Published : 23 Jun 2018 10:07 AM
Last Updated : 23 Jun 2018 10:07 AM

‘குருதி மா வள்ளல் கோன்’ - 42 ஆண்டு..170 முறை ரத்த தானம்..

ருவுக்கு ரத்தம் கொடுத்து உரு கொடுப்பவர் தாய் என்றால், ரத்தம் கொடுத்து சக மனிதரை காப்பாற்றி உயிர் கொடுக்கும் ஒவ்வொருவரும் ‘தாயுமானவர்’ தான். அப்படி ரத்தம் கொடுப்பதை தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டிருக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த மூத்த கண் மருத்துவர் சுகுமார்.

ஆண்டுக்கு 4 முறை ரத்த தானம் செய்வதன் மூலம் கடந்த 42 ஆண்டுகளில், 170 முறை ரத்தம் கொடுத்து நோயாளிகளை காப்பாற்றியதுடன், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

ஒரு காலத்தில் ரத்தம் கிடைப்பது அபூர்வமாக இருந்தது. பணத்துக்கு விற்கப்படும் பொருளாகவும் இருந்தது. அப்படி ஒரு காலத்தில்தான் மருத்துவ மாணவராக இருந்த சுகுமார் முதல் முறையாக ரத்தம் கொடுக்கத் தொடங்கினார். இன்று வரை தொடர்கிறது அவரது ரத்த தான பயணம்.

இதுகுறித்து சுகுமாரிடம் பேசினோம். “கடந்த 1976-ம் ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவராக இருந்தபோது, ரத்தம் கிடைக்காமல் அறுவை சிகிச்சைகளை தள்ளி வைப்பது, அதிக ரத்த போக்கு ஏற்படும்போது போதிய ரத்தம் கிடைக்காமல் உயிரிழப்பது போன்ற சம்பவங்கள் நடந்தன.

அப்போது அரசு மருத்துவமனையில் ரத்தம் கொடுத்தால், ரூ.15 அதற்கு ஈடாக வழங்குவர். இப்படி பணம் கொடுத்து ரத்த தானம் பெறுவது என்பது ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு எட்டாத விஷயமாக இருந்தது. ரத்தம் தானம் செய்தால் உடல் பாதிக்கும் என்ற தவ றான அச்சத்தை போக்கும் வகையில், ஸ்டான்லி மருத் துவக் கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து, தன்னார்வ ரத்த தான அமைப்பை தொடங்கினோம். அன்று தொடங்கிய ரத்த தானம் இன்று வரை தொடர்கிறது.

இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி பிறந்த நாள், உறவினர் வி.என்.கைலாசம் நினைவு தினம், மறைந்த டிஜிபி துரை பிறந்த நாள் என ஆண்டுக்கு 4 முறை ரத்த தானம் செய்வதை வழக்கமாக்கி கொண்டேன். எங்கிருந்தாலும் ரத்தம் கொடுப்பது எனது வாடிக்கை” என கூறினார்.

கடந்த 42 ஆண்டுகளில் 170 முறை ரத்ததானம் செய்திருக்கிறார். இவரது சேவையை பாரட்டி சக்தி மசாலா நிறுவனம், ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது உள்ளிட்ட பெற்ற விருதுகள் ஏராளம். தமிழக அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் 100 முறை ரத்ததானம் செய்ததற்காக, ‘குருதி வள்ளல் கோன்’ விருதும், 125 முறையாக உயர்ந்தபோது, ‘குருதி மா வள்ளல் கோன்’ என்ற விருதும் சுகுமாருக்கு கிடைத்தது.

தமிழகத்தில் சென்னையைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் தன் வாழ்நாளில் 187 முறை ரத்ததானம் செய்துள்ளார். இதை முந்த வேண்டும் என்பது இவரது ஆசை. அதாவது அதிகபட்சமாக 188 முறை ரத்ததானம் செய்ய வேண்டும் என விரும்புகிறார். அதற்கு இன்னும் 18 முறை பாக்கி இருக்கிறது. அந்த சாதனையையும் சுகுமார் படைப்பார். வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x