

கருப்பு - வெள்ளை முதல் கலர் கலராய் படங்கள்… கேமராக்களில் மட்டும்தான் எடுக்க முடியும் என்ற நிலை மாறி செல்போன்கள்கூட கேமராக்களாக மாறிவரும் காலம். இல்லையில்லை… மாற்றி வரும் தொழில்நுட்பம். ஸ்டாம்ப், நாணயம் என அரிய பொருட்களைச் சேகரிப்போர் ஏராளம்… அவர்களில் ஒருவர், ஆனால் அனைவரிலும் வித்தி யாசமானவர் கேமராக்களின் காதலர் சேகர்.
சென்னை ராயப்பேட்டை மணிக் கூண்டில் இருந்து 200 மீட்டர் தொலை வில் இருக்கிறது. கேமரா ஹவுஸ். பெயருக்கு ஏற்றாற்போல வீட்டின் ஒரு அறை முழுவதும் விதவிதமான கேமராக்கள், லென்ஸ்கள், புகைப் படக் கருவிகள் என ஏராளமாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. 150 ஆண்டுகளுக்கு முந்தைய பெட்டிக் கேமராவில் தொடங்கி இன்றைய டிஜிட்டல் கேமரா வரை இங்கு இருக்கிறது. இதுதவிர காந்திஜியை படம் பிடித்த ‘ஹன்ட்ரட் ஷாட்’ கேமரா, 1961-ம் ஆண்டு நடந்த இந்திய- சீனப் போரை பதிவு செய்த 16 எம்எம் கேமரா, மறைந்த முதல்வர் எம்ஜிஆர், இயக்குநர் எல்.வி.பிரசாத் உள்ளிட்டோர் பயன்படுத்திய கேமராக்கள் இந்த அறையை அலங்கரிக்கின்றன.
மொத்தம் 4 ஆயிரத்து 500 கேமராக் கள், ஆயிரத்து 500 லென்ஸ்கள், பழங்கால என்லார்ஜர்கள், பல்புகள், ஃப்ளாஷ் வகைகள் என புகைப்படக் கருவிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இத்தனையையும் கடந்த 35 ஆண்டுகளாகச் சேகரித்து பாது காத்துவரும் கேமரா காதலரின் பெயர் சேகர்.
உலக புகைப்பட தினம் குறித்து ‘தி இந்து’விடம் அவர் பகிர்ந்துகொண்டது:
முதல் புகைப்படம் பதிவு செய்து 175 ஆண்டுகள் கடந்துவிட்டது. லூயிஸ் டாகுரே என்பவர் 1839-ம் ஆண்டு புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிமைத்தார். இவர் பாரீஸ் நகரத்தின் ஒரு தெருவை புகைப்படமாக பதிவு செய்ததே உலகின் தனிநபர் எடுத்த முதல் புகைப் படமாகும். பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ‘டாகுரியோடைப்’ முறைக்கு ஒப்புதல் அளித்து, இதன் செயல்பாடுகளை 1839-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி ‘ப்ரீ டூ தி வேர்ல்ட்’ என உலகம் முழுவதும் அறிவித்தது.
இதனைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் உலகமெங்கும் ஆகஸ்ட் 19, உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. 20-ம் நூற்றாண் டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றியுள்ளது. வியட்நாம் போரில் பாதிக்கப்பட்டு, உடைகள் எரிந்து, ஆடையின்றி அபய குரல் எழுப்பியவாறு ஓடிவரும் சிறுமியின் புகைப்படம் தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இப்படி புகைப்படங்களுக்கும் வரலாற்றுக்குமான தொடர்பு ஏராளம். யாரிடமாவது பழங்கால கேமரா இருந்தால் தேடிச் சென்று வாங்கிவந்துவிடுவேன். எம்ஜிஆர் பயன்படுத்திய கேமராவை அவர் மறைவுக்குப் பின் 10 ஆண்டுகள் காத்திருந்து ரூ.45 ஆயிரத்துக்கு வாங் கினேன்.
25 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நடந்த பிலிம் டிவிஷன் ஏலத்தில் இந்திய- சீனப் போரில் பயன்படுத்தப்பட்ட மூவி கேமராவை ரூ.5 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். காந்திஜியை படம் பிடிக்க பயன்பட்ட ‘ஹன்ட்ரட் ஷாட்’ கேமராகூட என்னிடம் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு கேமராவுக்குப் பின்னாலும் ஒரு கதை உள்ளது என்றார் சேகர்.