Last Updated : 15 May, 2018 10:02 AM

 

Published : 15 May 2018 10:02 AM
Last Updated : 15 May 2018 10:02 AM

கர்நாடக தேர்தல் முடிவை கணிப்பதில் என்ன சிக்கல்?

ர்நாடக தேர்தலுக்கு முன்பும், பின்பும் வெளியான கருத்துக் கணிப்புகள், ‘அடுத்த முதல்வர் யார்?’ என்ற எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கின்றன. சில நிறுவனங்கள் காங்கிரஸுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும் எனவும், சில பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளன. இதில் பெரும்பாலானவை இரண்டுக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது, தொங்கு சட்டப்பேரவை அமையும். காங்கிரஸும், பாஜகவும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆதரவு இல்லாமல் அங்கு ஆட்சி அமைக்க முடியாது என தெரிவித்திருக்கின்றன.

எதனால் இத்தகைய குழப்பமான நிலை? இந்த தேர்தல் முடிவை கணிப்பதில் உள்ள சிக்கல் என்ன? தேர்தலுக்கு முன்பும், பின்பும் வெளியான கருத்துக் கணிப்புகள் கலவையாக இருப்பது ஏன் என பல கேள்விகள் எழுந்துள்ளன.

பிராந்திய அரசியல்

கர்நாடகா மிகவும் வித்தியாசமான மாநிலம். மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, தமிழகம் ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து பல்வேறு பகுதிகளை மைசூரு மாநிலத்துடன் இணைத்தே 1956-ல் கர்நாடகா தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. இத னால் கர்நாடகா அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் பூகோள ரீதியாகவும் மற்ற மாநிலங்களைவிட வித்தியாச மானது.

மகாராஷ்டிராவில் இருந்து இணைக்கப்பட்ட பெல்காம், பீஜாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மும்பை கர்நாடகா எனவும், பீதர்,ரெய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்கள் ஹைதராபாத் கர்நாடகா எனவும் தனி அடையாளத்தோடு அழைக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மராத்தி, தெலுங்கு மொழிகளை பேசும் மக்கள் இருக்கிறார்கள். கேரளாவுடன் இருந்த மங்களூரு, காசர்கோடு பகுதிகளில் மலையாளிகளும், தமிழகத்தில் இருந்து இணைக்கப்பட்ட பெங்களூரு, கொள்ளேகால்,கோலார் தங்கவயல் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களும் பெரும்பான்மையாகவும் இருக்கிறார்கள்.

கர்நாடகாவில் ஆட்சி மொழி கன்னடமாக இருந்தாலும் தெலுங்கு, தமிழ், உருது, மராத்தி, மலையாளம், குடவா, துளு, கொங்கனி உள்ளிட்ட இன மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். இந்த மொழி பேசும் மக்கள் மத்தியில் தங்களது பிராந்திய ரீதியான அரசியல் பிரச்சினையே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. எனவே பிராந்திய பகுதிகளில் பெங்களூருவை தலைமையகமாக கொண்ட காங்கிரஸ், பாஜக, மஜத போன்ற கட்சிகளால் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. தென்கர்நாடகாவில் பரபரப்பாக உள்ள காவிரி போராட்டத்துக்கு வடகர்நாடகாவில் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. வடகர்நாடகாவின் தலை யாய பிரச்சினையான மகதாயி நதி பிரச்சினை தொடர் பாக தென் கர்நாடகாவில் அடிப்படை புரிதல்கூட இருப்பதில்லை. கர்நாடகாவில் வாழும் பிராந்திய மக்களின் மனநிலையை, தேசிய ஊடகங்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடிவதில்லை. இத னால் தேர்தல் கருத்துக் கணிப்புகளை துல்லியமாக வெளியிட முடியாமல் போகிறது.

குழம்பிய களம்

கடந்த 2013 தேர்தலில் எடியூரப்பாவும், ஸ்ரீராமுலுவும் தனிக்கட்சி தொடங்கி களம் கண்டதால் சுமார் 40 இடங்களில் பாஜக தோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோருடன் ரெட்டி சகோதரர்களும் பெரும் பலத்தோடு பாஜகவுக்கு திரும்பி இருக்கிறார்கள். இந்த பெருந்தலைகளின் வருகை கட்சியில் செல்வாக்கை அதிகரித்திருக்கும் வேளையில், வாக்காளர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் கணிப்பதில் சிரமம் இருக்கிறது. மைசூரு, மண்டியா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய தென் கர்நாடகாவில் காங்கிரஸுக்கும், மஜதவுக்கும் நல்ல செல்வாக்கு உள்ளது. இந்த பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் ஒக்கலிகர்களின் வாக்குகளை அதே வகுப்பை சேர்ந்த மஜத தலைவர் தேவகவுடாவும் அப்போதைய காங்கிரஸ் தலைவர்களான எஸ்.எம்.கிருஷ்ணா, அம்பரீஷ் ஆகியோரு அறுவடை செய்துவந்தனர். கடந்த ஆண்டு எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்துவிட்டார். காங்கிரஸில் அதிருப்தியில் இருந்த அம்பரீஷ், கடைசி நேரத்தில் மஜத முதல்வர் வேட்பாளர் குமாரசாமிக்கு நண்பனாக மாறிவிட்டார். எஸ்.எம்.கிருஷ்ணா, அம்பரீஷ் ஆகிய இருவரும் எதிர் முகாமுக்கு போய்விட்டதால், தென்கர்நாடகாவில் காங்கிரஸ் என்ன ஆகும் என்பதை துல்லியமாக கணிக்க முடியவில்லை.

முடிவை தீர்மானிக்கும் சாதி

கர்நாடக தேர்தல் முடிவை தீர்மானிக்கும் பெரும் காரணியாக சாதி இருக்கிறது.

இதனால் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய மூன்று கட்சிகளும் சாதியை அடிப்படையாக வைத்தே தேர்தலை சந்தித்தன. அண்மையில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் 6 கோடி மக்கள் வாழும் கர்நாடகாவில் தலித்துகள் 19.5 % , இஸ்லாமியர் 16%, லிங்காயத் 14%, ஒக்கலிகர் 11%, குருபர் 8%, பழங்குடியினர் 5% உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

தலித்துகள் பெரும்பான்மையாக இருப்பது தெரியவந்ததால் கர்நாடக அரசியல் தலித் மையமானதாக மாறியது. காங்கிரஸ், பாஜக, மஜத ஆகியவை தலித்துகளின் வாக்குகளை குறிவைத்து காய் நகர்த்தின. பெரும்பாலான தலித்துகளின் வாக்குகள் காங்கிரஸுக்கு சென்று கொண்டிருந்ததை தடுக்கும் வகையில், முதல் முறையாக தேவகவுடா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கைகோர்த்தார். இதனால் தலித்துகளின் வாக்குகள் பிரியும் நிலை உருவானது.

அடுத்த பெரும்பான்மை மக்களான இஸ்லாமியரின் வாக்குகளை பிரிப்பதிலும் காங்கிரஸ், மஜத இடையே போட்டி ஏற்பட்டது. தேவகவுடா தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமல்லாமல், ஓவைசியுடன் கூட்டணி வைத்தார். இந்த கூட்டணி காங்கிரஸின் இஸ்லாமிய வாக்கு வாங்கியை பதம் பார்த்திருக்கும். இதனிடையே புதிதாக முளைத்த எம்இபி என்னும் இஸ்லாமிய கட்சி, மாநிலம் முழுவதும் போட்டியிட்டது. இந்த கட்சி தொகுதிக்கு ஆயிரம் வாக்குகளை பிரித்தாலும், அது காங்கிரஸுக்கு பாதகமாகவே மாறும் வாய்ப்பு உள்ளது.

எனவே சித்தராமையா தனது பழைய ‘அஹிந்தா’ (தலித், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறும்பான்மையினர் கூட்டமைப்பு) அஸ்திரத்தை கையிலெடுத்தார். கர்நாடக வாக்காளர்களில் 60 % உள்ள இவர்களில் 40 % வாக்காளர்கள் ஆதரவளித்தார் காங்கிரஸ் 113 இடங்களை பெற்றுவிடும் என கணக்கு போட்டார். ஆனால் பாஜகவோ பிற்படுத்தப்பட்டோர், உயர் சாதியினர் அடங்கிய 60 % வாக்காளர்களில் 20 % மஜதவுக்கு வாக்களித்தாலும், 40% நமக்கு கிடைத்துவிடும். காங்கிரஸுக்கு செல்லும் வாக்குகளை பிரித்தாலே வெற்றி தானாக கிடைத்துவிடும் என கணக்குபோட்டது. இந்த சாதி கணக்கை முறையாக அணுகி, தேர்தல் முடிவை கணிப்பதிலும் பெரிய சிக்கல் இருக்கிறது.

வாக்கு வங்கி சதவீத கணக்கு

கர்நாடகாவில் கடந்த 5 தேர்தல்களில் காங்கிரஸ் 30% முதல் 40% வாக்குகளையும், பாஜக 25% முதல் 35 % , மஜத 17% முதல் 25% வாக்குகளை பெற்றிருக்கின்றன. பெரிய அளவில் போட்டி நிலவாத கடந்த தேர்தலில் 41 % வாக்கு பெற்ற காங்கிரஸ் 122 இடங்களை பிடித்தது. இந்த தேர்தலில் 3 கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுவதாலும், பல்வேறு முக்கிய பிரச்சினைகள் எழுந்திருப்பதாலும் முடிவை கணிப்பதில் சிக்கல் எழுந்துள்ளன. இதில் எல்லா கணிப்புகளையும் முறியடித்து, மக்களின் உண்மையான முடிவு நாளை தெரியவரும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x