Published : 06 Jun 2018 11:51 am

Updated : 06 Jun 2018 11:51 am

 

Published : 06 Jun 2018 11:51 AM
Last Updated : 06 Jun 2018 11:51 AM

ராஜேந்திர சோழனுக்கு உயிர் கொடுத்த ராஜராஜன்

லகமெல்லாம் தமிழர் பெருமையை பரப்பியவர்களில் பேரரசன் ராஜேந்திர சோழனும் ஒருவர் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவர் எப்படி இருப்பார் என்பது தெரியாது. அந்தக் குறையை போக்கி, “இவர்தான் ராஜேந்திர சோழன்” என தனது தூரிகையால் உயிர் கொடுத்து நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார் ஒவியர் ஒருவர்.


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வீரமறவனின் தோற்றத்தை நாம் அறிந்துகொள்ள வாய்ப்பே இல்லாத நிலையில், பல இடங்களில் ஆய்வு நடத்தி அவரின் உருவத்தை வரைந்து நம்மை ராஜேந்திர சோழனுடன் உறவாட வைத்த அந்த ஓவியரின் பெயர் ராஜராஜன்.

ராஜேந்திர சோழன் அரியணையேறிய ஆயிரமாவது கொண்டாட்டம் நடந்து முடிந்தவுடன், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது. ஆனால், அஞ்சல் தலையில் இருந்த உருவம் ராஜேந்திர சோழனை போல் இல்லை என்ற கருத்து எழுந்ததால் அவரது படத்தை கேட்க, இந்திய தொல்லியல் துறையோ அப்படி ஒரு சிலையோ, ஓவியமோ இல்லை என்று பதில் அளித்தது.

அதையடுத்து ராஜேந்திர சோழனின் ஓவியத்தை வரையும் பொறுப்பு புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூட ஓவியப் பேராசிரியர் ராஜராஜனிடம் வந்தடைந்தது. அதற்காக அவர் எடுத்த முயற்சியை அவரே நம்மிடம் கூறியது:

கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் 18 பேர் கொண்ட வல்லுநர் குழு வால் கடந்த 2016-ல் ராஜேந்திர சோழனின் ஓவியம் வரையும் பணி தரப்பட்டது. குழுமத் தைச் சேர்ந்த கோமகன் மற்றும் குழுவினருடன் ஓவியத்தை வரைய ஓராண்டு களப்பணி மேற் கொண்டோம்.

குடந்தை அருகேயுள்ள மானம்பாடி, திருவா ரூர் தியாகேசுவரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரத்தில் அர்த்த மண்டப தென்வாயிலில் ராஜேந்திர சோழனின் உருவம் இருப்பதாக அறிந்து கள ஆய்வு செய்தோம். தஞ்சை பெரிய கோயில் ஓவியங்களில் அக்கால சூழல், ஆபரணங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை அறிய முடிந்தது. குறிப்பாக வாள், ஆடை, அணிகலன், குதிரை ஆகியவற்றை குறித்து கொண்டேன்.

ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய இடங்களில் அடுத்து கள ஆய்வு செய்தோம். குடந்தை அருகேயுள்ள மானம்பாடியில் உள்ள ஒரு சிலையில் தெரிந்த அவரின் முகம் உருவ அமைப்பை எளி தாக கிரகிக்க முடிந்தது. தலையில் சோழர் கால மரபு கேச பந்தம் சரியாக அமைந்து கொண்டை போட்டிருந்தது போல் வடிவமைத்தேன். காதில் சோழர் கால காதணி குண்டலங்கள், கழுத்தில் புலிப்பற்றாளி, சரப்பளி, மார்பில் உதர பந்தம், கைகளில் தோள்வளை, கடகவளை, வலதுகரத்தில் சோழர்கள் பயன்படுத்திய போர்வாள், பருத்தி துணியில் பஞ்சகட்சம், இடையில் அரைப்பட்டிகை என வரையத்தொடங்கினேன்.

அப்போது அவர் காலில் அணிந்திருந்த காலணியில் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் தாராசுரம் சிற்பத்தில் உள்ள காலணியை அடிப்படையாக வைத்து அது உருவாக்கப்பட்டது. மேலும் குடவாயில் பாலசுப்ரமணியம் ஆய்வுக் கட்டுரைகள் அதிகளவில் உதவின. கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரில் ராஜேந்திர சோழன் ஓவியம் திறக் கப்பட்டது.

இது மிக சவாலான பணியாக இருந்ததாலும், நூற்றாண்டு கடந்தாலும் ராஜேந்திர சோழனின் உருவத்தை மக்களுக்கு காட்டும் வகையில் வடிவமைத்தோம். இது அனைவருக்கும் திருப்தி தந்தது என்றார் ராஜராஜன்.

செப்பேடு, ஓவியங்கள் ஆகியவற்றை தேடித் தேடி அறிந்து மிக நுணுக்கமான பணியை செய்து முடித்த ராஜராஜனுக்கு ஓர் ஆசை. ராஜேந்திர சோழனை இன்றைய தலைமுறைகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே அது. விரைவில், அந்த மாமன்னனை காமிக்ஸ் வடிவில் நம் குழந்தைகள் பார்க்கலாம்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x