Published : 07 Jun 2018 10:17 AM
Last Updated : 07 Jun 2018 10:17 AM

காவிரி டெல்டாவை பொன்னாக்கும் மோயாறும்.. 3 சிற்றாறுகளும்..

ழவுக்கு உயிர் கொடுக்கின்ற காவிரித் தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்று மேட்டூர் அணை திறக்கும் நாள்தான் ஜூன் 12. கோடையில் இளைப்பாறிய நிலங்களை தண்ணீரால் நிறைத்து அதை பார்க்கின்றவர்களின் மனங்குளிர வைப்பதற்கு அடித்தளமிடும் அந்த நாள், கடந்த 7 ஆண்டுகளாக தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு கருப்பு நாளாகவே அமைந்து வருகிறது. காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்து முப்போகம் விளைந்த டெல்டாவில் தற்போது ஒருபோக சாகுபடியே கேள்விக்குறியாகி வருகிறது.

இந்தச் சூழலில் 50 ஆண்டுகால சட் டப் போராட்டத்துக்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உரிய நேரத் தில் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை 4 மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிப்பதில்தான் இந்த ஆணையத்தின் வெற்றி அமைந்துள்ளது.

இது ஒருபுறமிருந்தாலும், தமிழகத்தில் கிடைக்கின்ற நீர் ஆதாரங்களை தமிழகத்தின் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கிடைக்கும் தண்ணீரை காவிரி ஆற்றுக்கு கொண்டு வந்தால், தமிழகமே செழுமையடையும் என்ற ஆதங்கங்களை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது சாத்தியமா என்பது குறித்து களஆய்வு மேற்கொண்டபோது, உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகின்ற அமிழ்தத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லல்படுகின்றோமோ என்ற உணர்வுதான் ஏற்படுகின்றது.

ஆம், தமிழகத்தின் முக்கிய அணைக் கட்டுகளில் ஒன்றான பவானி சாகர் அணைக்கு வருகின்ற முக்கிய நீராதாரமே கூடலூர், ஊட்டி பகுதி மலைத்தொடர்களில் இருந்து உற்பத்தியாகி வரும் மோயாறுதான். அந்த மோயாற்றுடன் அங்குள்ள மற்ற சிற்றாறுகளை இணைத்தால் பவானி சாகர் அணைக்கு கூடுதலாக தண்ணீரை கொண்டுவந்து சேர்க்க முடியும். அதன் மூலம் ஆண்டு முழுவதும் பவானி சாகர் அணையை பாசனத்துக்கு திறக்கும் நிலை ஏற்படும்.

அப்படி திறக்கும்போது பவானி சாகர் அணையிலிருந்து வருகின்ற பவானி ஆறானது, ஏற்கெனவே உள்ள பாசன கட்டமைப்பின்படி, மேட்டூர் அணைக்கு கீழ் பகுதியில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள கூடுதுறையில் காவிரி ஆற்றுடன் கலக்கும். இயற்கையாகவே கிடைத்த பாசனக்கட்டமைப்பை பயன்படுத்தி, மோயாற்றுத் தண்ணீரை காவிரி கடைமடை வரை பாசனத்துக்கு கொண்டு சேர்க்க முடியும் என்கின்றனர் நீரியல் வல்லுநர்கள்.

பவானி சாகர் அணைக்கு கூடுதல் நீரை கொண்டு வருவதற்கு சாத்தியமுள்ள ஆறுகள்:

1. மோயாறு: கூடலூர் தாலுகாவில் அல்லூர் என்ற இடத்தில் சிக்மாயார் என்ற சிற்றாறாக உற்பத்தியாகி, துரப்பள்ளி என்ற இடத்தில் மோயாறாக உருவெடுத்து, கார்குடி தெப்பக்காடு, மசனக்குடி வழியாக மோயாறு என்ற பள்ளத்தாக்கில் தமிழக மின்திட்டத்துக்கு பயன்பட்ட பிறகு பவானி சாகர் அணையில் கலக்கிறது.

2.பாண்டியாறு: கூடலூர் அருகே நடுவட்டம் என்ற மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்தும் ஓவேலி என்ற பகுதியில் உள்ள காந்தி நகர், சூண்டி, பார்வுட், சேரன் நகர், கிளன்வென்ஸ், எல்லமலை, சந்தனமலை, நியூகோப் போன்ற மலை கிராமங்களின் மலைச் சரிவுகளின் வழியாக விழுகின்ற சிற்றருவிகள் மூலம் சிற்றாறு ஒன்று உருவாகிறது. இதுபோல, தேவலா என்ற பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் சேர்ந்து மற்றொரு சிற்றாறு உருவாகி கூடலூர் அருகே இரும்புப் பாலம் என்ற இடத்தில் (மரப்பாலம் என்றும் குறிப்பிடுகின்றனர்) ஒன்று சேர்ந்து உற்பத்தியாவதுதான் பாண்டியாறு. இது, 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு தமிழகத்தில் பயணிக்கிறது. பிறகு கேரளா கீழ்நாடுகானியில் இருந்து புன்னப்புழா ஆறாகவும் பின்னர் சாலியாறாகவும் அரபிக் கடலில் கலக்கிறது.

3.பொன்னானிஆறு: பந்தலூர் தாலுகா ரிச்மவுன்ட் எஸ்டேட்டில் உற்பத்தியாகி பந்தலூர் தொண்டியாளம், நெல்லியாளம் வழியாக பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து கேரள மாநிலத்தில் வெள்ளேரி ஆறாக மாறி கேரள- கர்நாடக மாநிலங்களின் வனச்சரகத்தின் வழியாகச் சென்று கபினி ஆற்றுடன் கலக்கிறது.

4.ஸ்ரீமதுரை ஆறு: தேவர் சோலை மலைப் பகுதிகளில் உற்பத்தியாகி கம்மாத்தி, புத்தூர் வயல் வழியாக கார்குடியில் மோயாற்றுடன் கலக்கிறது.

சாத்தியக் கூறுகள் என்ன?

இந்த 4 ஆறுகளில் பாண்டியாறு, பொன்னானி, ஸ்ரீமதுரை ஆகிய ஆறுகளிடையே சிறுசிறு இணைப்புகளை ஏற்படுத்தி மோயாற்றுக்கு கூடுதல் தண்ணீரை ஏற்ற முடியும் என்கின்றனர் நீரியல் வல்லுநர்கள். அதற்கான சாத்தியங்கள் குறித்து கோவை மண்டல பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மற்றும் நீரியல் வல்லுநர்கள் பல்வேறு யோசனைகளை தெரிவிக்கின்றனர். அவற்றின் விவரம்:

பின்னேற்று நீர் தொழில்நுட்பம்

கூடலூர் இரும்புப் பாலத்துக்கு தேவலா உள்ளிட்ட ஆறுகளில் இருந்து பிரிந்து வருகின்ற சிற்றாறை புளியம்பாறை, ஒன்னாம் மைல், தாளம்புழா, மங்குலி வரை அகலப்படுத்தி சிறிய சுரங்கப்பாதை ஏற்படுத்தினால், அதில் ஏற்படும் பின்னேற்று நீரால் (பேக் வாட்டர்), புத்தூர் வழியாகச் செல்லும் ஆற்றில் கலக்கும். தொடர்ந்து அந்த ஆறு கார்குடியில் மோயாற்றுடன் இணையும்.

இந்த யோசனைகளை ஒவ்வொன்றாகச் செய்து மோயாற்றுக்கு கூடுதல் தண்ணீரைக் கொடுத்து பவானி சாகர் அணையை நிரப்பினால், ஆண்டு முழுவதும் திறக்கக் கூடிய சாத்தியமுள்ள அணையாக பவானிசாகர் மாறும். அது தமிழகக் காவிரி டெல்டா பகுதியை பொன்னான பூமியாக வளப்படுத்தும். மேலும், இதன்மூலம் தமிழகத்தில் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தையும் எவ்வித தடையுமின்றி நிறைவேற்ற முடியும்.

மின் உற்பத்திக்கும் வாய்ப்பு

இதுகுறித்து, கூடலூர் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சாம் ஜோசப் கூறியது:

ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையால் கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் கிடைக்கும் மழை தண்ணீர் வீணாக அரபிக்கடலில் கலக்கிறது. இதை தமிழகம் பயன்படுத்துவதில் சிக்கல் இல்லை. மாறாக சுமார் 200 டிஎம்சி வரையிலான தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.இத்திட்டத்தை பயன்படுத்தி நீர் மின்திட்டம் மூலம் 2 முதல் 5 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். வன விலங்குகளுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்கும்.

ஓவேலி பகுதிகளில் உள்ள பிர்லா நிறுவனத்தின் மஞ்சுஸ்ரீ டீ எஸ்டேட்டுக் கான குத்தகை முடிந்துவிட்டதால் அந்த இடத்தை அரசு கையகப்படுத்தி அதில் ஒரு சிறு பகுதியிலேயே கால் வாய் அமைத்து விடலாம் என்றார்.

செலவு சொற்பமானதுதான்

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் கூறியது:

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கிடைக்கிற தண்ணீரை முழுமையாக பயன்படுத்துவது குறித்து நாம் யோசிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. கூடலூர் பகுதியில் கிடைக்கும் தண்ணீரில் சிறு பகுதியை தமிழகத்துக்கு திருப்பிவிட்டாலே சுமார் 200 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். இதை கொண்டு நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தியை பெருக்கலாம். காவிரியில் தண்ணீர் வராமல் தமி ழக டெல்டா விவசாயிகள் கடந்த 7 ஆண்டுகளாக குறுவையையும் கடந்த 2 ஆண்டுகளாக பெரும்பகுதி சம்பா சாகுபடியையும் இழந்துவிட்டனர். வறட்சி பாதித்து பல விவசாயிகள் மாண்டார்கள். காவிரி வழக்குக்காக செலவான தொகை சுமார் ரூ.1,500 கோடி என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தச் செலவுகளை ஒப்பிடும்போது, சிற்றாறுகளை இணைக்க ஆகும் செலவு சொற்பம்தான். இதுகுறித்து அரசு யோசிக்க வேண்டும் என்றார்.

அதிகாரிகள், மக்கள் ஆதரவு

பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் (ஓய்வு) தெய்வசிகா மணி கூறியது:

1965-ம் ஆண்டிலேயே முன்னாள் தலைமை பொறியாளர் எஸ்.பி. நமச்சிவாயம் கூடலூர் பகுதியில் ஆய்வு செய்து அங்கு அணை கட்டுவதற்கு ஒரு திட்டத்தை தயாரித்தார். அந்தக் குழுவில் நான் வரைவாளராகப் பணியாற்றினேன். அந்த திட்டத்தை கேரளாவும் மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது. ஆனால் தமிழகத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற உரிய வேகம் காட்டவில்லை. இதனால் நாளடை வில் மக்கள்தொகை பெருகி குடியிருப்புகளும் அங்கு அதிகரித்துவிட்டன. இந்நிலையில், அந்தப் பகுதியில் அண்மையில் நான் மீண்டும் ஆய்வு செய்தபோது அங்கு வசிக்கும் மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தற் போது வளர்ந்துள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறுசிறு இணைப்புகளைச் செய்தாலே மோயாற்றுக்கு கூடுதல் தண்ணீரைப் பெற்று காவிரியில் அதை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு கோவை, நீலகிரி மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மட்டத்திலும் மக்களிடமும் நல்ல ஆதரவு உள்ளது. இதனை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

கேரளாவுடன் பேச வேண்டும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியது:

கேரளாவைப் பொறுத்தவரை தமிழகத்தைப்போல அதிக நீர் தேவைப்படும் மாநிலம் அல்ல. முல்லை பெரியாறில் சிறுசிறு பிணக்குகள் ஏற்பட்டிருந்தாலும் கர்நாடகத்தைப்போல அணுக வேண்டியதில்லை. இந்நிலையில் மோயாறு, பாண்டியாறு போன்ற சிற்றாறுகளை இணைப்பதால் தமிழகத்தில் காவிரி டெல்டாவுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் டெல்டா விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் தகவல். அரசு இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து கூடுதல் நீர் கிடைக்கும் என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுகுறித்து அண்டை மாநிலமான கேரளாவுடன் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் அதிகாரிகள் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போது, ஏற்கெனவே நின்றுபோயுள்ள திட்டங்களையும் பேசித் தீர்க்க வேண்டும். அதற்கு தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x