

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அறிய 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான திறனாய்வு தேர்வு (Achievement Test) ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் மூலம், அரசு, நகராட்சி, நலத்துறை மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துகின்றன.
2014-15 கல்வியாண்டில் 9-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டை அளவிட, அடைவு ஆய்வு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் தமிழ், ஆங்கிலப் பாடங்களை வாசிக்கும் திறன், எழுதும் திறன் மற்றும் அடிப்படை கணிதச் செயல்பாடுகளைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றில் பெற்றுள்ள அறிவைக் கண்டறிந்து, மதிப்பீடு செய்யப்பட உள்ளது.
இந்த அடைவு ஆய்வுக்காக, ஒவ்வொரு வட்டத்திலும் 3 பள்ளிகள் வீதம் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வுக்கான பள்ளிகளின் பட்டியல் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படும். இம்மாதம் 26-ம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணி வரை தமிழ் பாடத்துக்கும், 11.30 முதல் 1 மணி வரை ஆங்கிலப் பாடத்துக்கும், பிற்பகல் 2 முதல் 3.30 மணி வரை கணிதப் பாடத்துக்கும் தேர்வு நடத்தப்படும்.
ஒவ்வொரு பள்ளியிலும் 9-ம் வகுப்பு படிக்கும் 30 மாணவர்களை மட்டுமே தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கான விடைத்தாளிலேயே விடைகளை எழுத வேண்டும். மாநிலம் முழுவதும், ஒரே மாதிரியான வினாத்தாள்களே வழங்கப் படும். அரசு பொதுத் தேர்வுகளைப் போன்றே இத்தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
இத்தேர்வு மூலம் மாணவர்களிடையே புரிந்து எழுதுதல், சொந்தமாக எழுதுதல், சொல்வதை எழுதுதல் (கேட்டல்) ஆகிய அடிப்படைத் திறன்களும் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் இத்தேர்வைச் சிறப்பாக நடத்த, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களை மேற்பார்வையாளர்களாகப் பயன்படுத்திக்கொள்ளவும் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு மாநிலத் திட்ட இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், வில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை ஆகிய 11 வட்டங்களிலும் 33 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு 990 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதேபோன்று, 32 மாவட்டங்களிலும் இம்மாதம் 26-ம் தேதி மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.