

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் செப். 1-ம் தேதி தொடங்கும் ‘ஆப்’ சீசனுக்காக (2-வது சீசன்) சுற்றுலாப் பயணிகளைக் கவரும்வகையில் தோட்டக்கலைத் துறையினர் 2 லட்சம் மலர் செடிகளை நட்டு வைத்துள்ளனர்.
கொடைக்கானலில் ஆண்டுக்கு இரு சீசன்கள் நடைபெறுகின்றன. முதல் சீசனான கோடை சீசன் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள்வரை காணப்படுகிறது. இந்த சீசனில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வடமாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருவர்.
செப். 1-ம் தேதி முதல் அக்டோபர் வரை 2-வது சீசனில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இயற்கை எழில் மிகுந்த சுற்றுலா இடங்களைப் பார்த்து ரசிக்க அதிக அளவில் வருவர். இந்த இரு சீசன்களில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பிரையன்ட் பூங்காவில் தோட்டக்கலைத் துறையினர் அலங்கார மலர் செடிகளை நடுவர். இந்த செடிகளில், சுற்றுலா பயணிகள் குவியும் சீசன் நாட்களில் பூத்து குலுங்கும் வகையில் பூங்கா தயார் செய்யப்படும். கடந்த கோடை விழா கண்காட்சிக்காக பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கிய ஒரு கோடி மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்திருந்தன.
இந்நிலையில் செப். 1-ம் தேதி ஆப் சீசன் தொடங்குகிறது. இந்த சீசனுக்காக, கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவைத் தயார்படுத் தும் பணியில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதற்காக அவர்கள் பிரையன்ட் பூங்காவில் 2 லட்சம் அலங்கார மலர் செடிகளை நட்டுள்ளனர். இந்த செடிகளில் ஆப் சீசனில் மலர்கள் பூத்துக் குலுங்கும் வகையில் பூங்கா தயார் செய்யப்பட்டு வருகிறது.
அவர்கள் மேலும் கூறியது: ஆர்மண்ட்கேபேஜ், ரெட் கேனாஸ், ஸ்வீட் வில்லியம், பிங் ஆஸ்டர், கேலண்டூல்லா, லூபின் உள்ளிட்ட 10 வகை புதிய மலர் செடிகளை தற்போது நட்டுள்ளோம். இந்த செடிகள், குளிர் காலத்தில் மட்டுமே பூக்கும் தன்மை வாய்ந்தவை. இந்த செடிகளில் செப். 15-ம் தேதிக்குள் மலர்கள் பூத்துக் குலுங்கும். சுற்றுலா பயணிகள் மலர்களைப் பார்த்து ரசிப்பதற்காக பூங்காவை அழகுபடுத்தும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
கடந்த கோடை சீசனில் மலர் களைப் பார்வையிட 6 லட்சம் பார்வை யாளர்கள் பூங்காவுக்கு வந்துள்ள னர். இந்த ஆப் சீசனில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
படகு சவாரி கேள்விக்குறி?
கொடைக்கானல் ஏரியில் சுற்றுலா பயணிகள், குழந்தைகள், படகு சவாரி சென்று எழில்மிகு இயற்கை அழகை கண்டு ரசித்து மகிழ்வர். கடந்த 3 ஆண்டுகளாக கொடைக்கானலில் மழையில்லாததால் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் ஆண்டு முழுவதும் இந்த ஏரி வற்றாமல் காணப்படும். தற்போது ஏரியில் தண்ணீர் குறைந்து உள்வாங்கி வருகிறது. அதனால், ஆப் சீசன் நேரத்தில் இந்த ஏரியில் படகு சவாரி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் ஏரி நிரம்பியது குறிப்பிடத்தக்கது.