Published : 17 Jun 2018 10:15 AM
Last Updated : 17 Jun 2018 10:15 AM

மனித உறுப்பு மார்க்கெட் ஆகிறதா தமிழகம்? - ஆள் பிடிக்க அலையும் மாஃபியாக்கள்..!

ருவர் பத்து பைசாகூட இல்லாத பஞ்சபராரியாக இருக்கலாம். ஆனால், ஆரோக்கியமான மனிதன் எனில் இன்றைய தேதிக்கு அவரது விலை சுமார் ஐந்து கோடி ரூபாய். வாயைப் பிளக்க வேண்டாம். வாயின் விலையே ஏழெட்டு லட்சங்களைத் தாண்டுகிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், சர்வதேச உடல் உறுப்பு கள்ளச் சந்தையில் இன்றைய நிலவரப்படி ஒரு நுரையீரலின் விலை ஒரு கோடியே 85 லட்ச ரூபாய். கல்லீரல் 94 லட்சம். சிறுநீரகம் 93 லட்சம். ஒரு ஜோடி கண்கள் 14 லட்சம். எலும்புக் கூடு 5 லட்ச ரூபாய். ரத்தம் ஒரு லிட்டர் 43 ஆயிரம் ரூபாய். தோல் ஒரு சதுர செ.மீட்டர் 85 ரூபாய். சிறு எலும்புகள் மற்றும் தசைநார் 4 லட்ச ரூபாய். இப்படி உலகம் முழுவதும் ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் தொழில் இது!

உடல் உறுப்பை அளிக்கும் சாமானியனுக்கு இவ்வளவு விலை கிடைக்குமா என்றெல்லாம் அப்பாவியாகக் கேட்கக் கூடாது. சர்வதேச சந்தை நிலவரத்தை மருத்துவ மாஃபியாக்கள் நிர்ணயிக்கிறார்கள் எனில் சாமானியனின் சந்தை நிலவரத்தை அவரது குடும்பச் சூழலே நிர்ணயிக்கிறது. கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். அதிகபட்சமாக 93 லட்சத்துக்கு விலை போகும் சிறுநீரகத்தை ஐம்பதாயிரத்துக்குக் கொடுத்தவர்களும் / கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியா, சீனா, இந்தோனேஷியா இவையெல்லாம் உடல் உறுப்புகள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நாடுகள். கசாப்புக் கடைகள் என்றும் சொல்லாம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வாங்குவதில் முன்னணியில் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் மட்டுமின்றி கள்ளச்சந்தை விற்பனையிலும் முன்னணியில் இருக்கிறது தமிழகம். நீண்ட காலமாக இந்தப் பேச்சுகள் மேலெழுந்தாலும், தற்போது தேசிய உறுப்பு மாற்று மற்றும் திசு மாற்று அமைப்பின் இயக்குநர் விமல் பண்டாரி, இதுதொடர்பாகக் குற்றம் சாட்டியிருப்பது விவகாரத்தை வீதிக்குக் கொண்டுவந்திருக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடந்த இதய மாற்று அறுவைசிகிச்சைகளால் பலன் அடைந்ததில் 25 சதவீதம் பேரும், நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சைகளால் பலன் அடைந்ததில் 33 சதவீதம் பேரும் வெளிநாட்டினர். அதாவது, நான்கில் ஒரு பங்கு மற்றும் மூன்றில் ஒரு பங்கு. இந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளில் 31 இதயங்களும், 32 நுரையீரல்களும் வெளிநாட்டினருக்கே பொருத்தப்பட்டிருக்கின்றன. இது விமல் பண்டாாியின் குற்றச்சாட்டு மட்டும் அல்ல; இதுதொடர்பில் கேரள முதல்வரும் தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். வழக்கம்போல அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஒவ்வொன்றுமே கண்காணிக்கப்படுகின்றன; கணக்கில் வைக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் கண்காணிப்பும் கிடையாது, கணக்கும் கிடையாது. ஆனாலும், இந்தியாவில் மூன்றரை லட்சம் நோயாளிகள் இதய மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். சிறுநீரகத்துக்காகக் காத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சம். ஆனால், ஆண்டுக்கு ஆறாயிரம் சிறுநீரகங்கள் மட்டுமே சட்டப்படி கிடைக்கின்றன. அதில் 3,500 அறுவைசிகிச்சைகள் மட்டுமே நடக்கின்றன. தமிழகத்தில் சிறுநீரகம் பெறுவதற்கான காத்திருப்புப் பட்டியலில் எப்போதுமே சராசரியாக நான்காயிரம் பேர் நிறைந்திருக்கிறார்கள். இப்படித் தேவைக்கும் கிடைப்பதற்கும் இடையே இருக்கும் இடைவெளியே உடல் உறுப்பு மாஃபியாக்கள் கொழுப்பதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.

சுமார் 5,200 பேர் தமிழகத்தில் உடல் உறுப்புகள் கேட்டுக் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டினருக்கு முக்கியத்துவம் அளித்ததிலிருந்தே இதன் முறைகேடுகளைப் புரிந்துகொள்ளலாம். இதுபோன்ற அறுவைசிகிச்சைகள் ஆறு மணி நேரத்தில் முடித்துவிட வேண்டும். குறைந்தகால அவகாசத்தால் வசதியற்றவர்கள், காத்திருப்புப் பட்டியலில் முன்னால் இருந்தாலும் பணம் ஏற்பாடு செய்ய முடியாது. அப்படியே செய்தாலும், அதைவிட பல மடங்கு கூடுதலாகக் கொட்டிக்கொடுக்கப் பலரும் தயாராக இருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தியே முறைகேடுகள் நடக்கின்றன. தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை மையங்கள், மருத்துவமனைகள், மார்ச்சுவரிகள், காவல் நிலையங்கள் உட்பட இதுதொடர்பான தகவல்களை அளிக்க ஏராளமான புரோக்கர்கள் இருக்கிறார்கள். துப்பு சொல்வதுபோல ஒவ்வொரு தகவலுக்கும் ஒவ்வொரு விலை. விபத்துகளில் மனித உயிரைக் காப்பாற்ற நடக்கும் முயற்சிகளைவிட விபத்துகளைப் பயன்படுத்தி உடல் உறுப்புகளை வியாபாரம் செய்ய நடக்கும் முயற்சிகளே அதிகம். வெளிப்படையாகச் சொல்லப்போனால், மருத்துவத் துறையில் பலரும் மனிதர்களையும் அவர்கள் தம் உடல் உறுப்புகளையும் பணமாகத்தான் பார்க்கிறார்கள்.” என்கிறார்கள்.

இந்தியாவில் உடல் உறுப்புப் பரிமாற்றம், தானம் அடிப்படையிலேயே நடக்க வேண்டும். நெருங்கிய உறவினர் மற்றும் உறவினர் அல்லாதவர்களும் தானம் அளிக்கலாம். நெருங்கிய உறவினர் தானம் அளிக்கும்போது அறுவைசிகிச்சை நடக்கும் மருத்துவமனையின் நிபுணர் குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும். உறவினர் அல்லாதவர் தானம் அளிக்கும்போது மாநில அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஒப்புதல் பெற வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தி தானம் பெறக் கூடாது. தானமாக அளித்தற்காகப் பணமோ வேறு ஆதாயங்களோ அளிப்பது, பெறுவது தண்டனைக்குரிய குற்றம்.

இதற்காக ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.20 லட்சம் முதல் ஒரு கோடி வரை அபராதம் விதிக்கலாம். ஈரான் உள்ளிட்ட சில நாடுகளே இதனை வணிகமாக அங்கீகரித்துள்ளன. நமது நாட்டிலும் இதைச் சட்டபூர்வ வணிகமாக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்களும் உண்டு. ஆனால், இந்தியா போன்ற சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகம் கொண்ட நாட்டில் இதை வணிகம் ஆக்குவது ஏற்கெனவே அற உணர்வுகள் அருகிவரும் நமது மருத்துவத் துறையை மென்மேலும் வீழ்ச்சியடையவே செய்யும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x