Published : 30 Nov 2018 07:25 PM
Last Updated : 30 Nov 2018 07:25 PM

நம்பிக்கை முகங்கள்: 2 ‘லவ் குரு’ ராஜவேல்

டெல்டா மாவட்டங்களை ‘கஜா’ புயல் புரட்டிப்போட்டு 14 நாட்களாகிவிட்டன. இந்தப் புயலால் 63 பேர் மரணமடைந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான மரங்கள் அழிந்துவிட்டன. ஏராளமான ஆடு, மாடுகளும் இறந்துவிட்டன.

டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரங்கள் அழிந்து, எல்லோரையும் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டன. இந்த மரங்கள் அத்தனையையும் மறுபடியும் வளர்த்தெடுக்க முடியுமா என்பது சந்தேகமே.

இந்தத் துயரில் இருந்து அவர்கள் மீண்டெழ, உணவு, போர்வை, பாய் தொடங்கி டெல்டா மக்களுக்கான அத்தனை அத்தியாவசியத் தேவைகளையும் நிறைவேற்றிய தன்னார்வலர்கள், போற்றுதலுக்கு உரியவர்கள். அரசு செய்ய வேண்டிய அத்தனையையும் இந்தத் தன்னார்வலர்கள் தனித்தனியாகவோ, குழுக்களாகவோ செய்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.

எதிர்காலமே கேள்விக்குறியாகி நின்றவர்களுக்கு, துயரில் இருந்து மீள முடியும் என நம்பிக்கை அளித்தவர்கள் இந்தத் தன்னார்வலர்கள் தான். அந்த நம்பிக்கை முகங்களில் முக்கியமானவர் ராஜவேல். ‘ஆர்.ஜே. லவ் குரு’ என்று சொன்னால் உங்களுக்கு எளிதில் விளங்கும்.

திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள கட்டிமேடு - ஆதிரெங்கம் கிராமம் தான் ராஜவேலின் சொந்த ஊர். புயல் கரையைக் கடந்த வேதாரண்யத்துக்கு அருகிலுள்ள ஊர்களில் இதுவும் ஒன்று. ‘கஜா’ புயலால் ஊரிலுள்ள 200 வீடுகள் தரைமட்டமானதைக் கேள்விப்பட்ட ராஜவேல், தன்னுடைய ஊருக்கு உதவிசெய்ய நிவாரணப் பொருட்களைச் சேகரித்துக் கொண்டு சென்னையில் இருந்து சென்றார். தன்னுடைய ஊருக்கு மட்டுமல்ல, பெரும்பாலான ஊர்களுக்கு உதவி தேவை என்பதை அவருக்குக் கள நிலவரம் உணர்த்தியது.

வீட்டை இழந்து, உடைமைகளை இழந்து, ஆடு, மாடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கான உடனடித் தேவை உணவும் குடிநீரும்தான் என்பதை உணர்ந்துகொண்ட ராஜவேல், தன் நண்பர்கள் மூலம் சுற்றியிருந்த 12 முகாம்களுக்கும் அரிசியை அனுப்பி வைத்தார். பின்னர் கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உணவுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள, போர்வை, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி என அடுத்தகட்ட தேவையை நோக்கி தன் பார்வையைச் செலுத்தினார்.

புயலுக்குத் தாக்குப்பிடித்த தன்னுடைய வீட்டையே, நிவாரணப் பொருட்களைச் சேகரித்து வைக்கும் இடமாக மாற்றிக் கொண்டார். அங்கிருந்து சுற்றியுள்ள ஊர்களுக்குத் தேவைப்படும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

முதலில் நிவாரணப் பொருட்களை மட்டும்தான் சேகரித்தார் ராஜவேல். பணமாகக் கேட்கும் எண்ணம் இல்லை. ஆனால், யாருமில்லாத பாட்டி ஒருவரின் குடிசை வீட்டைச் சீரமைத்துக் கொடுப்பதற்காக மட்டும் 10 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என முகநூலில் கேட்டிருந்தார். அந்தப் பதிவைப் பார்த்ததும் அவரிடம் இருந்து முதலில் வந்த போன் மலேசியாவில் இருந்து. அங்கிருந்து பேசிய இரண்டு இளைஞர்கள், தாங்கள் பணத்தை அனுப்பி வைப்பதாகச் சொன்னதோடு, அரை மணி நேரத்தில் அனுப்பியும் வைத்தனர். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த இருவரும் அங்கு லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் அல்ல. ஆபீஸ் பையனாக சில ஆயிரங்கள் மட்டுமே சம்பளம் பெறுபவர்கள். உடைந்த குரலோடு அவர்கள் பேசியதைக் கேட்ட ராஜவேலுக்கு, அதுவரை அடக்கிக் கொண்டிருந்த மொத்த அழுகையும் வெளிப்பட்டு விட்டது.

இதை அவர் முகநூலில் பதிவிட, அடுத்தடுத்து பண உதவிகளும் கிடைத்தன. இதில் பெரும்பாலானவர்கள் தாங்கள் யார் என்ற விவரத்தைக் கூட அவருக்கு அனுப்பாமல், கணக்கில் பணத்தைச் செலுத்தியுள்ளனர். ‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பேரழகி’ சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் காயத்ரி. அவருடைய தந்தை ஆட்டோ டிரைவர். இப்போதுதான் காயத்ரிக்கு வாய்ப்பு கிடைத்து குடும்பச்சுமையைத் தோளில் சுமக்கத் தொடங்கியிருக்கிறார். அவர் 10 ஆயிரம் பணத்தைக் கொடுக்க, கண்கலங்கி நின்ற ராஜவேலுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் பசி தீர்ப்பதோடு மட்டும் நின்று விடவில்லை ராஜவேல். தனக்குத் தெரிந்த மருத்துவர்களின் உதவியுடன் மருத்துவ முகாம்கள் நடத்தி, மக்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்தியிருக்கிறார். சுத்தமான குடிநீர் அவசியம் என்பதால், தன்னிடம் சேர்ந்த நிவாரணத்தொகையைக் கொண்டு ஒவ்வொரு முகாமுக்கும் வாட்டர் ஃபில்டர்கள் வாங்கித் தந்துள்ளார் ராஜவேல். முகாம்கள் தற்போது கலைக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குத் திரும்பியிருப்பதால், அந்த வாட்டர் ஃபில்டர்களை அரசுப் பள்ளிகளுக்குத் தரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

9 நாட்கள் வேலைக்குச் செல்லாமல் களத்தில் இருந்து மக்களின் துயர்துடைத்த ராஜவேலின் பணி, பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. அவர் சென்னை திரும்பிவிட்டாலும், இன்னும் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தற்போது கூரையிழந்த மக்களுக்காக தார்ப்பாய்களைச் சேகரித்து வருகிறார் ராஜவேல்.

“ஒரு பிரம்மாண்ட பேரழிவை - மற்றொரு பிரம்மாண்ட பேரழிவு மறக்கச் செய்து கொண்டிருக்கிறது. இங்கு எல்லாமே ஒரு வாரம் தான் போல... இன்னொரு புயல் அடித்தால்தான் உங்கள் டைம்லைன்கள் எங்களின் துயரைப்பற்றி பேசுமென்றால், உங்கள் கரிசனங்கள் கேள்விக்குள்ளாகிறது” என்று டெல்டா மக்களின் வேதனையை உரக்கச் சொல்கிறது ராஜவேலின் முகநூல் பதிவு.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x