Last Updated : 02 Aug, 2018 08:10 AM

 

Published : 02 Aug 2018 08:10 AM
Last Updated : 02 Aug 2018 08:10 AM

‘ஜிலா கோரக்பூர்’ படத்துக்கு  எதிராக வழக்கு: உ.பி. முதல்வர் யோகியின் வாழ்க்கை வரலாறு எனப் புகார்

‘ஜிலா கோரக்பூர்’ என்ற பெயரில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாறு படமாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் முதல் ‘போஸ்டர்’ (சுவரொட்டி), சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும் பாலிவுட்டில் திரைப்படமாக தயாராகி வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாறும் ஜிலா கோரக்பூர் என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாகத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் சூழலில், ஜிலா கோரக்பூர் படத்தின் முதல் போஸ்டர், கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. தற்போது வைரலாகி வரும் இந்த சுவரொட்டியில், மொட்டை தலையுடன் காவி உடை அணிந்த ஒரு சாது, பின்புறமாகக் கைகட்டி நிற்கிறார். அவருக்கு அருகே கோரக்பூர் பாபா கோரக்நாத் கோயிலின் ஒரு பகுதி வரையப்பட்டுள்ளது. இதில், யோகி ஆதித்யநாத்தை போல் சித்தரிக்கப்பட்டுள்ள சாதுவின் ஒரு கையில் கைத் துப்பாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவே, இந்த சர்ச்சைக்கு காரணமாகும். ஏனெனில், கோரக்நாத் கோயில் மற்றும் அதற்கு சொந்தமான மடத்தின் பீடாதிபதியாக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். இதனால், அந்தப் படம் திரைக்கு வருவதற்கு முன்பாக, உபி பாஜகவின் நிர்வாகியான ஐ.பி.சிங் என்பவர் இந்த திரைப்படம் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஐ.பி.சிங் கூறியதாவது:

இந்தப் படத்தினை தயாரிக்க பணம் கிடைத்தது எப்படி என விசாரணை நடத்தப்பட வேண்டும். இத்திரைப்படத்தின் மூலமாக புண்ணியத் தலமான கோரக்பூரின் பெயரையும் கெடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தப் படத்தை எக்காரணம் கொண்டும் வெளியிட பாஜக அனுமதிக்காது என அவர் தெரிவித்தார்.

லக்னோவின் ஹசரத்கன்சி காவல் நிலையத்தில் ஐ.பி.சிங்கின் புகாரின் அடிப்படையில், ஜிலா கோரக்பூர் படத்தின் இயக்குநரான வினோத் திவாரியின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x