Published : 15 Jul 2018 10:42 AM
Last Updated : 15 Jul 2018 10:42 AM

நாடு முழுவதும் 2,000-க்கும் அதிகமான கட்சிகள்; 9 ஆண்டுகளில் இரு மடங்கான கட்சிகள் எண்ணிக்கை: விதிகளை மீறினால் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் கிடைக்குமா?

புதிதாக தொடங்கப்படும் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு, மக்களின் ஆதரவைப் பெற்று, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவது ஒரு பக்கம் இருக்க, புதிதாக பதிவு செய்வதோடு நின்றுவிடும் கட்சிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தில் புதிதாக பதிவு செய்துள்ள கட்சிகள் எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் புதிதாக பதிவு செய்யும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு நாடு முழுவதும் 1,060 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் இரு மடங்காகி உள்ளது. கடந்த ஜூன் 20-ம் தேதி நிலவரப்படி 2,064 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளாக இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய 7 கட்சிகள் உள்ளன. தமிழகத்தில் பல கட்சிகள் இருந்தாலும், அங்கீரிக்கப்பட்ட மாநில கட்சிகளாக அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய 3 கட்சிகள் மட்டுமே உள்ளன.

தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள்தான் பெரும்பான்மையாக உள்ளன. இந்தப் பட்டியலில்தான் பாமக, மதிமுக, விசிக, தமாகா, கமல்ஹாசனால் புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பிறகு, தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் பெற்றால்தான் தேசிய கட்சி அல்லது மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற ஒரு கட்சி முடியும். அதேபோல, தங்கள் கட்சிக்கென குறிப்பிட்ட சின்னத்தையும் கேட்டுப் பெற முடியும்.

பதிவு செய்வது எதற்கு?

இது மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சில சலுகைகளை அளிக்கிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் போது, சுயேச்சையாக போட்டியிடுபவர்களைவிட தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் தேர்தல் போட்டியிட ஒருவர் மட்டும் முன்மொழிந்தால் போதும். அதேபோல, அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளருக்கு அவரது தொகுதியின் இறுதி வாக்களாளர் பட்டியல் நகல் இலவசமாக வழங்கப்படு கிறது.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகள் பிரச்சாரத்தின் போது அதிகபட்சம் 40 நட்சத்திரப் பேச்சாளர்களை பயன்படுத்தவும், ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகள் அதிகபட்சம் 20 நட்சத்திரப் பேச்சாளர்களை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்படுகிறது. நட்சத்திரப் பேச்சாளர்களின் போக்குவரத்து செலவு வேட்பாளரின் தேர்தல் செலவில் சேர்க்கப்படாது.

நிபந்தனைகள் என்ன?

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முக்கியப் பொறுப்பு வகித்த ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநில கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற சில நிபந்தனைகள் உள்ளன. அதன்படி, சட்டப்பேரவை தேர் தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

மக்களவை தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 2 தொகுதிகளில் வெல்ல வெண்டும்.மக்களவை அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியிலோ, 2 சட்டப்பேரவை தொகுதிகளிலோ வெல்ல வேண்டும். அல்லது, 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இதில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால்தான் அங்கீகாரம் வழங்கப்படும்.

தேசிய கட்சி அங்கீகாரம்

அதேபோல, தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட, மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் (11 இடங்கள்) குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். இல்லாவிட்டால், மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்த 2 நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாவிட்டால், 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே தேசிய கட்சி என்ற அங்கீகாரம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரம் வேண்டும்

ஆயிரக்கணக்கில் கட்சிகள் இருந்தாலும், பல கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதோடு சரி; தேர்தலில் போட்டியிடுவது இல்லை. எனினும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படும் கட்சிகளின் பதிவை பின்னர் ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. இதன்காரணமாகவும், கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.

விதிகளை மீறி செயல்படும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரக் கோரி மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் 1998-ல் அனுப்பிய பரிந்துரை கிடப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x