Published : 07 Aug 2014 03:44 PM
Last Updated : 07 Aug 2014 03:44 PM

கார்கில்: 13 ஆண்டுகளாக அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் ஒரு நல்ல மேய்ப்பர்!

கடந்த 1999-ஆம் ஆண்டு, கார்கில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், ஒரு மேய்ப்பரின் நொடிப் பொழுது சமயோஜித புத்தியால், பொதுமக்கள் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால், அத்தகைய துணிச்சலுக்கு அங்கீகாரம் அளிக்கப்படாமல் இந்திய அரசு அவரை அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய கசப்பான உண்மை.

52 வயதாகும் தாஷி நம்கியால் என்ற மேய்ப்பர், இந்திய ராணுவத்திற்கு உதவிய சம்பவம் இதுதான் - கார்கிலின் பாடாலிக் பகுதியிலுள்ள கர்கோன் கிராமத்தில் அவரது வீடு உள்ளது. காணாமல் போன தனது காட்டு எருது (Yak) ஒன்றை தேடி மலையடிவாரத்தில் போய்க்கொண்டிருக்கும்போது, ஆறு பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் மாறுவேடத்தில் வருவதைக் கண்டார். உடனடியாக, இதுகுறித்து அங்கிருக்கும் ராணுவ புறக்காவலிலுக்கு தகவல் தெரிவித்தார்.

அன்றிலிருந்து, அவருக்கு ராணுவம் கடமைப்பட்டிருந்தப்போதிலும், நம்கியாலின் துணிச்சலைப் பாராட்டி, அவரை அங்கீகரிக்க புதுடெல்லியிலுள்ள அதிகாரிகள் ஆமை வேகத்தில் பணி செய்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த அதிகாரிகளின் மெத்தனப் போக்கு 13 ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில், நம்கியால் தனது மூன்று குழந்தைகளைப் படிக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்.

“கடந்த 2001-ஆம் ஆண்டு, இந்த சம்பவம் குறித்து மத்திய அரசுக்கு ராணுவம் கடிதம் எழுதியது. அதற்கு, மத்திய அரசும் என் துணிச்சலுக்கு தகுந்த அங்கீகாரம் அளிப்பதாக உறுதியளித்து. ஆனால், அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை”, என்று வருத்ததுடன் தெரிவிக்கிறார், நம்கியால்.

ஆயினும், இந்திய ராணுவம் அவருக்கு ஒருசில உதவிகளைச் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது 19 வயது மகன் சன்ஸின் தோர்ஜய் பள்ளிப் படிப்பை கைவிடும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது, ராணுவம் அவரது மகன் பள்ளிப்படிப்பைத் தொடர செய்ய உதவி செய்தது.

பிரதமரிடம் கோரிக்கை

இந்த கால தாமதம் குறித்து, அரசு சாரா அமைப்பான ‘சர்ஹத்’தின் தலைவர் சஞ்ஜய் நாஹர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி, நம்கியாலின் துணிச்சலைப் ஆங்கீகரித்து, அவருக்கு குடிமக்கள் தீரச்செயலுக்கான பதக்கத்தை (Civilian Gallantry Medal) வழங்கவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்”, என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x