Last Updated : 03 Jun, 2018 10:05 AM

 

Published : 03 Jun 2018 10:05 AM
Last Updated : 03 Jun 2018 10:05 AM

பழைய இரும்புக் கோட்டையான எருக்கலக்கோட்டை

ருக்குள் ஒன்றிரண்டு பேர் பழைய இரும்புகளை வியாபாரம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால், ஊரே பழைய இரும்பு வியாபாரம் செய்கிறதென்றால் அது எருக்கலக்கோட்டையாகத்தான் இருக்க முடியும்.

வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் நெல் மூட்டைகள், வைக்கோல், மண்வெட்டி, கலப்பை, ஆடு, மாடுகள் என ஒருகாலத்தில் விவசாயத்தின் முன்னோடி கிராமமாக விளங்கிய எருக்கலக்கோட்டை தற்போது ஓட்டை உடைசலுக்கு வந்து நிற்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ளது இந்த ஊர். ஊரில் உள்ள வீடுதோறும் ஓட்டை உடைசல் இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள், காலி மதுபாட்டில்கள் டன் கணக் கில் நிரம்பி வழிகின்றன. பழைய இரும்பு வியாபாரத்தில் அந்த ஊரே பிஸியாக உள்ளது.

இதுகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த எஸ்.திருமுருகன் கூறியது: ஒரு புறம் நெல், கடலை, பயறு என விவசாயத்திலும் மறுபுறம் ஆடு, மாடுகள் வளர்ப்பிலும் இருந்த ஊர் இது. சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பு ஒன்றிரண்டு பேர் மட்டும் சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று வெல்லம், வெங்காயம், பொரிஉருண்டை, பேரிச்சம்பழம், மிட்டாய்களுக்கு பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை எடைபோட்டு வாங்கிவந்து வியாபாரம் செய்தனர். அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து வறுமை தாண்டவமாடியதால், ஒன்றிரெண்டு பேர் செய்து வந்த பழைய இரும்பு வியாபாரத்துக்கு ஊரே மாறத் தொடங்கியது. இங்கிருந்து 50 சுமை ஆட்டோக்கள் மூலம் புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் செல்வோம். “ஓடாத டிவி, ஓட்ட முடியாத சைக்கிள், படுக்க முடியாத கட்டில், சமைக்க முடி யாத அண்டா, அலுமினிய பாத்திரம், உடைந்துபோன பிளாஸ் டிக் பொருட்கள், காலியான பீர், பிராந்தி பாட்டில்கள் வாங்கும் வாகனம் வருதம்மா வருது என அறிவித்து வாடிக்கையாக வரும் வாகனம்தான் வருது” என்று அறிவிப்பு செய்தபடியே செல்வோம்.

வாங்கப்படும் பழைய பொருட்களை வீட்டில் உள்ள பெண்கள் தனித்தனியாக பிரித்துக் குவித்து வைப்பார்கள். பின்னர் அவற்றை விற்பனை செய்து வாழ்க்கைய ஓட்டுகிறோம்” என்றார் அவர்.

விவசாயம் செய்து ஊருக்கே உணவு தந்தவர்கள், இப்போது வேண்டாம் என கழித்துக்கட்டிய பொருட்கள்தான் இவர்களுக்கு உணவளிக்கிறது. விவசாயம் செழிக்க வேண்டும். இன்னும் ஒரு எருக்கலக்கோட்டை உருவாவதை தடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x