Last Updated : 16 Jun, 2018 09:34 AM

 

Published : 16 Jun 2018 09:34 AM
Last Updated : 16 Jun 2018 09:34 AM

குற்ற ஆவணக் காப்பக போலீஸாரின் முயற்சியால் மனநிலை பாதிக்கப்பட்ட 133 பேர் குடும்பத்துடன் இணைந்தனர்: ஏடிஜிபி சீமா அகர்வாலுக்கு குவியும் பாராட்டு

மனநிலை பாதிப்பால் குடும்பத் தைப் பிரிந்து தவித்த 133 பேர் குற்ற ஆவணக் காப்பக போலீஸாரின் தீவிர முயற்சியால் குடும்பத்துடன் சேர்ந்துள்ளனர்.

மத்திய பிரதேசம் பரோடா மாவட்டம் திவால்ஸ் தில்லா நகரைச் சேர்ந்தவர் பாபு(62). இவருக்கு திருமணமாகி 2 குழந்தை கள் உள்ளனர். 21 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மனநிலை பாதிக்கப்பட்டவர், 15 ஆண்டுகளாக பல மாநிலங்களில் சுற்றி, கடந்த 2013-ம் ஆண்டு திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்திருக் கிறார். திருச்சி அன்பாலயா அமைப்பினர் இவரை மீட்டு பராமரித்து வந்தனர். இந்நிலையில், இவர் குறித்த தகவலை மாநில குற்ற ஆவணக் காப்பகத்தைச் சேர்ந்த போலீஸார் பெற்று, மத்திய பிரதேச போலீஸாருடன் தொடர்புகொண்டு, பாபுவின் குடும்பத்தைக் கண்டுபிடித்து, விஷயத்தை தெரிவித்தனர்.

பாபுவை அழைத்துச் செல்ல அவரது மகன் ஆரிப், தம்பி கமல் ஆகியோர் சென்னை வந்திருந்தனர். 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையைப் பார்த்த மகன் ஆரிப், தந்தையை கட்டியணைத்து முத்தமிட்டு, சந்தோஷத்தில் அழவும் செய்தார். அவர் கூறும்போது, “எனது தந்தை எங்கேயோ உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. அந்த நம்பிக்கையை தமிழக போலீஸார் நிறைவேற்றியுள்ளனர்” என்றார்.

மனிதாபிமான அடிப்படையில்...

இந்தச் சந்திப்பு நிகழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தமிழக குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால். இதுபோன்ற கடமைகள் குற்ற ஆவணக் காப்பகத்தின் பணிச் சூழலுக்குள் வருவதில்லை என்றாலும், மனிதாபிமான அடிப் படையில் குடும்பங்களை இணைக்கும் பணியை காவல் துறையின் இந்தப் பிரிவு செய்து வருகிறது.

இதுகுறித்து கூடுதல் டிஜிபி சீமா அகர்வாலிடம் கேட்டபோது, “உத்தராகண்ட் மாநிலத்தில் நாரிநிகேதன் என்ற காப்பகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பின்னர் அவருக்கு நினைவு திரும்பவே, தனது பெயர் ஹம்சவேணி, வேலூர் பாகாயம் பகுதியில் தனது வீடு இருப்பதாக தெரிவித்து இருக் கிறார்.

13 ஆண்டுகளுக்கு முன்பே...

உத்தராகண்ட் மாநில காவல் நிலையத்தில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி மூலம் இந்தத் தகவல் எனக்குக் கிடைத்து, நான் வேலூரில் விசாரித்தேன். அப்போது, பாகாயம் காவல் நிலையத்தில் 13 ஆண்டு களுக்கு முன்பே ஹம்சவேணி என்ற பெண் காணாமல் போனதாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. விசாரணையில் ஹம்சவேணிக்கு பிரபாகரன் என்ற மகன் இருப்பதும் தெரிந்தது.

பிரபாகரனிடம் அவரது தாய் உயிரோடு இருப்பது குறித்து தெரிவித்ததும், “எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து நான் என் அம்மாவைப் பார்த்தது இல்லை. எனது அம்மாவை நான் குழந்தை மாதிரி பார்த்துக் கொள்வேன்” என்று கண்ணீர் விட்டார். ஹம்சவேணியும், பிரபாகரனும் சந்தித்த போது எனக்கு கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 13 ஆண்டுகளுக்கு பின்னர் மகனைப் பார்த்த ஹம்சவேணியின் கண்களில் இருந்த மகிழ்ச்சி எனக்கு பிடித்திருந்தது. இதுபோல் மேலும் பலர் இருப்பார்களே, அவர்களையும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கலாமே என்ற எண்ணத்தில்தான் இந்தப் பணியைத் தொடங்கினேன்.

திரும்பும் பழைய நினைவுகள்

மனநிலை பாதிக்கப்பட்டு அனைத்தையும் திடீரென மறந்து, சாலைகளில் திரிந்து, காப்பகங்களில் சேர்க்கப்படுகிறார்கள். காப்பகங்களில் கொடுக்கப்படும் சிகிச்சையில் அவர்களுக்கு பழைய நினைவுகள் வரத்தொடங்குகின்றன. ஆனால் அதன் பின்ன ரும் அவர்கள் காப்பகத்திலேயே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடித்துதான் குடும்பத்தினருடன் சேர்த்து வைக் கிறோம்.

கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 133 பேரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து இருக் கிறோம். குற்ற ஆவணக் காப்பக காவல் ஆய்வாளர் தாஹிரா இந்தப் பணியை முன்னின்று செய்து வருகிறார்” என்றார்.

காவல் ஆய்வாளர் தாஹிரா கூறும்போது, “காப்பகங்களில் இருப்பவர்களிடம் சென்று ஒவ்வொருவரிடமும் பேசிப் பார்ப்பேன். அவர்களில் முகவரி கூறும் அளவுக்கு நினைவு இருப்பவர் களிடம் தொடர்ந்து பேசி, அவர்கள் வீட்டுக்குச் செல்ல விருப்பப்படுகிறார்களா என்று அறிந்து கொள்வேன். பின்னர், அவர்கள் கூறும் இடத்திலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு, வாட்ஸ்அப் மூலம் புகைப்படத்தை அனுப்பி உறுதி செய்து, அவர்களின் குடும்பத்தினருடன் பேசுவேன்.

குடும்பத்தினர் தேடுகிறார்களா...

வீட்டை விட்டு காணாமல் போய் காப்பகத்தில் இருப்பவரை, குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்களா, அந்த நபரை குடும்பத்தினர் தேடுகிறார்களா என்பதை அவர் களிடம் பேசி அறிந்துகொள்வேன். இளம் வயதில் மனைவி யைப் பிரிந்த கணவன் அல்லது கணவனைப் பிரிந்த மனைவி போன்ற இடங்களில் பலர் 2-வது திருமணம் செய்து இருப்பார்கள்.

அந்த நேரத்தில் காப்பகத்தில் இருப்பவரை மீண்டும் குடும்பத்தினருடன் சேர்த்தால் பிரச்சினை ஏற்படும். இதுபோல பல விஷயங்களை ஆராய்ந்து, காப்பகத்தில் இருப்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் சேர்த்து வைக்கிறோம்” என்றார்.

குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபியாக சீமா அகர்வால் நியமிக்கப்பட்ட பின்னரே இந்த சேவைப்பணி தொடங்கப்பட்டுள்ளது. அவரின் இந்த மனிதாபிமான செயலைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x