவான அளவு பால் பாக்கெட்டுகளே டெல்டா பகுதிகளில் கிடைக்கின்றன. அவற்றையும் நகரங்களில் இருப்பவர்கள் வாங்கிவிடுவதால், கிராமங்களில் இருப்பவர்களுக்குக் கிடைப்பதில்லை.
பால் பவுடரின் விலை அதிகம் என்பதால், தன்னார்வலர்களாலும் தேவையான அளவு தர முடிவதில்லை. தேவை அறிந்து கொடுக்கும் சூழ்நிலையும் இல்லை என்பதால், தேவைப்படுபவர்களுக்குத் தர முடியாமல் போகிறது.
தன்னுடைய குழந்தைக்காக, மின்சார வசதி இருக்கும் நகரத்தில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டில் தற்போது தங்கியுள்ளார் தமிழ்ச்செல்வன். இதனால், நிவாரணப் பொருட்களை வாங்கவோ, வீட்டில் விழுந்த மரத்தை அகற்றவோ அவரால் முடியவில்லை.
“என் குழந்தைக்குத் தேவையான பால் கிடைச்சாலே போதும் சார்” என்று சொல்லும்போதே அவரின் குரல் உடைந்து அழுகைக்குத் தயாராகிறது. ஊருக்கெல்லாம் சோறு போட்டவர்களின் அவலம் எப்போது தீரும்?