Published : 23 Nov 2018 06:58 PM
Last Updated : 23 Nov 2018 06:58 PM

கோவையைச் சுற்றி: பார்த்தே ஆக வேண்டிய 11 இடங்கள்

கோவையில் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், மேட்டுப்பாளையம் வனபத்திர காளியம்மன், கல்லாறு பழப்பண்ணை, ஆனைமலை மாசணியம்மன் ஆலயம், ஈச்சனாரி விநாயகர் போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களால் எப்போதும் நிறைந்தே காணப்படுகிறது. அங்கெல்லாம் யாவரும் சென்று வரலாம். அவற்றைத் தவிர்த்து கோவையைச் சுற்றி பார்த்தே ஆக வேண்டிய 11 இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

1. ஆதிகோனியம்மன்

கோவைக்குப் பெயர் காரணியானது கோனியம்மன் கோயில். கோவை ரயில் நிலையத்திலிருந்து கூப்பிடும் தொலைவில் அமைந்திருக்கிறது. கோவை அடர் கானகம் சூழ்வெளியாக இருந்த ஆதிகாலத்தில் இருளர்குலத் தலைவன் கோவன் என்பவன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் பெயரால் கோவன் புத்தூர் என்று வழங்கப்பட்ட ஊர் பின்னாளில் கோயம்புத்தூராகி, கோவையுமாகி சுருங்கி விட்டது. அந்தக் காட்டரசனுக்கு அருள்பாவித்து ஊருக்கே காவல் தெய்வமாக விளங்கிய அம்மன், இப்போது கோவை நகரின் நடுமையத்தில் ஆலயம் எழுப்பி குடி வைக்கப்பட்டிருக்கிறாள். கோனியம்மன் சிற்பம் புதிதாக எழுப்பி வைக்கப்பட்டிருப்பதால் ஆதியில் இருந்த அம்மன் ஆதி கோனியம்மன் என்ற பெயரில் இக்கோயிலுக்கு பின்புறம் மரத்தடியில் வீற்றிருக்கிறாள். கோவைக்கு வரும் பக்தர்கள் மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து அம்மனை தரிசிக்காமல் செல்வதில்லை.

2. மருதமலை

அருள்மிகு தண்டாயுதபாணி வாசம் செய்யும் பக்தி ஸ்தலம். ஆதிகாலத்தில் சித்தர்கள் வாழ்ந்த இடம். இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் இடம். தமிழ் சினிமாவில் சாண்டோ எம்.எம்.ஏ சின்னப்பாதேவர் இக்கோயிலின் அருமை பெருமைகளைக் காட்டியதன் விளைவு உலகப்புகழ் பெற்றது. அப்போதிருந்து இப்போது வரை முருகனின் ஏழாவது படைவீடு என்று பக்தர்களால் போற்றப்படுவது. அதனால் அன்றாடம் பக்தர்கள் கூட்டம் மட்டுமல்ல சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் நிரம்பி வழிகிறது. கோவை ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ தொலைவு. பஸ் வசதி உண்டு. அங்கு சென்று அடிவாரத்தில் இறங்கினால் அங்கிருந்து சுமார் ஆயிரம் படிக்கட்டுக்கள் மலை ஏறிச்சென்று முருகனை தரிசித்து வரவேண்டும். அல்லது அடிவாரத்திலிருந்து தேவஸ்தான பஸ் உண்டு.

3. சிறுவாணி

26cbkk01siruvani-1jfif100 

உலகிலேயே இரண்டாவது சுவையாள நீர் சிறுவாணி. கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த நீர் கேரள- தமிழக எல்லையில் பல்வேறு நீரோடைகள் வாயிலாக வந்து சிறுவாணி அணையில் குவிகிறது. இதன் உபரிநீர் அங்கிருந்து சிறுவாணி ஆறாக கேரளாவுக்குள் நளின நடைபயின்று பவானி நதியில் கலக்கிறது. சிறுவாணி அமைந்திருக்கும் இடம் கேரள பகுதிதான். என்றாலும் இந்தப் பகுதியை தரிசிக்க இரு மாநில டூரிஸ்ட்டுகள் மட்டுமல்ல. வெளி நாட்டவர்களும் படையெடுக்கிறார்கள். ஏனென்றால் இது அவ்வளவு இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம். எனவே சராசரி மக்கள் இங்கே நுழையத் தடை விதித்திருக்கிறது வனத்துறை. உங்களுக்கு யாராவது அரசு நிர்வாகத்திலோ, வனத்துறையிலோ தொடர்பு இருந்தால் அவர்களிடம் அனுமதி பெற்று இந்த ரம்மியமான இடங்களை தரிசிக்கலாம். இந்தப் பகுதியைப் பார்வையிட நீங்கள் செல்லும்போது வனத்துறையினர் இருவரும் துப்பாக்கி ஏந்திய வண்ணம் உங்களுக்கு துணை வருவார்கள். ஏனென்றால் இந்த வழித்தடத்தில் எந்த நேரத்தில் எத்தனை யானைகள் நம்மை மறித்து அட்டகாசம் செய்யும் என்று சொல்லமுடியாது. இதன்தூரம் கோவையிலிருந்து சுமார் 40 கி.மீதான். ஆனால் கடைசி 8 கி.மீ பயண தூரத்தை அடர்ந்த கானகத்தின் வழியே ஜீப் அல்லது வேன் மூலமாகத்தான் கடக்க வேண்டும்.

4. கோவை குற்றாலம்

kovaijfif100 

போகிற வழியிலேயே அமைந்திருக்கிறது கோவை குற்றாலம். விண்முட்ட நிற்கும் நீல மலைகள். அதை மிஞ்சிப் பறக்கும் பஞ்சுப்பொதிகளாய் மேகங்கள். பச்சைக்கம்பளம் போர்த்ததுபோல் அடர்ந்த தேக்கு மரக்காடுகள். அதன் ஊடே ஆங்காங்கே பெருக்கெடுக்கும் நீரோடைகள். சறுக்கி விழும் பேரருவி. சிற்றருவி. அதில் எதில் உங்களுக்கு நனையத் தோன்றுகிறதோ நனையலாம்  ஆடலாம். பாடலாம். ஆனால் கொஞ்சம் மிகவும் கவனமாக ஆட வேண்டும். ஏனென்றால் நீங்கள் நிற்கும் இடம் அத்தனையும் சறுக்கி விடும் பாறைகள். அதில் சறுக்கி பலருக்கு கபாலம் பிளந்த கதைகளும் உண்டு. எப்படியாகினும் சாடிவயல் பஸ்ஸைப் பிடித்து கோவை குற்றாலம் வனத்துறை செக்போஸ்ட்டில் (கோவையிலிருந்து சுமார் 35 கி.மீ. ஒரே அரசு பஸ் செல்கிறது.

டிக்கெட் அதிகபட்சம் போனால் 5 ரூபாயைத் தாண்டாது. ஆனால் வனத்துறை செக்போஸ்ட்டில் தலைக்கு பத்து, இருபது அனுமதிக் கட்டணம் செலுத்த வேண்டும். கேமரா கொண்டுபோனால் அதற்கு சார்ஜ் தனி. அது கன்னாபின்னாவென்று இருக்கும். இந்த செக்போஸ்ட்டிலிருந்து இரண்டு கி.மீ. தூரம் அடர்ந்த காடுகள் வழியே நடந்தால் சோவென்று அருவியின் சப்தம் கேட்கும். அதை மீறி ஆங்காங்கே யானைகளின் பிளிறலும் கேட்கும். அந்த யானைகள் உங்களை துவம்சம் செய்துவிடும் என்று கருதித்தான் வனத்துறை சுற்றுலாப் பயணிகளை இங்கே காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை மட்டும் அனுமதிக்கிறார்கள். இந்த நேரத்திற்கு விரோதமாக நீங்கள் அங்கே இருந்தால் கஜராஜன்களிடம் தப்பிக்க யாரும் கேரண்டி கொடுக்க முடியாது.

5. பூண்டி வெள்ளியங்கிரிமலை ஆண்டவர் சன்னதி

இமயமலை வடகயிலாயம் என்று வழங்கப்படுவது போல் இதற்கு தென்கயிலாயம் என்றும் பெயர் உண்டு. இதற்கும் கோவை மத்திய நகரப் பேருந்து நிலையத்திலிருந்து (30 கி.மீ.) பஸ் உண்டு. சிவராத்திரி. சித்ரா பௌர்ணமி, அமாவாசை  தினங்களில் சிறப்புப் பேருந்துகளும் உண்டு. இதுவும் மலைகள் அடர்ந்த ரம்மியமான காட்டு யானைகள் மிகுந்த பிரதேசம் என்பதால் மாலை ஆறு மணிக்கு மேல் இங்கே நடமாடுவது ஆபத்தானது. என்றாலும் இந்த வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பௌர்ணமியன்று இரவில் ஆண்கள் தடி ஊன்றிக்கொண்டு ஏறுகிறார்கள். கிட்டத்தட்ட செங்குத்தான ஏழு மலைகளைக் கடந்து அங்குள்ள சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு கீழிறங்குகிறார்கள். இதை வருடந்தோறும் நேர்த்திக்கடனாகவே செய்கிறார்கள் கொங்கு நாட்டு மக்கள். மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி நாதரை தரிசித்து விட்டுவரும் வழியிலேயே (இரண்டு கி.மீ. தூரத்திலேயே) ஈஷா யோகா மையம் இருக்கிறது. அங்கே ஏழு கண்டங்களை கொண்ட பிரம்மாண்ட லிங்கம் இருக்கிறது; ஆதியோகி சிலையும் உள்ளது. பார்த்து விட்டு வரலாம்.

6. ஆழியாறு

பொள்ளாச்சி கோவையிலிருந்து 45 கி.மீ. தூரம். அங்கிருந்து சுமார் 20 கி.மீ. ஆழியாறு அணை. வால்பாறை மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் பிரம்மாண்ட அணையையும், அதன் சுற்றுப் பகுதியையும் நீங்கள் முதன்முறையாகப் பார்த்தாலும் கூட ஆஹா இந்த இடத்தை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேனே என்று சொல்லத்தோன்றும். ஏனென்றால் தமிழ்ப் படங்கள் இந்த சுற்று வட்டாரப்பகுதிகளில்தான் அவுட்டோர் எடுக்கப்பட்டு உங்கள் கண்களுக்கு விருந்தாக்கப்பட்டுள்ளன. அணையில் எந்நேரமும் போட்டிங் நடக்கிறது. அதில் ரவுண்ட் சென்றால் அடுத்துள்ள மலைக்குன்று வரை படகில் அழைத்துச் சென்று காட்டுகிறார்கள். அடுத்த பிரம்மாண்ட பூங்கா வெளியில் ஆடிப்பாடி கொண்டாடலாம். உணவருந்தலாம். குட்டித்தூக்கமும் போடலாம்.

7. குரங்கருவி

அதாவது மங்கி ஃபால்ஸ் ஆழியாறிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இதற்கு செல்வதற்கு முன்பு ஒரு கி.மீ. தொலைவில் ஒரு வனத்துறை செக்போஸ்ட் குறுக்கிடும். அங்கே தலைக்கு கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும். கேமராவிற்கு தனி சார்ஜ். அந்த டிக்கெட் இருந்தால்தான் நம்மை அருவிக்குள் அனுமதிப்பார் பால்ஸ் முகப்பில் நிற்கும் வன ஊழியர். உள்ளே சென்றுவிட்டால்- அதிலும் அருவியில் குளித்துவிட்டால் அங்கிருந்து விடுபடவே தோணாதுங்க. இங்கே குளிக்கச்செல்லும் முன்பு உங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். காரில் சென்றிருந்தீர்களென்றால் கண்ணாடிகளை நன்றாக ஏற்றிவிட்டு விடுங்கள். இல்லாவிட்டால் திருடர்களை விட ரொம்ப ஆபத்தானவர்கள் இங்கு கும்மாளமிடும் குரங்குகள். உங்கள் பொருட்களை எடுத்து வாலிபால் விளையாட ஆரம்பித்துவிடும்.

8. காடாம்பாறை அணை

குரங்கருவியிலிருந்து பத்து கி.மீ. தொலைவு அட்டகட்டி. இங்கிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு சென்றால் காடாம்பாறை நீரேற்று அணைத்திட்டம் உங்களை வரவேற்கும். இங்கு செல்ல ஒரே ஒரு பஸ்தான் உண்டு. பரம்பிக்குளம் மற்றும் பல்வேறு சிற்றோடைகளிலிருந்து வரும் நீரைப் பயன்படுத்தி இங்கே மின்சாரம்தயாரிக்கிறார்கள். இங்கு தனியாருக்கு அனுமதி இல்லை. மின்வாரியத்தில் உங்களுக்கு இன்புளூயன்ஸ் இருந்தால் இந்தப் பகுதியையே ஒரு ரவுண்ட் வரலாம். அல்லது போகிற போக்கில் அணைக்கட்டு சுற்றுப்பகுதியைச் சுற்றிவந்தாலே இயற்கையின் அரிய பொக்கிஷங்களை தரிசித்து மிரண்டு போவீர்கள்.

 9. டாப் ஸ்லிப்

cm17Trek-at-TopSlipjfif100 

அதி அற்புத இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம். பொள்ளாச்சியிலிருந்து கிளம்பினால் இரண்டரை மணி நேர பஸ் பயணம். ஊட்டியில் எப்படி முதுமலை யானைகளின் வாசஸ்தலமோ.  அதுபோல இது வால்பாறை மலைகளுக்கு யானைகள் புகலிடமாக விளங்குகிறது. தலைக்கு பத்து ரூபா கொடுத்தால் யானை சவாரி கூட்டிப்போகிறார்கள் வனத்துறையினர். இருபது ரூபாய்க்கு வனத்துறை பஸ்ஸில் அடைத்து காட்டுக்குள் அரிய விலங்குகளைக் காட்டுவதற்காக அழைத்தும் செல்கின்றனர். இது முடித்து கொஞ்ச தூரம் போனால் பரம்பிக்குளம் அணை. இது கேரள - தமிழக எல்லையில் இருக்கிறது. இதுவரை சென்றுவிட்டு நீங்கள் மிருகங்கள் பார்க்காமல் வந்தால் உங்களுக்கு வாழ்க்கையில் காட்டு மிருகங்கள் பார்க்கவே அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இங்கே செல்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணிக்குள் உங்கள் டாப் ஸிலிப் சுற்றுலா திட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வழியெங்கும் யானைகள் மொய்க்க ஆரம்பித்துவிடும். அதைக் கருத்தில் கொண்டு உங்களை டாப் ஸ்லிப்புக்கு உள்ளேயும் வெளியேயும் விடமாட்டார்கள் வனவர்கள்.

10. திருமூர்த்தி மலை

வால்பாறை, டாப் ஸ்லிப்  இயற்கை ரம்மியக்காட்சிகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது உடுமலை திருமூர்த்தி மலை. பொள்ளாச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ. உடுமலை. அங்கிருந்து 18 கி.மீ.  திருமூர்த்தி அணை. இங்கிருந்துதான் உடுமலைக்கு குடிநீர் சப்ளை ஆகிறது. கோவைக்கு சிறுவாணி நீர் அமிர்தம் என்றால், திருமூர்த்தி நீர் உடுமலைக்கு தேன். அப்படியொரு சுவை. அணைக்கு சற்று தள்ளி படகு சவாரிகள் நடக்கிறது.  இங்குள்ள மலைச்சரிவில் அமணலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கிருந்து பொடிநடையாக மலைச்சரிவுகளில் ஏறினால் எண்ணி இரண்டு கி.மீ. தூரத்தில் பஞ்சலிங்க அருவி கொட்டுகிறது. இங்கே கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். இங்குள்ள குகையில் தேங்காய் ஒன்றை உருட்டிவிட்டால் உள்ளே தேங்காய் உடைபட்டு பூஜை மணியோசை கேட்குமாம். அதை நாம் பரிட்சித்துப் பார்க்கவில்லையானாலும் சொல்லக்கேள்வி. அந்தக் குகை பழநிமலை முருகன் சந்நிதானத்திற்குச் செல்லும் குகை என்றும் ஒரு கருத்து உண்டு. ஆனால் யாரும் குகைக்குள் புகுந்து சென்று பார்த்ததில்லை. 

11. பர்லிக்காடு பரிசல் சவாரி

கோவை நகரிலிருந்து சுமார் 50 கி.மீ. பில்லூர் அணை. கோவையின் குடிநீர் ஆதாரங்களில் அடுத்த முக்கியமான அணை. இங்கு வனத்துறையே பரிசல் சவாரி செய்கிறது. அதுவும் எப்படி ஆதிவாசிகள் ஸ்டைலில் குடில் அமைத்து சமைத்துப் போட்டு மக்களை பரிசல் சவாரிக்கு இட்டுச் செல்கிறார்கள் ஆனால், கட்டணம்தான் கொஞ்சம் ஜாஸ்தி. ஆளுக்கு ரூ.300. இதையும் 20 கி.மீ.க்கு அப்பால் உள்ள காரமடை வனத்துறை அலுவலகத்தில் செலுத்தி டிக்கெட் வாங்கவேண்டும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் சவாரி நடக்கும். அப்படி கஷ்டப்பட்டு சவாரி செய்வதற்கு அப்படி என்னதான் இருக்கிறது? அங்கே சவாரி மட்டுமல்ல கொங்கு மக்களின் இஷ்ட உணவுகளான ராகிக் களி, சோளக்களி, கம்மங்கூழு, கம்மஞ்சோறு, ரக்கரிக்குழம்பு, கருவாட்டுக்குழம்பு, மீன் வறுவல் என நாட்டுப்புற உணவுகள் எல்லாம் கிடைக்கிறது. இதை சமைத்துத் தருபவர்கள் இங்குள்ள பழங்குடிகள்.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x