Last Updated : 25 Oct, 2018 03:48 PM

 

Published : 25 Oct 2018 03:48 PM
Last Updated : 25 Oct 2018 03:48 PM

சபரிமலைக்கு பெண்கள் செல்வதைத் தடுப்பது வரலாற்று அறிவின்மையின் வெளிப்பாடு: பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பேட்டி

“ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் வாழ்வைச் செம்மைப்படுத்திய சமயம் ஆசீவகம்” என்று சொல்லும் பேராசிரியர் க.நெடுஞ்செழியன், ஆசீவகத்தின் தொல் எச்சங்களையும், இலக்கியச் சான்றுகளையும் தன் தமிழறிவின் துணையுடன் நுட்பமாக ஆராய்ந்தவர். “ஆசீவகமும் அய்யனார் வரலாறும்” என்ற வரலாற்று ஆய்வு நூலை எழுதியவர். தமிழகம் முழுக்க காணப்படுகிற அய்யனார், ஆசீவகத்தின் அடையாளமே என்று சொல்லும் அவர், சபரிமலை அய்யப்பனும் கூட அய்யனார்தான் என்று நிறுவியவர். சபரிமலை பரபரப்பு ஓய்ந்துள்ள நேரத்தில், கொஞ்சம் நிதானமாக அவருடன் உரையாடியதில் இருந்து...

முதலில் ஆசீவகம் பற்றி ஒரு அறிமுகத்தோடு தொடங்குவோமே?

ஆசீவகம் என்பது தமிழர்களின் ஆதிச்சமயம். புராணக் கதைகளைக் கொண்டு கட்டமைக்கப்படாத, அறிவார்ந்த வாழ்க்கை முறை அது. இந்திய சமயங்களின் வரலாற்றில் சரணாகதி கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட முதல் சமயமாகவே ஆசீவகத்தை நாம் கருதலாம். அதற்கு அடுத்து தோன்றிய பௌத்தம், இதே சரணாகதி கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டுதான், “புத்தம், சரணம், கச்சாமி... சங்கம், சரணம் கச்சாமி... தர்மம் சரணம் கச்சாமி...” என்ற முழங்கியது. அதாவது, புத்தனிடம் சரணடைந்தேன், பௌத்த சங்கங்களிடம் சரணடைந்தேன், புத்த தருமத்திடம் சரணமடைந்தேன் என்று அந்த சரணாகதி கோட்பாட்டை அடுத்த எல்லைக்குக் கொண்டுபோனது பௌத்தம். பிற்காலத்தில் சைவம், வைணவம் எல்லாம் இந்த சரணாகதி கோட்பாட்டை வலியுறுத்துவதற்கு மூல ஆதாரமாக இருந்தது ஆசீவகக் கோட்பாடுதான். “சாமியே சரணம் அய்யப்பா” என்ற முழக்கம் கூட அந்த அடிப்படையில் உருவானதுதான்.

அய்யனார்தான் அய்யப்பன் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

ஆசீவகத்தை உருவாக்கியவர் மற்கலிகோசாரர். இவரது மற்றொரு பெயர் அறப்பெயர் சாத்தன். சாஸ்தா என்பது, சாத்தன் என்ற தமிழ்ச் சொல்லின் சமஸ்கிருத வடிவம்தான். வேட்டியை சமஸ்கிருதம் கலந்து வேஷ்டி என்று சொல்வது போல, சாத்தனை சாஸ்தா என்று சொல்கிறோம். ஆசீவகத்தை உருவாக்கிய அறப்பெயர் சாத்தன்தான் இன்று தர்ம சாஸ்தாவாக அழைக்கப்படுகிறார். அவரே கேரளாவில் அய்யப்பன் என்று அழைக்கப்படுகிறார். அய்யனார் கோயிலுக்கு முன்பாக ஆடு, கோழி போன்றவற்றைப் பலியிடமாட்டார்கள். அது சுத்த பூஜையை (கொல்லாமை விரதத்ததை) அடிப்படையாக் கொண்டது. அதுதான் சபரிமலையிலும் கடைபிடிக்கப்படுகிறது.

ஆசீவக வழிபாட்டின் கூறுகளில் ஏதாவது ஒன்று இப்போதும் அய்யனார் வழிபாட்டில் அப்படியே தொடர்கிறது என்று சொல்ல முடியுமா?

18 படிகள் என்பதே பழைய வழிபாட்டு முறையின் தொடர்ச்சி தான். 18 படிகள் என்பவை ஒரு துறவியின் வளர்ச்சியில் ஏற்படக்கூடிய 18 வகையான குற்றங்கள். அந்த 18 குற்றங்களையும் கடந்தவர்கள் அய்யனாராக உயர முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். பசி, நீர்வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய் வாய்ப்படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையறவு ஆகிய பதினெட்டுமே அவர்கள் குறிப்பிடுகிற குற்றங்கள் என்கிறது அய்யனார் பிள்ளைத்தமிழ் பாடல். தென்மாவட்டங்களில் முளைப்பாரி விழா நடைபெறுகிறதே, அதுகூட அய்யனார் வழிபாட்டின் தொடர்ச்சிதான். ஒவ்வொரு அய்யனார் கோயிலிலும் மூன்று வகையான வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டன. அய்யனார் வழிபாடு என்பது அறிவு வழிபாடு. அந்தக் கோயிலில் உள்ள ஏழு கன்னியர் வழிபாடு என்பது வளமை வழிபாடு, அங்குள்ள கருப்புகளுக்கான கிடாவெட்டு என்பது வீரவழிபாடு. இந்த மூன்று வழிபாட்டு முறைகளின் சங்கமம்தான் அய்யனார்கோயில்.

ஆசீவகத்தில் வருகிற கருப்பு ஆடைக்கும், அய்யப்ப பக்கதர்கள் உடுத்துகிற கருப்பு உடைக்கும் உள்ள தொடர்பு என்ன?

ஆசீவக மரபில் பின்பற்றப்பட்டும் கோட்பாடுகளில் ஒன்றான பிறப்புக்கோட்பாட்டை 6 வகையாகப் பிரித்திருக்கிறார்கள். கருப்பு, கருநீலம், பசுமை, செம்மை, பொன் நிறம், வெண்மை, கழிவெண் (பரம சுக்ல) நிறம். கல்லூரிகளில் ஒவ்வொரு இளங்கலைப் பட்டமும் 3 ஆண்டுகள் படிக்க வேண்டியதிருப்பதைப் போல, இந்த ஆறு வண்ணங்களும் தலா மும்மூன்று படிநிலைகளைக் கொண்டுள்ளன. ஆக மொத்தம் 18 படிகள். பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு நிறத்தில் சீருடை இருப்பதுபோல, மும்மூன்று படிகளுக்கு ஒரு நிறம் என்று பிரிக்கப்பட்டிருந்தது. ஆசீவக நம்பிக்கையின்படி, இந்த 18 படிகளையும் கடந்து வீடுபேறடைந்தவர்கள் மூவர் மட்டுமே. ஒருவர் அறப்பெயர் சாத்தன், இன்னொருவர் பூரணர், மூன்றாவது சின்னய்யனார்.

அறப்பெயர் சாத்தன் (மற்கலி) தான் மகாவீரருடன் ஆறு ஆண்டுகள் ஒன்றாகத் தவம் இயற்றி, துறவு நெறி நின்றவர். பின்னர் அவரைவிட்டுப் பிரிந்து தனிச்சமயம் கண்டார். எனவேதான் மகாவீரர் உள்ளிட்ட ஜைனர்கள் மற்கலியை தூற்றவும், இகழவும் செய்தார்கள். தர்ம சாஸ்தாவுக்குத் திருமணமாகவில்லை. பூரணர் திருமணமானவர். அவருக்கு பூரணம், பொற்கலை என்று இரண்டு மனைவியர் உண்டு. மூன்றாவது அய்யனார் பாண்டிய மன்னன் பூதப்பாண்டியனின் படைத்தளபதியாக இருந்தவர். ஒரு போரில் பூதப்பாண்டியன் இறந்துவிட, அவனது மனைவியும் தீப்பாய்ந்துவிடுகிறாள். அவர்களுடைய குழந்தைகளை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி, தலைமறைவாக இருந்து மீண்டும் பாண்டியப் பேரரசு நிலைபெறக் காரணமாக இருந்தவர் இந்த அய்யனார் தான். மூன்று அய்யனார்களில் இவர் இளையவர் என்பதால்தான் அவரை சின்ன அய்யனார் என்கிறார்கள். சின்னய்யன், வீரய்யன், சின்னச்சாமி என்பதெல்லாம் அவரைக் குறிக்கும் பெயர்கள்தான். இவரும் திருமணமானவரே.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஆரம்ப காலத்தில் மூன்று அய்யனார்களுக்கும் கோயில் இருந்திருக்கலாம். இதுபற்றி இன்னும் விரிவான ஆய்வு தேவை. அய்யப்பன் கோயிலுக்கு கருப்பாடை அணிவது, பழனி முருகன் கோயிலுக்கு பச்சை ஆடை அணிந்து செல்வது, நீல நிற ஆடை அணிந்து செல்வது எல்லாம் இதன் எச்ச சொச்சங்கள்தான். பழனி கோயில் உள்பட தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்கள் அய்யனார் கோயிலாக இருந்து பிற்காலத்தில் சிவன், பெருமாள், முருகன் கோயிலாக மாறியவைதான். அய்யப்பனுக்கும், முருகனுக்கும் ஒரு தொடர்பு இருப்பதை இப்போதும் பார்க்க முடியும். அய்யப்பன் கோயிலுக்குப் போகிற பக்தர்கள் முருகன் கோயிலுக்கும் வந்து செல்வார்கள்.

ஆசீவகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் இருந்ததா?

ஆசீவகத்தில் பெண்களும் துறவிகளாக இருந்தார்கள். ஜைன மதத்தில் பெண்களுக்கு வீடுபேறு கிடையாது. அடுத்தடுத்த பிறவிகளில் அவர்கள் ஆணாகப் பிறக்கும் வாய்ப்பு ஏற்பட்ட பிறகுதான் வீடுபேறு அடைய முடியும். ஒரு பெண், பெண்ணாகவே நேரடியாக வீடு பேறு அடைய முடியாது. ஆனால் ஆசீவகத்தில் அப்படியல்ல. கழிவெண் பிறப்பை அடைந்து வீடுபேறடைவர் என்பது ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் பொது. சிலப்பதிகாரத்தில் வருகிற கவுந்தியடிகள் கூட ஆசீவகப் பெண் துறவிதான். கரூர் பக்கத்தில் உள்ள புகழூரில் (காகித ஆலை உள்ள ஊர்) உள்ள சமணப்படுகைகளில், ஆண்களைப் போலவே பெண் துறவிகளுக்கும் தனியாக கற்படுக்கைகள் இருந்திருக்கின்றன.

ஆனால், பெண்கள் அய்யப்பன் கோயிலுக்குச் செல்வதை பந்தளத்து மன்னர் எதிர்க்கிறாரே?

இன்று பல தமிழ்க் குடும்பங்களுக்கு அய்யனார் குல தெய்வமாக இருப்பதைப் போல, அந்த அரச குடும்பத்துக்கும் அய்யனார் குல தெய்வமாக இருந்திருக்கலாம். அதற்காக அய்யனார் அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவர் என்று கருதிவிட முடியாது. பந்தள அரச குடும்பம் உருவாவதற்கு முன்பே, அதாவது கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே உருவான துறவிகள் தான் இப்போது அய்யனாராக, அய்யப்பனாக வணங்கப்படுகிறார்கள். இரண்டாயிரம் ஆண்டாக சபரிமலை கோயில் பந்தள மன்னர்களின் மரபு வழியாகத் தொடர்ந்திருக்கும் என்று சொல்வதற்கு இடமில்லை. இன்றைக்கு அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதற்காகவே அந்தக் கோயில் அவர்களுக்கு உரியது என்றும் சொல்லிவிட முடியாது.

ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலுக்கு இன்றைக்குத் தமிழகத்தோடு தொடர்பே இல்லாத மராட்டிய மன்னர்கள் வழிவந்தவர்கள் தக்காராக இருப்பதுபோல, அவர்களும் இருந்திருக்கலாம். மற்றபடி பந்தள அரச குடும்பத்துக்கும் அய்யனார் வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அய்யனார் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர். எனவே, தான் 1950களில் சபரிமலையில் மீண்டும் அய்யனார் சிலையை நிறுவ வேண்டிய வந்தபோது பந்தள மன்னர் குடும்பத்தினர் தமிழரான பி.டி.ராசனை அணுகினார்கள். சபரிமலை அய்யப்பன் கோயிலில் குழந்தைகளுக்கு முதன் முதலாக சோறூட்டும் நிகழ்ச்சி 1990 வரையில் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு குழந்தையோடு, தாயும் செல்வது வழக்கம். இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது தடை? அய்யனார்களில் ஒருவரான பூரணரே இரு மனைவிகளுடன்தானே இருக்கிறார்?

சபரிமலை கோயிலுக்கு பெண்களை அனுமதிப்பது குறித்து உங்கள் கருத்து?

ஏற்கெனவே நான் சொன்னபடி, மூன்று வழிபாட்டு முறைகளை உள்ளடக்கியது தான் அய்யனார் வழிபாடு. அறிவு வழிபாடு, வளமை வழிபாடு, வீர வழிபாடு. இந்த மூன்று வழிபாட்டிலும் தமிழ்நாட்டில் எந்த வழிபாட்டிலும் பெண்கள் பங்கேற்கத் தடையில்லை. தமிழ்நாட்டில் இப்போதும் சிறப்பாக நடைபெறுகிற முளைப்பாரி, புரவியெடுப்பு போன்ற எல்லா விழாக்களிலும் எல்லா வயதிலும் உள்ள பெண்களும் கலந்துகொள்கிறார்கள். எனவே, சபரிமலைக்குப் பெண்கள் போகக்கூடாது என்று சொல்வது இயற்கைக்கு மாறானது. எனவே, வாய்ப்புள்ள பெண்கள் சபரிமலைக்குப் போவதில் தவறேதுமில்லை. பொதுவாகவே வீட்டு விலக்காகியிருக்கும் பெண்கள் கோயிலுக்குப் போவதைத் தவிர்த்துவிடுவார்கள். அதிலும் கடுமையான விரதத்தை உள்ளடக்கிய அய்யப்பன் கோயிலுக்கு அவர்கள் விலக்கு நேரத்தில் போவார்கள் என்று சந்தேகப்படுவதில் நியாயமே இல்லை. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இந்தியப் பண்பாட்டு வழக்கத்தை அறியாதவர்கள் அல்ல. எனவே, அரசியல் ஆதாயம் தேடாமல் பெண்களை கோயிலுக்கு அனுமதிப்பதுதான் நியாயமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x