Published : 04 Jul 2018 10:05 AM
Last Updated : 04 Jul 2018 10:05 AM

‘கல்வி துணை’ சிவசுவாமி: அரசுப் பள்ளி மாணவர்களின் ஆபத்பாந்தவன்

ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக்கு துணை யாக நிற்கிறார் 70 வயது சிவசுவாமி. வீட்டில் பாடங்களை சொல்லிதர இயலாத, டியூசன் அனுப்பவும் வசதி இல்லாத பெற்றோருக்கு கைகொடுப்பதற்காக அவர் தொடங்கியது தான் 'கல்வி துணை' மையம். வகுப்பில் பாடம் நடத்தியது போக கூடுதல் கவனிப்பு தேவைப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர இலவச டியூசன் நடத்தி அரவணைக்கிறது இந்த மையம்.

கல்வி துணைக்கு விதைபோட்ட சிவசுவாமியின் தந்தைக்கு ராணுவத்தில் பணி. நெல்லையில் பிறந்தாலும் வளர்ந்தது, படித்ததெல்லாம் வட மாநிலங்களில்தான். ஜபல்பூரில் வேதியியலில் முதுநிலைப் படிப்பும் பிறகு, எம்பிஏவையும் முடித்து, 1972-ல் பன்னாட்டு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 1996-ல் பணியிலிருந்து விலகி, 2 ஆண்டுகள் சொந்த தொழில் செய்தார். நஷ்டம் ஏற்பட, மீண்டும் 1998-ல் சென்னையில் கெவின் கேர் பேக்கேஜிங் இந்தியா நிறுவனத்தின் தலைவராக பணி யில் சேர்ந்தார்.

உழைத்தது வரை போதுமெனத் தோன்றியதால் 2010-ல் கோவை பேரூருக்கு வந்தார். மகன்கள் தனித்தனியே செட்டிலாகிவிட, வீட்டு வேலைகளில் இருந்து தனது மனைவிக்கு ஓய்வு கொடுக்க விரும்பினார். இதனால் பேரூரில் உள்ள முதியோர் காப்பகத் தில் தம்பதி சமேதராக சேர்ந்தார்.

கல்வி, குடும்பம், வேலை என வாழ்ந்தவருக்கு சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்க தீவிர ஆலோசனையில் இறங்கினார். மனைவி மகாலட்சுமியும் (65) தன்னார்வத் தொண்டிலும் பார்வையிழந்த குழந்தைகளுக்கான அமைப்பிலும் இருந்ததால், அவரும் பக்க பலமாக இருக்க, ஏழை எளிய மாணவர்களுக்கு தரமான கல்விக்கு உதவுவது என தீர்மானித்தார்.

அப்படி ஒரு யோசனையில் உதித்ததுதான் ‘கல்வி துணை’ இலவச டியூசன் மையம். பேரூர் பச்சாபாளையம் சக்தி நகர் அருகில் ரூ.45 லட்சம் செலவில் 2014 ஜனவரி 23-ம் தேதி திறக்கப்பட்டது. அதன்பிறகு மாணவர்கள் வரத்தொடங்க மையம் களைகட்டத் தொடங்கியது.

இனி சிவசுவாமியின் வார்த்தைகளில் “முதல் நாள் மாலை நடைபெற்ற இலவச டியூசன் வகுப்புக்கு 4 மாணவர்கள்தான் வந்தனர். 15-வது நாளில் இந்த எண்ணிக்கை 60 ஆனது. தற் போது 130 குழந்தைகளுக்கு மேல் இங்கு பதிவு செய்துள்ளனர். 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தினமும் 90 முதல் 100 பேர் வரை வருகிறார்கள். இப் போது 10 ஆசிரியர்கள் பணிபுரிகின் றனர்.

சற்றே வசதியான சில தனியார் பள்ளி மாணவர்களால், ஏழைக் குழந்தைகளின் மனதில் வேறுபாடு தோன்றிவிடக் கூடாது என்பதற்காக, நடப்பாண்டில் இருந்து அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டுமே டியூசன் சொல்லித் தருகிறோம்.

இங்கு படித்து, வீட்டுப்பாடங்களைச் செய்யும் குழந்தைகள் அடுத்த நாள் பள்ளிக்கு மிக விருப்பமுடன் செல்கின்றனர். ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு துணிச்சலுடன் பதில் கூறுகின்றனர். அவர்களது தன்னம்பிக்கை அதிக ரித்துள்ளது.

காமராஜர் பிறந்த நாள், சுதந்திர தினம், திருவள்ளுவர் தினம் என மாதம் ஒருமுறை ஏதாவது விழாவுக்கு ஏற்பாடு செய்து கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி, குழந்தைகளுக்குப் பரிசு வழங்குகிறோம்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை கதை சொல்லும் நேரம். சுஜாதா சத்தியமூர்த்தி என்பவர் நமது இந்தியப் பண்பாடு, வரலாறு, கலாச்சாரத்தை விளக்கும் கதைகளையும் நன்னெறிக் கதைகளையும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, நற்பண்புகளை வளர்க்க உதவுகிறார். சில விளையாட்டுகளும் கற்றுத் தரப்படுகின்றன.

இங்கு வரும் பெரும்பாலான குழந்தைகள் ஏழைகள் மட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்களும் வழங்குகிறோம். இங்கு டியூசன் பயின்று 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பலர் பொறியியல், நர்சிங் பாடப் பிரிவுகளில் சேர்ந்துள்ளனர். மேலும், 6 பேர் போத்தனூரில் செயல்படும் 'டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் ஸ்டடீஸ்' கல்வி நிறுவனத்தில் படிக்கின் றனர்.

அடுத்ததாக வேலைவாய்ப்புக்கும் உதவ வேண்டுமெனத் தோன்றியது. இதனால் கணினி படிப்புகளான எம்எஸ் ஆபீஸ், டேலி மற்றும் ஸ்போக் கன் இங்கிலீஷ், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளுதல் உள்ளிட்டவற்றைக் கற்றுத் தருகிறோம்.

ஜெர்மனியின் போஷ் (BOSCH) நிறுவனம், தங்களது வேலைவாய்ப்பு பயிற்சி தரும் கூட்டாளியாக எங்களைத் தேர்வு செய்துள்ளது. இதனால் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கிறோம். இதற்காக சிறப்பு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ், தகவல் தொடர்புத் திறன், நேர்மறை அணுகுமுறை ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது.

ஓராண்டுக்கு 500 பேருக்காவது உரிய பயிற்சி அளித்து, வேலைவாய்ப்புக்கு உதவ வேண்டும். 12-ம் வகுப்பு வரை, இடைநிற்றலின்றி மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டுமென்பதே எங்களது முதன்மைக் குறிக்கோள். உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கவும் போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்று, வெற்றி பெறவும் ஆலோசனை வழங்குகிறோம். இந்த மையத்தை இயக்க மாதம் சுமார் ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. சில நண்பர்கள், நலன் விரும்பிகள் உதவுகின்றனர். சில நேரங்களில் எனது சொந்தப் பணத்தையும் செலவு செய்கிறேன். குறைந்தபட்சம் ஆண்டுக்கு சில நூறு மாணவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம்” என்கிறார் ‘கல்வி துணை' சிவசுவாமி.

70 வயதிலும் ஓய்வின்றி தன்னலமற்று உழைக்கும் இந்த சிவசுவாமியைப் போலவே ஊருக்கு நான்கு சிவசுவாமிகள் உருவெடுத்தால் போதும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்லாது ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தரம் உயர்வதுடன், சமூக மாற்றத்துக்கும் வழிவகுக்கும். வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x