Published : 03 Aug 2014 08:00 AM
Last Updated : 03 Aug 2014 08:00 AM

ஏழை மாணவரின் மருத்துவப் படிப்புச் செலவை ஏற்றார் ஸ்டாலின்: தி இந்து செய்தி எதிரொலி

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவரின் மருத்துவப் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்து அந்த மாணவரின் மருத்துவர் கனவை நனவாக்கியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கீழ்மொரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் அஜித்குமார். இவர் எஸ்எஸ்எல்சியில் 448 மதிப்பெண்களும், பிளஸ் டூ அரசுப் பொதுத் தேர்வில் 1,148 மதிப்பெண்களும், மருத்துவப் படிப்பில் சேர 196.5 கட்-ஆப் மதிப்பெண்களும் பெற்றிருந்தார். திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் சேர இடம் கிடைத்தும், குடும்ப வறுமை காரணமாக சேர முடியாமல் தவித்து வந்தார் இவர்.

இது தொடர்பாக ‘தி இந்து’வில் ஆக.1-ம் தேதி செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினின் சென்னை அலுவலகத்திலிருந்து தருமபுரி மாவட்ட திமுகவினரை தொடர்பு கொண்டு, அஜித்குமாரின் உண்மை நிலையை விசாரித்து தெரிவிக்க அறிவுரை வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ‘தி இந்து’வில் வந்த செய்தியை உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து மதுரையில் வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு சனிக்கிழமை திருச்சியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த மு.க.ஸ்டாலினை சந்திக்குமாறு அஜித்குமாரின் தாயாருக்கு திமுக தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பா.ராஜபார்ட் ரங்கதுரை, அஜித் குமார் மற்றும் அவரது தாயார் மாதம்மாள் ஆகியோரை அழைத்துக் கொண்டு திருச்சி வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

மாணவர் அஜித்குமாரிடம் பேசிய ஸ்டாலின், “5 ஆண்டுகள் மருத்துவப் படிப்புக்கான செலவை திமுக இளைஞரணி வழங்கும், கவலைப்படாமல் படிக்க வேண்டும்” என்றார். தற்போதைய உடனடி செலவுக்காக ரூ.25,000 ரொக்கத்தை அவர்களிடம் ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர், மாணவரின் தாயார் மாதம்மாள் ‘தி இந்து’விடம் கூறியது:

தனது கணவர் 12 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். அஜித்குமார், அசோக்குமார் என இரு மகன்கள் உள்ளனர். தள்ளு வண்டியில் பலகாரம் விற்பனை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்திலும், நல்ல மனம் படைத்த சிலரது உதவியாலும் படிக்க வைத்து வருகிறேன்.

நேற்று வரை எனது மகனின் மருத்துவக் கனவு கனவாகவே கலைந்து விடுமோ என்று நினைத்து மிகுந்த மனத்தாங்கலில் இருந்தேன். ஆனால், தற்போது படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவரை நாங்கள் வாழ்நாள் வரையில் நினைவுகூர கடமைப்பட்டிருப்போம் என்றார்.

மாணவர் அஜித்குமார் கூறியது:

எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ கிடையாது. அம்மாவின் வருமானத்தில்தான் வசித்து வருகிறோம். படிப்பு ஒன்றுதான் குடும்ப நிலையை உயர்த்தும் என்ற நம்பிக்கையோடு படித்தேன். மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும் சேர முடியாதநிலை இருந்தது. தற்போது எனதுபடிப்புக்கு உதவுவதாக மு.க.ஸ்டா லின் உறுதியளித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது நிலையை வெளியிட்ட ‘தி இந்து’வுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

உதவ முன்வந்த நல்உள்ளங்கள்

‘தி இந்து’ வாசகர்கள் பலரும் மாணவர் அஜித்குமாருக்கு உதவ தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆர்வத்துடன் விசாரித்தனர். பலரும் அஜித்குமாரை தொடர்பு கொண்டு மருத்துவப் படிப்புக்குத் தேவையான புத்தகங்கள், உடைகள், தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவைகளை வழங்க உறுதியளித்துள்ளனர். இதேபோல் ‘உங்கள் குரல்’ மூலம் தொடர்பு கொண்ட ஏராளமான வாசகர்களும் மாணவர் அஜித்குமாருக்கு உதவுவதற்கு முன்வந்தனர். அஜித்குமாரின் தொடர்பு எண் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x