Published : 18 Jul 2018 09:30 PM
Last Updated : 18 Jul 2018 09:30 PM

ஆலந்தூரில் கொடூரம்; கை,கால்களை இரும்புக் கம்பியால் கட்டி இளைஞர் எரித்துக் கொலை: வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்

ஆலந்தூரில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை இரும்புக் கம்பியால் கை,கால்களைக் கட்டி பெட்ரோல் ஊற்றித் தீவைத்து எரித்துக் கொன்ற நபர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

சென்னை ஆலந்தூர் எம்.கே.என் சாலை 2-வது தெருவில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் தளத்திலிருந்து குபுகுபுவென புகை வந்தது. வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் உரிமையாளர் வெளியே சென்றிருப்பார் என்று எண்ணிய அக்கம் பக்கத்தினர் வீட்டின் வெளியே இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் தீ மேலும் கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஜன்னல் வழியாக தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை போலீஸார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். உள்ளே அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியடைய வைத்தது.

வீட்டினுள்ளே எரிந்து கரிக்கட்டையாக மனித உடல் ஒன்று கிடந்தது. கருகிய நிலையில் கை, கால்கள் கம்பியால் கட்டப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்தது அந்த உடல்.

உடனடியாக போலீஸார் அது யாரென்று விசாரித்தபோது, வீட்டின் உரிமையாளரான முகமது சுல்தான் (40) என்பது தெரியவந்தது. கடந்த இரண்டரை வருடங்களாக சுல்தான் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். பண்ருட்டியைச் சேர்ந்த அவர் ரியல் எஸ்டேட் தொழிலும், வேலையும், மும்பையிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை மொத்தமாக வாங்கி அண்ணா சாலை ரிச்சி தெருவில் வியாபாரம் செய்து வந்துள்ளார். கைகால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்டதால் உடல் முழுவதும் உருத்தெரியாமல் போயுள்ளது. முகமது சுல்தான் எதற்காகக் கொல்லப்பட்டார், தொழில் தகராறா? என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுல்தான் வீட்டுக்கு அடிக்கடி பெண்கள் தனியாக வந்து தங்கிச் செல்வதாகக் கூறுகின்றனர். அதனால் பெண் விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாமோ? என்கிற ரீதியிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகமது சுல்தானைத் தாக்கி இரும்புக் கம்பியால் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளதால், அவருக்கு அறிமுகமான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வீட்டுக்குள் வந்திருக்கலாம், வாக்குவாதம் செய்து முகமது சுல்தானைத் தாக்கி மயக்கமடையச் செய்து, பின்னர் இரும்புக் கம்பியால் கை, கால்களைக் கட்டி எரித்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.

எரித்துவிட்டுச் சத்தமில்லாமல் கதவைச் சாத்தி பூட்டு போட்டுச் சென்றுள்ளனர். தீ வைத்தவர்கள் சில நிமிடங்களுக்கு முன் சென்றிருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் சேகரித்துள்ளனர்.

மேலும் முகமது சுல்தானின் செல்போனையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டமுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் திட்டமிட்டு நடந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x