Last Updated : 17 Jun, 2018 10:33 AM

 

Published : 17 Jun 2018 10:33 AM
Last Updated : 17 Jun 2018 10:33 AM

தருமு சிவராம்: பெரும் சிறகுகள் கொண்டகலைஞன்

ன் மதுரைக் காலத்தின் கடைசி சில வருடங்கள் (1980-83) சிவராமோடு தொடர்புகளேதும் இல்லை. எனினும், 1983 ஜூன் 3-ல் நான் ‘க்ரியா’வில் சேர்ந்த சில நாட்களுக்குள்ளாகவே மீண்டும் உறவு சகஜமானது. அப்போது அவர் ராயப்பேட்டையில் ‘க்ரியா’ அலுவலகம் இருந்த இடத்துக்கு எதிர் சந்தில்தான் குடியிருந்தார். அவருக்கு க்ரியாவோடும் பிணக்கு இருந்தது. ஆனாலும், ஒருநாள் ‘க்ரியா’ வந்தார். நான் என் இருக்கையில் வேலையாக இருந்தேன். அவர் என்னைப் பார்க்க வந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. நேராக என்னிடம் வந்தவர், “நீ வந்திருப்பது தெரிந்து நான்தான் வந்து பாக்கணுமா? நீ வந்து பாக்க மாட்டியா?” என்று ஆரம்பித்தார். எனக்குப் பெரும் திகைப்பாக இருந்தது. இடையில் எதுவுமே நடந்திருக்கவில்லை என்பதுபோல அவ்வளவு இயல்பாகப் பேசினார். அவருடைய ஒரு அரிய குணாம்சமிது. எனினும், அவருடைய வருகை, அலுவலகச் சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக எனக்குத் தோன்றி, ஒருவித சங்கடம் என்னைப் பற்றிக்கொண்டது. வெளியில் சென்று டீ சாப்பிட்டோம். “சில களிமண் சிற்பங்கள் செய்திருக்கிறேன். வந்து பார்” என்றார். நான் போகவில்லை.

பின்னர், நான் வீட்டிலிருக்கும் நேரம் அறிந்துகொண்டு, ஓரிருமுறை வந்தார். நான் குடியிருந்தது கி.அ.சச்சிதானந்தன் வீட்டு மாடியில். அவருக்கும் தருமுவுக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கடும் பிணக்கு ஏற்பட்டுவிட்டிருந்தது. எனவே, என் வீட்டுக்கு வருவதிலும் சிக்கல் இருந்தது. நான் ‘க்ரியா’விலிருந்து விலகி தனியாக அச்சகம் தொடங்கிய பின், அங்கு சிலமுறை வந்தார். ஆனால், என் மனமும் அவருடைய நேரடி உறவிலிருந்து விலகியிருக்கவே விரும்பியது என்பதுதான் உண்மை. ஆக, என் சென்னை வாழ்க்கையில் பட்டும் படாததுமான உறவுதான் அவரோடு இருந்து கொண்டிருந்தது.

அவருடைய கடைசிக் காலகட்டச் செயல்பாடுகள், அவருடைய உக்கிரமான படைப்பாற்றலின் விளைவுகளாக இல்லாமல் தர்க்க பலம் மட்டுமே கொண்ட விவகாரக் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவுமே வெளிப்பட்டன. இக்காலகட்டத்தில் தர்க்க அறிவின் பலத்தில் தன் இருப்பை அவர் நிலைநிறுத்த முற்பட்டார். தர்க்கம் என்பது இரு பக்கமும் கூர் கொண்ட கத்தி போன்றது என்பதை அனுபவபூர்வமாக அவர் எழுத்துகள் எனக்கு உணர்த்தின. ஒரு விசயத்தை அதன் எந்தப் பக்கமாகவும் நின்று விவாதிக்கும் தர்க்கச் செருக்கு அவரிடம் வெளிப்பட்டபடி இருந்தது. இக்காலகட்டத்தில் ‘விமர்சன ஊழல்கள்’, ‘விமர்சனாஸ்ரமம்’, ‘விமர்சன மீட்சிகள்’ போன்ற தர்க்க விவகாரத் தொகுப்புகளே வெளிவந்தன. ஒரு அபூர்வக் கலை மேதையின் படைப்பு மன வளங்களை முழுமையாக வசப்படுத்திக்கொள்ள ஒரு சமூகம் தன் அசட்டையாலும் அறியாமையினாலும் இழந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை.

தன் கால இருப்பிலிருந்து, காலாதீத வெளிகளில் தன் படைப்பாக்கப் பயணங்களை மேற்கொண்ட ஒரு நட்சத்திரவாசி அவர். படைக்கும் தருணங்களில் அவரொரு நட்சத்திரவாசியாகத்தான் வாழ்ந்திருக்கிறார். அவருடைய பிரமாண்டமான சிறகுகள் வான்வெளிகளில் சஞ்சரிக்கத் துணையாக இருந்திருக்கின்றன. அதேசமயம், அந்த பிரமாண்ட சிறகுகள் அவரை நிலத்தில் சுபாவமாக நடக்கவிடாமல் தடுத்துக்கொண்டே இருந்தன. உலகெங்கும் கலை இலக்கியப் பெருவெளிகளில் இப்படியான அபூர்வங்கள் இருந்திருக்கிறார்கள். வாழும் காலத்தில் அவர்களைப் புரிந்துகொள்வதில் காலமும் சமூகமும் எப்போதும் தடுமாறிக்கொண்டுதான் இருந்திருக்கின்றன. இதற்கான நவீனத் தமிழ் இலக்கிய உதாரணம், தருமு சிவராம்.

அதேசமயம், எளிய நேர்த்தியுடன் தன்னைப் பேணிக்கொள்பவர். புகைப் பழக்கமோ மதுப் பழக்கமோ அறவே இல்லாதவர். அசைவ உணவின் மீது நாட்டம் (நண்டின் மீது பெரும் மோகம்) இருந்த அதே அளவுக்கு, இயற்கை உணவிலும் பச்சை காய்கறிகளிலும் விருப்பமுண்டு. தன் தேவைக்கேற்ப சமைக்கவும் தெரிந்தவர். உடலைப் பேணுவதிலும் கவனமுண்டு. நண்பர்களின் நலன்களில் அக்கறை கொள்பவர். அவர்களுடைய பெயரின் எழுத்துகளில் மாற்றம் செய்வதுகூட அது அவர்களுக்கு நல்லது செய்யும் என்ற அவருடைய நம்பிக்கையிலிருந்து மேற்கொள்ளப்படுவதுதான். என் முதல் சந்திப்பிலேயே, என் பெயரில் ஒரு எழுத்தை மாற்றி, அந்த ஸ்பெல்லிங்கில் தினமும் பலமுறை பெயரை எழுதிப்பார்க்கச் சொன்னார். மேலும், நான் அதிகமாக சிகரெட் பிடிப்பதாகச் சொல்லி, சிகரெட்டை இரண்டாக நறுக்கி வைத்துக்கொண்டு பிடித்தால் பாதி குறையும் என்றார். அதேசமயம், அவருடைய இன்னொரு பின்னமாக, தகிக்கும் ஒரு உக்கிர மனநிலையும் அவருக்குள் இருந்துகொண்டிருந்தது. அதுதான் நடைமுறை வாழ்வில் தவிர்க்க முடியாமல் சிடுக்குகளையும் உருவாக்கிக்கொண்டிருந்தது. நம்முடைய பூஞ்சை மனங்களால் (என்னையும் சேர்த்தே சொல்கிறேன்) அதைக் கிரஹித்துக்கொள்ள முடிவதில்லை.

அவர் உடல் நலம் சீரற்று மருத்துவமனையிலிருந்தபோது, ஒருநாள் ‘வெளி’ ரங்கராஜன் என்னைச் சந்தித்தார். அமெரிக்கவாழ் தமிழர்களால் நடத்தப்படும் ‘விளக்கு’ விருது அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட அவர், அந்த ஆண்டுக்கான விருதை தருமு சிவராமுக்குக் கொடுக்க முடிவெடுத்து, அதன் அமைப்பாளர் கோ.ராஜாராமுக்குத் தெரிவித்திருக்கிறார். அதை ராஜாராம் அமைப்பின் பிற உறுப்பினர்களுக்குத் தெரிவித்தபோது, அவர்களுக்கு சிவராம் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனவே, இங்குள்ள நண்பர்கள் அறியும் வகையில் ஒரு கட்டுரை அனுப்பி வைக்கும்படி கேட்டிருக்கிறார். அது குறித்துதான் ரங்கராஜன் என்னிடம் பேசினார். அப்போது ‘புதிய பார்வை’ இதழில் தமிழின் அறியப்படாத ஆளுமைகள் குறித்து, ‘நடைவழிக் குறிப்புகள்’ என்ற தொடரை எழுதிக்கொண்டிருந்தேன். அதன் அடுத்த இதழிலேயே, ‘தருமு சிவராம்: தமிழின் பெருமிதம்’ என்ற கட்டுரை எழுதினேன். அந்த ஆண்டுக்கான ‘விளக்கு’ விருது சிவராமுக்குக் கொடுக்கப்பட்டது. வாழ்நாளில் அவருக்கு அளிக்கப்பட்ட ஒரே விருது.

பெண் இணையோ, துணையோ, நட்போ அமையாத வாழ்நிலை. வருமானமற்ற வாழ்க்கைப்போக்கு. கவித்துவ மேதமைக்கான எளிய அங்கீகாரம்கூட அளிக்காத சமூகச் சூழல். அவர் பெருமையை நம் காலமும் சமூகமும் அறிந்திராதபோதிலும் தன் பெருமை தானறிந்தவர். நட்பின் தொடக்க காலத்தில், ஒருநாள், மதுரை வீதியொன்றில் நாங்கள் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, ‘ஒரு மகா கவிஞன் இந்த வீதியில் நடந்து போய்க்கொண்டிருப்பது இங்குள்ள யாருக்கும் தெரியாதில்ல’ என்று சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தார்.

வாழ்நிலையின் சகல இடர்களுக்கூடாகவும் கலை நம்பிக்கையின் செருக்குடன் கம்பீரமாக வாழ்ந்தவர். எந்தவொன்றையும், எவ்வித சமரசமுமற்று தீவிர மனோபாவத்துடன் அணுகியவர். எந்த ஒரு காலகட்டத்திலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலை, இலக்கிய நிறுவனங்களின் பக்கம் போகாதவர். அந்நிறுவனங்களின் அதிகாரப் பிரதிநிதிகளுடன் எவ்வித உறவும் கொண்டிராதவர். அவருடைய கலை இலக்கிய நம்பிக்கையும் மனோபலமும் போற்றப்பட வேண்டியவை. அவர் தன் காலத்துக்கும் சமூகத்துக்கும் மொழிக்கும் அளித்தது பெரும் கொடை; எனில், சமூகம் அவருடைய ஆற்றல்களைப் பூரணமாகப் பெற்றுக்கொள்ளத் தவறியது பெரும் அவலம்.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x