ஆரோக்கிய வாழ்வினை காப்பது...

ஆரோக்கிய வாழ்வினை காப்பது...
Updated on
2 min read

வாழ்வு என்பது பணத்தை நோக்கிய பயணமாக இருக்கும்போதுதான் நாம் அடுத்தவரை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்சார்பு வாழ்க்கைக்கு அது தேவையில்லை என்கிறார் திருச்சியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் குமார்.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அருகேயுள்ள கும்பக்குடியில் வசிக்கும் 25 வயதான விக்னேஷ் குமார் எம்பிஏ பட்டதாரி. படித்து முடித்தவுடன் ஏதாவது ஒரு வேலைக்கு செல்லுமாறு உறவினர், நண்பர்கள் வற்புறுத்த, “நான் படித்தது என் அறிவு விழிப்படைவே தவிர மற்றவரிடம் வேலைக்கு செல்ல அல்ல” என்று உறுதியாக கூறியவர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறைதான் தற்சார்பு வாழ்க்கை முறை.

இது குறித்து அவர் பகிர்ந்து கொண்டது: காலை யில் எழுந்து பல் துலக்கும் பல்பொடியில் இருந்து இரவு படுக்கும் முன் பயன்படுத்தும் கொசு விரட்டி வரை நாமே தயார் செய்துகொள்வது என்பதே தற்சார்பு வாழ்வு. முதலில் கடினமாக இருந்தாலும் பழகிவிட்டால் மன நிம்மதியும் ஆரோக்கியமும் அளவின்றிக் கிடைக்கும். என் தந்தை துப்பாக்கி தொழிற்சாலை யில் பணி புரிந்து 5 ஆண்டுகளுக்கு முன்இறந்துவிட்டார். அவரது இறப்புக்கு முக்கிய காரணம், முறையற்ற உணவுப் பழக்க வழக்கம் மற்றும் பக்க விளைவு ஏற்படுத்திய மருந்துகள்தான். நாம் பாரம்பரிய உணவு மற்றும் பழக்க முறையில் இருந்து எப்போது மாறுகிறோமே அப்போதே நோய்த் தொற்றுக்கு தயாராகி விடுகிறோம்.

அப்பாவின் திடீர் மரணம் என்னையும் அம்மாவையும் மிகவும் பாதித்தது. ஆனால், அதே நிகழ்வுதான் எங்களை தற்சார்பு வாழ்க்கைக்கு மாற்றியது. வீட்டைச் சுற்றிலும் இப்போது மா, வேம்பு, முருங்கை, நெல்லி, மகிழம், சரக்கொன்றை போன்ற பலன் தரும் நல்ல மரங்கள், தூதுவளை, முடக்கத்தான், பேய்மிரட்டி, ஆவாரம் உள்ளிட்ட பல்வேறு மூலிகைச் செடிகள் செழித்து வளர்ந்துள்ளன.

எந்த நோயும் எங்களை பாதிக்க நாங்கள் அனுமதிப்பதில்லை. அப்படியே ஏதேனும் பாதிப்பு என்றாலும் வீட்டில் வளரும் மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்துகொள்வதோடு சரி. வீட்டில் பெரும்பாலும் சிறுதானிய உணவு வகைகளைத்தான் உண்கிறோம். சமையல் செய்வதற்கு மண் சட்டி,மண் குக்கர் ஆகியவற்றையும் காய்கறி, பழங்களை பதப்படுத்த மண் குளிரூட்டியையும் பயன்படுத்துகிறோம்.

வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில் கிடைக்கும் உவர் மண்மூலம் துணிகளைத் துவைத்துக்கொள்கிறோம். வாழ்வாதாரத்துக்குத் தேவையான தேங்காய் எண்ணெய் குளியல் சோப்பு, முளைகட்டிய பயறுகளால் ஆன சத்து மாவு, சிறுதானிய வகை திண்பண்டங்கள் ஆகியவற்றை நாங்கள் தயாரித்து விற்பனை செய்கிறோம்.

இவற்றை மிக்ஸி, கிரைண்டர் போன்ற எதுவும் பயன்படுத்தாமல் உரல், உலக்கை, அம்மி,திருக்கை ஆகியவற்றால் அரைத்துக் கொள்கிறோம்.

பணம் சம்பாதிப்பதற்காக ஆரேக்கியத்தை இழக்கும் இன்றைய தலைமுறை மக்கள், இழந்த ஆரோக்கியத்தை மீட்பதற்காக, சம்பாத்தித்த பணத்தையெல்லாம் இழக்கின்றனர். எதையும் எடுத்துச் செல்ல முடியாது என தெரிந்தும், ஏன் இப்படி எல்லோரும் பணத்தை நோக்கி ஓடுகிறார்கள் என்று புரியவில்லை.

ஒரு மனிதனுக்கு உணவு,உடை, இருப்பிடம் அத்தியாவசியமான தேவைகள் மற்ற எல்லாம் கவுரவ தேவைகள் தான். அந்த மற்ற தேவைகள் எல்லாம் நம்மைச் சுற்றி யிருப்

பவர்கள் மற்றும் உறவினர்களுக்காக நாம் ஏற்படுத்தி கொள்வது தான். கவுரவ தேவையை ஒழித்தாலே போதும், தற்சார்பு வாழ்வு என்பது அனைவருக்கும் சாத்தி

யமாகும். என்னுடைய சிறிய முயற்சியால், 60 குடும்பங்கள் இயற்கை வாழ்வியல் முறைக்கு மாறியுள்ளன. அதற்கான எல்லா வழிமுறை களையும் கற்றுக் கொடுக்கத் தயார்” என்கிறார் விக்னேஷ் குமார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அனுபவிக்க அனைவரையும் அழைக்கிறார் அவர் செவிமடுப்போம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in