Published : 05 Aug 2018 10:03 AM
Last Updated : 05 Aug 2018 10:03 AM

திருப்பணியால் மீண்ட திருவரங்கம் கோயில்

பெருமையும், தொன்மையும் வாய்ந்தது ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் திருக்கோயில். வைகுண்டத்தின் தத்துவத்தை பூலோகத்தில் உள்ள மக்கள் கண்டு அனுபவிக்கும் வகையில் அமைந்துள்ளதால் இது பூலோக வைகுண்டம் என்றும், வைணவத் திவ்ய தேச திருத்தலங்கள் 108-ல் முதன்மையான தலம் என்றும் போற்றப்படும் பெருமை உடையது.

காவிரி நதியும், கொள்ளிடம் நதியும் மாலைபோல அமைந்திருக்கும் தீவுக்குள் ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 6,31,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோயிலாக இது திகழ்கிறது. திருவெண்ணாழி பிரகாரம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, குலசேகரன் திருச்சுற்று, ஆலிநாடன் திருச்சுற்று, அகலங்கன் திருவீதி, திருவிக்ரமன் திருவீதி, கலியுகராமன் திருவீதி என 7 சுற்றுகளுடன் பரந்து விரிந்த அமைப்பை கொண்டது இத்திருக்கோயில்.

பல்வேறு மன்னர்கள் திருப்பணி...

தென்னகத்தின் மன்னர்கள் பலரால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்ட பெருமையை உடையது திருவரங்கம் ரங்கநாதர் திருக்கோயில். அத்துடன் ஆழ்வார்களில் இருவர் ஆண்டாள், திருப்பாணாழ்வார் மற்றும் பீபி நாச்சியார் ஆகியோர் அரங்கன் திருவடியை அடைந்துள்ளனர். பன்னிரு ஆழ்வார்கள் தனி சன்னதிகள் கொண்டிருப்பதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகையிலும் சிறப்பு பெற்றதாக விளங்குவதும் இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பு. ரங்கநாதரின் கருவறை விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டிருப்பதும், 236 அடி உயரத்தில் ஆசியாவிலேயே மிக உயர்ந்த 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் விண்ணை முட்டி நிற்கும் ராஜகோபுரமும் இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

யுனெஸ்கோ விருது...

ஆசியா - பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளிலிருந்து கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017-ம் ஆண்டில் வழங்கி சிறப்பித்துள்ளது. தமிழகத்திலேயே முதல் முறையாக இக்கோயிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடங்கிய திருப்பணிகள்...

2014-ம் ஆண்டில் இக்கோயிலுக்கு சம்ப்ரோக்ஷணம் செய்ய அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அந்த ஆண்டே ஜூலை மாதத்தில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. திருப்பணிகளை மேற்கொள்ளும்போது எந்த வகையிலும் பழமையின் அழகுக்கு பாதிப்பு நேராதவண்ணம் மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அறநிலையத் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த கண்ணன், தொல்லியல் அறிஞர் கே.டி.நரசிம்மன், அரசு ஸ்தபதி முத்தையா ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் தங்கி கோயிலில் அங்குலம் அங்குலமாக ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு வைணவ அறிஞர்கள், பொறியாளர்கள், ஆன்மிக பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்து திருப்பணியைத் தொடங்கினர்.

15-ம் நூற்றாண்டில் இந்த கோயில் எவ்வாறு இருந்ததோ, அதே தோற்றத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசின் அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

பழமைக்கு இடையூறாக...

கடந்த 300 ஆண்டுகளில், இக்கோயிலில் பழமைச் சிறப்புக்கு இடையூறாக பல கட்டுமானங்கள் பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கோயிலின் உள்ளே ஏராளமான மண் குவியல்கள், செங்கல் கட்டுமானங்கள், குப்பை, மரக்கட்டைகள், புதர்கள் என கட்டுமானமே பலவகைகளில் மாறிக் கிடந்தது. இவை அனைத்தும் கவனமாகக் கணக்கிடப்பட்டு, திருப்பணிக்கான வேலைகள் திட்டமிடப்பட்டன. இக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு.சீனிவாசன் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலரும் அறநிலையத் துறை இணை ஆணையருமான பொன்.ஜெயராமன் ஆகியோர் மிக உறுதியோடு இருந்து, இப்பணியை மேற்கொண்டனர்.

திருப்பணி என்பது கோயில்களில் உள்ள கட்டிட எழிற்கலை மற்றும் நிரம்பி நிற்கும் கலையம்சங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் இருப்பதே ஆகும். கோயிலில் உள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றுக்கு எவ்வித சேதாரத்தையும் ஏற்படுத்தாமல் அவற்றைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்வதுடன், அதை ஆகம விதிகளுக்குட்பட்டு செய்வதும்தான் இதில் முக்கியமானது.

ஆனால், கோயிலில் உள்ள பல்வேறு சன்னதிகளில் எனாமல் பெயின்ட் கொண்டு பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. மேலும், பல்வேறு இடங்களில் தூண்களுக்கிடையே சுவர்களும், மண்டபங்களுக்கு மேலே கைப்பிடிச் சுவர்களும் கட்டப்பட்டு, கருங்கல் சுவர்கள் மீது சிமென்ட் பூச்சுகளும் பூசப்பட்டிருந்தன. இவை அனைத்தும் இந்த திருப்பணியின்போது முற்றிலுமாக அகற்றப்பட்டு, பழைய கோயிலின் வடிவமைப்பு மீட்கப்பட்டு, சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி தற்போது புதிய பொலிவுடன் இன்று காட்சியளிக்கின்றன.

மீட்கப்பட்ட கற்சிற்பங்கள்...

குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் கோயிலின் ரங்கவிலாச மண்டபத்தின் வலதுபுறத்தில் உள்ள வேணுகோபாலன் சன்னதியைச் சொல்லலாம். 11-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ஹொய்சால மன்னர்களின் கட்டிடக்கலையை வெளிப்படுத்தும் இந்த சன்னதியின் கீழ்பகுதி ஏறத்தாழ 4 அடி ஆழத்துக்கு மண்ணில் புதையுண்டிருந்தது. சன்னதியைச் சுற்றியிருந்த மண் முழுவதும் அகற்றப்பட்டு, மண்ணில் புதையுண்டிருந்த பகுதியில் இருந்த மண்டபத்தின் கற்சிற்ப வேலைப்பாடுகள் தற்போது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கோயில் உள் மணல்வெளிப் பகுதிக்கு தெற்கே உள்ள நூற்றுக்கால் மண்டபம் (ஸ்ரீ ஜெயந்தி மண்டபம்) கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது உற்சவர் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இடமாக ஒரு காலத்தில் இருந்தது. காலப்போக்கில் இதை, கோயில் பிரசாதங்கள் தயாரிக்கும் மடப்பள்ளியாக மாற்றி இருந்தனர். திருப்பணியின்போது இங்கிருந்த செங்கல் கட்டுமானங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கோயிலில் உள்ள தாயார் சன்னதியிலிருந்து ஆயிரங்கால் மண்டபத்துக்கு வருவதற்கு தன்வந்திரி சன்னதி, பரமபதவாசல், சந்திர புஷ்கரணி, ராமர் சன்னதி, நடைப்பந்தல், தவுட்ரவாசல் வழியாகச் செல்லும் விதத்தில் பாதை இருந்தது. தாயார் சன்னதி எதிரிலுள்ள கருத்துரை மண்டபத்தின் வழியாக ஆயிரங்கால் மண்டபத்துக்கு செல்வதற்கு ஒரு பாதை இருந்துள்ளது என்பது திருப்பணியின்போது கண்டறியப்பட்டது. புற்களும், புதர்களும் மண்டிக் கிடக்க, ஏறத்தாழ 12 அடி உயரத்துக்கு உருவாகி இருந்த மண்மேடு அகற்றப்பட்டது. இதை அகற்றும் பணியின்போது ஆயிரங்கால் மண்டபத்தை ஒட்டிய பகுதியில், மண்ணில் புதைந்த நிலையில் இருந்த 12 அடி உயரத்தில் வாலை முறுக்கிக் கொண்டு ஓடும் யாைனையின் அழகான சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த சிற்பம் பக்தர்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொலிவுடன் தானிய களஞ்சியங்கள்...

கோயிலின் உள்ளே செங்கமலவல்லி நாச்சியார் சன்னதி வளாகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த 5 பிரம்மாண்ட தானியக் களஞ்சியங்கள் உள்ளன. இவற்றில்தான் கோயில் நிலங்களிலிருந்து கிடைக்கும் தானியங்கள், பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தானியங்களைச் சேமித்து வந்துள்ளனர். ஏறத்தாழ 1,500 டன் தானியங்களை இதில் சேமிக்க முடியும். சேமிக்கப்படும் தானியங்கள் வீணாகாமல் இருக்க சுற்றுப்புற தட்ப வெப்ப நிலையை சமன்படுத்தும் வகையில் பசுஞ்சாணம், கருப்பட்டி, வைக்கோல், பதனீர், பதப்படுத்தப்பட்ட களிமண் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உரிய முறைப்படி அரைத்து கலந்து தானியக் களஞ்சியத்தின் சுவர்களை அப்போது கட்டியிருக்கின்றனர். ஆனால், காலப்போக்கில் போதிய பராமரிப்பு இல்லாததால் இவை சேதமடைந்திருந்தன. இந்த தானியக் களஞ்சியங்கள் அனைத்தும் அதே முறைப்படி மீண்டும் பொலிவுபடுத்தப்பட்டு, இப்போது கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.

கோயிலின் கழிவுகள் கொட்டப்படும் இடமாகவும், புதர் மண்டியும் கிடந்த இடங்கள் அனைத்தும் தற்போது மலர்கள் பூக்கும் நந்தவனமாகவும், சோலைகளாகவும் மாற்றப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

 

vsJPG100 

எளிதான பணி அல்ல...

ரங்கநாதர் திருக்கோயிலின் இணை ஆணையர் பொன். ஜெயராமன் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:

சம்ப்ரோக்ஷணத்துக்காக கோயிலில் உள்ள மண்டபங்கள், சன்னதிகள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி, சீர்செய்வது என்றுதான் முதலில் திட்டமிட்டோம். ஆனால், அறங்காவலர் குழுத் தலைவர் வேணு. சீனிவாசன், அறங்காவலர்கள் மற்றும் வைணவப் பெரியோர்கள், ஸ்தபதிகளுடன் இதுதொடர்பாக விவாதித்தபோது, சில மண்டபங்கள் ஆகம விதிப்படி இல்லாமல் மாறியிருப்பது கவனத்துக்கு வந்தது.

தொல்லியல் ஆய்வாளர்கள், ஸ்தபதிகள் உள்ளிட்டோரைக் கொண்டு ஒருசில இடங்களில் ஆய்வு செய்தபோது, ஏறத்தாழ 10 அடிக்கு மேல் மண் மேடுகள் இருந்தது தெரியவந்தது. இந்த மண்ணை கனரக உபகரணங்கைளக் கொண்டு எளிதாக அகற்றுவதிலும் சிக்கல் இருந்தது. ஏனென்றால், மண்ணுக்கு கீழே என்ன இருக்கிறது, கட்டுமானமா, சிற்பமா என்பது தெரியாது. அவைகளுக்கு சிறு சேதமும் ஏற்படாத வகையில் சிறிது சிறிதாக, கவனத்தோடு பணிகளை மேற்கொண்டு மண் அகற்றப்பட்டது.

கோயிலின் உள்ளேயிருந்து அகற்றிய மண் மற்றும் கட்டுமான கழிவுகள் எவ்வளவு தெரியுமா? 60 ஆயிரம் டன்களுக்கும் அதிகம்! அது மட்டுமல்ல... திருக்கோயிலின் பல சன்னதிகள், மண்டபங்கள், பிரகாரங்கள் உள்ளிட்டவைகளில் தரைத் தளத்தில் பல்வேறு காலகட்டங்களில் போடப்பட்டிருந்த சிமென்ட் பூச்சுகள், டைல்ஸ் உள்ளிட்டவைகள் முற்றிலுமாக பெயர்த்து எடுக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் கோயில்களுக்கே உரிய கருங்கற்கைளக் கொண்டு தரைத் தளமாக அமைத்துள்ளோம்.

தமிழக அரசும், வேணு. சீனிவாசனும்!

இத்தனையையும் கண்ணும் கருத்துமாகச் செய்து முடிக்க உற்ற துணையாக இருந்தது தமிழக அரசு.

மேலும், அறநிலையத் துறை உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பும், கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு.சீனிவாசனின் அளப்பரிய ஆர்வமும், அவரது நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்களின் தன்னலமற்ற பங்களிப்பும் இதைச் சாதிக்க முக்கியமான காரணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. திருப்பணியின்போது நாங்கள் ஆகம விதிகளை மீறிவிட்டதாகவும்,தொன்மையான விஷயங்களை அழித்துவிட்டதாகவும் சிலர் தகவல்களைப்  பரப்பினர், ஒரு சிலர் வழக்குகளும் தொடர்ந்தனர்.

ஆனால், யாராலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு தொன்மையைப் பாதுகாக்கும் வகையில் சில்ப சாஸ்திர அடிப்படையில் பழைமையை மீட்டுருவாக்கம் செய்துள்ளோம் என்பது கண்கூடாகத் தெரிகின்ற உண்மை, என்று ஆகப்பெரும் சரித்திரச் சான்றை சமகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் அடையாளம் காட்டிய பெரும் சேவையைச் செய்த பெருமிதத்துடன் கூறினார்.

 

திருப்பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் கோயிலைப் பார்த்த பக்தர்கள், வைணவப் பெரியோர்கள், பொதுமக்கள், மற்றும் சிற்பக் கலையின் அருமை அறிந்த வெளிநாட்டினர் என அனைவருமே பிரமித்துப் பாராட்டி வருகின்றனர்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x