

தமிழ்நாட்டில் உள்ள 540 பொறியியல் கல்லூரிகளில் ஏறத்தாழ 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) பொது கவுன்சலிங் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. பொது கவுன்சலிங் ஜூலை 7-ம் தேதி தொடங்கி 4 வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்து 28 ஆயிரம் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால், வியாழக்கிழமை நிலவரப்படி, 41,485 பேர் கவுன்சலிங்குக்கு வரவில்லை. சராசரியாக தினமும் 30 சதவீதம்பேர் கவுன்சலிங்குக்கு வருவதில்லை. காலியிடங்கள் அதிகரிப்பதன் எதிரொலியாக, தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 540 கல்லூரிகளில் 500-க்கும் மேற்பட்டவை, தனியார் கல்லூரிகள்தான்.
ஒவ்வொரு பாடப் பிரிவிலும் குறைந்தபட்சம் 120 மாணவர்கள் உள்ள கல்லூரிகளில் ஏறத்தாழ 200 ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றக்கூடும். தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பின் ஒரு பாடப் பிரிவில் 300 மாணவர்கள் வரை சேர்த்துக்கொள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதிக்கிறது.
சம்பளம், இன்கிரிமென்ட் குறைப்பு
பொதுவாக, தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஎச்.டி. கல்வித்தகுதி உள்ள பேராசிரியர்களுக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வழங்குகிறார்கள். அட்மிஷன் குறைவாக உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வேலைக்காக வேறு கல்லூரிக்கு மாறுவது குறித்து சிந்திப்பது இயல்பு. சம்பளம் குறைந்தால்கூட அவர்கள் கவலைப்படப்போவதில்லை.
இந்த நிலையில், குறைந்த சம்பளத்தில் பிஎச்.டி. கல்வித் தகுதியுடனோ, நல்ல அனுபவத்துடனோ குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்கள் தாரா ளமாக கிடைக்கும்போது, தங்கள் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து அதிக சம்பளம் கொடுக்க வேண்டுமா? வருடாந்திர ஊதிய உயர்வு (இன்கிரிமென்ட்) கண்டிப்பாக போட வேண்டுமா? என்று சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல தனியார் கல்லூரிகளின் நிர்வாகத்தினர் சிந்திக்கத் தொடங்கி விட்டதாக அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினை குறித்து தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, “கல்லூரிக்கு இருக்கும் பெயரைப் பயன்படுத்தி, பல கல்லூரி நிர்வாகத்தினர் இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கிறார்கள். எனவே, ஒரே கல்லூரியில் மாணவர்கள் குவிந்து விடுகிறார்கள். இதனால், மற்ற கல்லூரிகளுக்கு அந்த வாய்ப்பு பறிபோகிறது.
இந்த ஆண்டு சிவில், மெக் கானிக்கல் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் மவுசு ஏற்பட்டிருப்பதால், அவற்றுக்கான இடங்கள் மளமளவென நிரம்பி வருகின்றன. அதேநேரத்தில் மாணவர்கள் சேர அதிகம் ஆர்வம் காட்டாததால், பல கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப் பிரிவுகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.