

கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய நாண யங்கள் முதல் 12-ம் நூற்றாண்டு மன்னர் காலத்திய அரிய வகை பொருட்கள்வரை சேகரித்து, அவற்றை 5 தலைமுறைகளாக பாதுகாத்து வருகிறது சிவகாசியைச் சேர்ந்த ஒரு குடும்பம்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அனந்தப்பநாடார் தெருவைச் சேர்ந்தவர் ராஜராஜன் (50). பட்டாசுத் தொழிலுக்கான மூலப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவரது வீட்டின் பெரும் பகுதி நாம் காணக்கிடைக்காத பல அரிய பழங்காலப் பொருட்களால் நிறைந்துள்ளது.
மன்னர் கால பொருட்கள்
12-ம் நூற்றாண்டில் பயன்படுத் தப்பட்ட பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மன்னர்கள் பயன்படுத்திய தங்கம், வெள்ளி, வெண்கலம், செம்பு போன்ற உலோகங்களால் ஆன பொருட்களை 5 தலைமுறைகளாக இவர்கள் சேகரித்து பாதுகாத்து வருகின்றனர்.
12-ம் நூற்றாண்டில் பயன்படுத் தப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட வண்ண வேலைப்பாடுகளுடன் கூடிய நழுங்கு குடம் இன்றும் பளபளப்புடன் காணப்படுகிறது. 14-ம் நூற்றாண்டில் மன்னர்கள் பயன்படுத்திய புதையல் வைக்கும் பானை, மன்னர் குடும்பத்துப் பெண்கள் பயன்படுத்திய வளையல் கள், வைரக்கல் வைக்கும் பெட்டி, 15-ம் நூற்றாண்டில் வெண்கலத்தில் தயாரிக்கப்பட்ட யானை ராணி சிலை, 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்தட்டு, பெண் சிலை, குடஓலை குடம், மதுக்கோப்பை, பணியாரச்சட்டி, வெண்கலத்தாலான ராணியின் கலைநயமிக்க சிறிய பெட்டி, அரசர்கள் பயன்படுத்திய பாக்குப்பெட்டி,16-ம் நூற்றாண் டைச் சேர்ந்த எழுத்தாணி, 17-ம் நூற்றாண்டில் மன்னர்கள் பயன்படுத்திய ரகசியக்காப்பு மோதிரம், நெய் ஜாடி, தண்ணீர் குவளை, அந்தப்புர அழைப்பு மணி, சலங்கை, பால் கென்டி, 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சயனைடு பெட்டி, எலிசபெத் ராணியின் கல் வெள்ளிச் சிலை, மருந்துக் குடுவை, திருக்கு செம்பு, மர நாழி, நகைப்பெட்டி, தூண்டா மணி விளக்கு என சுமார் 80 வகையான அரிய பழங்காலப் பொருட்களை ராஜராஜன் குடும்பத்தினர் தலைமுறைகள் தாண்டி கண்போல் காத்துவருகின்றனர்.
சிறப்புமிக்க நாணயங்கள்
இந்தியாவில் முதன்முதலில் மவுரிய மன்னர் சந்திர ஜனபதா வெளியிட்ட டீ கப் வடிவிலான நாணயம், வட இந்திய மன்னர் வித்ரம் ஜனபதா, சவுராஷ்ட்ரா மன்னர் குஜராத் சுரஸ்டிர ஜனபதி, மவுரிய மன்னர் கரிஷ்பானா, கி.மு. 336-ல் அலெக்ஸாண்டர், கி.மு. 232-ல் அசோகர் ஆகியோர் வெளியிட்ட நாணயம், ராமர், லட்சுமணர், சீதை உருவம் பொறிக்கப்பட்ட மகத மன்னர் குப்தா வெளியிட்ட நாணயம் மற்றும் கர்நாடக மன்னர் வத்ஸா, பெல்காம் மன்னர் குராஸ், குசான் மன்னர்கள், சங்க கால பாண்டியர்கள், சேரர், கொங்கு சேரர், பல்லவர்கள், சாளுக்கிய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களையும் ராஜராஜன் குடும்பத்தினர் பாதுகாத்து வைத்துள்ளனர்.
மேலும், ராஜராஜ சோழனின் சித்தப்பா உத்தமசோழன் கி.பி. 1000-ல் வெளியிட்ட அதிமுக்கிய நாணயம், கி.பி. 1020-ல் ராஜராஜ சோழன் வெளியிட்ட தங்க நாணயம், கி.பி. 1100-ல் ராஜேந்திர சோழன் வெளியிட்ட நாணயம், இலங்கை மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், சிந்து சுல்தான் நாணயம், டெல்லி சுல்தான் நாண யம், சுந்தரபாண்டியன், முகம்மது பின் துக்ளக், விஜயநகர பேரரசு நாணயங்கள், பாபர், ஹூமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், ஔரங்கசீப், ஆலம்கீர் காலத்து நாணயங்கள் என 95 வகையான 1000-க்கும் அதிகமான நாணயங்கள் இவர்களது வீட்டில் பாதுகாப்பாக உள்ளன. ‘நாங்கள் பழங்காலப் பொருட்களை மட்டும் சேகரித்து பாதுகாக்கவில்லை. நமது பண்பாட் டையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து வருகிறோம்’ என பெருமையாகக் கூறும் ராஜராஜன், “எனது முப்பாட்டனார் பாவநாசம், பாட்டனார் அய்யநாடார், தந்தை காளிராஜ் ஆகியோர் பழங்காலப் பொருட்களை தேடி தேடிச் சென்று சேகரித்து பாதுகாத்து வைத்திருந்தனர். இந்தப் பொருட் களை பாதுகாத்து வருங்கால தலைமுறையினர் நமது வரலாற்றை அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்பதில் எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, பழங்காலப் பொருட்கள், பழங்கால நாணயங்கள் எங்கு கிடைத்தாலும் அதை சேகரித்து பாதுகாத்து வருகிறேன்.
எனது மனைவி மஞ்சுளா, மகன் கள் ஆதித்தகரிகாலன், ஆல்வின், அலெக்ஸ்பென்சர் ஆகியோரும் எனக்கு உதவியாக உள்ளனர். இந்தப் பொருட்களை பல்வேறு பள்ளிகளுக்கும் எடுத்துச் சென்று மாணவ, மாணவிகள் நமது வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் கண்காட்சி நடத்தி வருகிறேன்” என்றார்.
வரலாற்று பொக்கிஷங்களை பழைய பொருட்களாக கருதாது தலைமுறைகள் தாண்டி பாதுகாத்து வரும் ராஜராஜன் பரம்பரையினர், இச்சமூகத்துக்கு ஆற்றியுள்ள பணி போற்றுதலுக்குரியதாகும்.