Published : 28 Aug 2014 10:51 AM
Last Updated : 28 Aug 2014 10:51 AM

‘என்னை கொல்லாமல் விடமாட்டார்’: ஆசிட் வீசிய நபர் மீது சுபா அச்சம்

‘என் மீது ஆசிட் ஊற்றிய நபர் அரசியல் பின்புலத்தால் வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கி ஜாமீனில் வெளிவர முயற்சிக்கிறார். அவர் வெளியே வந்தால் என்னை கொலை செய்யாமல் விடமாட்டார்’ என்று மருத்துவமனையில் இருக்கும் சுபா அச்சத்துடன் கூறினார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் சுபா கூறியதாவது:

என் மீது ஆசிட் வீசிய தங்க பாண்டியன், எனது உறவினர் என்று கூறுகின்றனர். அவர் எனது தூரத்து உறவினர்கூட கிடையாது. பக்கத்து ஊர்க்காரர் அவ்வளவுதான். என் தந்தை கொத்தனார் வேலை பார்க்கிறார். அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதால் சரியான வருமானம் இல்லை. குடும்ப சூழல் காரணமாக மாதம் ரூ.1,500 சம்பளத்தில் ஜவுளி கடை வேலைக்கு சென்றேன்.

ஆடி கடைசி வெள்ளியன்று என்னை பெண் கேட்டு தங்கபாண்டியன் அவரது உறவினர்கள் 3 பேருடன் வீட்டுக்கு வந்தார். ‘இப்போதைக்கு எங்கள் மகளுக்கு திருமணம் செய்வதாக இல்லை’ என்று கூறி அவர்களை என் அம்மா அனுப்பிவிட்டார். அதன் பிறகு தங்கபாண்டியனும் அவரது நண்பர் கள் சிலரும் என்னை மிரட்டும் நோக் கத்தில் அடிக்கடி பின் தொடர்ந்தனர்.

இதனால் ஜவுளிக்கடை வேலையை விட்டு நின்றுவிட்டேன். வீட்டில் இருந்தபடியே எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து வந்தேன். சம்பவத்தன்று டியூஷன் குழந்தைகளை அனுப்பிவிட்டு, வெளியில் சென்றபோதுதான் அங்கு பதுங்கியிருந்த தங்கபாண்டியன், என் முகத்தில் ஆசிட்டை ஊற்றி விட்டார்.

ஊர்க்காரர்கள் சிலர், ‘வீரியம் இல்லாத ஆசிட்தானே வீசினான். உயிருக்கு ஒன்றும் சேதம் இல்லையே’ என்று கூறி அரசியல்வாதிகளின் துணையோடு தங்கபாண்டியன் மீதான வழக்கை மாற்றும் நோக்கத் தில் செயல்படுவதாக அறிகிறேன். சிலர் எனது பெற்றோரையும் மறைமுகமாக மிரட்டுகின்றனர். தங்கபாண்டியன் வெளியே வந்தால் என்னை கொல்லாமல் விடமாட்டார்.

இவ்வாறு சுபா கூறினார்.

வினோதினி அறக்கட்டளை நிர்வாகியான ரமேஷ் கூறும்போது, ‘‘வீரியம் குறைந்த ஆசிட்தானே ஊற்றப்பட்டது என்ற வார்த்தையே மிகவும் தவறானது. ஒரு பெண்ணை பயமுறுத்தும் அல்லது கொல்லும் நோக்கத்தில் வெறும் தண்ணீரை ஊற்றுவதுகூட கொலை முயற்சி குற்றமே. உபயோகிக்கப்பட்ட பொருள் எதுவாக இருந்தாலும் வன்முறை, வன்முறைதான். குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக சிலர் பேசி வருவதாக சுபா எங்களிடமும் புகார் கூறியிருக்கிறார். போலீஸ் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்’’ என்றார்.

யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது

நாகப்பட்டினம் வழக்கை விசாரித்து வரும் சீர்காழி போலீஸ் ஆய்வாளர் அப்துல் கபூர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள போலீஸாரிடம் பேசினோம். ‘‘தங்கபாண்டியன் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய் துள்ளோம். இவை தவிர, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜாமீனில் வெளியேவர வாய்ப்பு இல்லை. இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்துவதால் எங்களை யாரும், எதற்காகவும் நிர்பந்திக்க முடியாது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x