Last Updated : 18 May, 2018 09:05 AM

 

Published : 18 May 2018 09:05 AM
Last Updated : 18 May 2018 09:05 AM

நாடக தந்தைக்கு மரியாதை: மயானத்தில் ஓர் அரசு விழா

பு

துச்சேரி அரசு ஆண்டுக்கு ஒருமுறை மயானத்தில் வைத்து அரசு விழாவை நடத்துகிறது. அங்கிருக்கும் சமாதி ஒன்றில் ஏராளமான கலைஞர்களும் அரசு அதிகாரிகளும் வந்திருந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

அந்த கல்லறைக்குள் உறங்கும் மாமனிதன் சங்கரதாஸ் சுவாமிகள். ‘தமிழ் நாடகத் தந்தை’, ‘தமிழ் நாடக மறுமலர்ச்சியாளர்’ என்றெல்லாம் போற்றப்படுவர். ஏறத்தாழ 30 ஆண்டுகளுக் கும் மேலாக தமிழ் நாடகத்தை தனது மூச்சாகக் கொண்டு சுமார் 63 நாடகங்களை அரங்கேற்றியவர். மிகவும் பிரபலமான கலைஞர்களான எஸ்.ஜி.கிட்டப்பா, டி.கே.சண்முகம் சகோதர்கள், எம்.ஆர்.ராதா போன்ற முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தியவர்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரை, புதுவைக்கு அழைத்து வந்தவர் அவரது நாடகக் குழுவில் ஆர்மோனியம் வாசித்த ஜெயராம் நாயுடு. புதுவையிலேயே அவரை தங்கவைத்து பராமரித்து வந்தார். கடந்த 1922-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி சங்கரதாஸ் சுவாமிகள் மறைந்தார். இதையடுத்து அவரது உடல், புதுச்சேரி - கருவடிக்குப்பம் மயானத் தில் அடக்கம் செய்யப்பட்டது.

சங்கரதாஸ் சுவாமிகள் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 1956-ம் ஆண்டில் தஞ்சை ராமையாதாஸ்,டி,கே.சண்முகம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க உதவியுடன் ஜெயராம் நாயுடு, பொதுவுடைமை தலைவர் வ.சுப்பையா ஆகியோரின் முயற்சியால் முழு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது.

சுவாமிகள் வசித்த ஒத்தவாடை வீதி 1969-ல், புதுச் சேரி நகரமன்ற துணைத் தலைவராக சரஸ்வதி சுப்பையா இருந்த காலத்தில் ‘சங்கரதாஸ் வீதி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கலை இலக்கிய பெருமன்றத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் எல்லை சிவக்குமார் கூறும்போது, ‘‘சுவாமிகளை புதுச்சேரிக்கு அழைத்து வந்து பராமரித்த ஜெயராம், மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் (கம்யூனிஸ்ட் இயக்க தலை வர் ) தாய் மாமன். எதிர்க்கட் சித் தலைவராக அவர் இருந்தபோதுதான் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு மணி மண்ட பம் கட்ட குழு அமைக்கப்பட்டது. மண்டபம் கட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் அப் போது ரூ.3,200 நன்கொடை அளித்தது. கடந்த 1958-ல் மயானத்தில் நடந்த திறப்பு விழாவில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உட்பட முக்கியமான நடிகர்கள் பல ரும் பங்கேற்றனர்.

சங்கரதாஸ் சுவாமிகள் பற்றி கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் பேசிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது தற்போதுகூட மண்டபத்தை சீர்செய்ய நடிகர் சங்கம் ரூ.1 லட்சம் அளித்து உதவியுள்ளது’’ என்றார்.

சங்கரதாஸ் சுவாமிகள் மறைந்த பின்னர் ஆண்டுதோறும் நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை கலை இலக்கிய பெருமன்றம் கலைஞர்களுடன் இணைந்து நடத்தி வந்தது. கடந்த 1994-ம் ஆண்டு முதல் இவ்விழா புதுச்சேரி அரசு விழாவாக கொண்டாடப்படு கிறது.

தெருக்கூத்து கலைஞர்கள் தொடங்கி நடிகர்கள் வரை பலரும் இங்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். சிவனடியார்கள் தமிழ் இசைக் கருவிகள் முழங்கி மரியாதை செய்கின்றனர். தமிழகத்தின் கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து நாடக நடிகர்கள் வருகின்றனர். அத்துடன் தென்னிந்திய திரைப் பட நடிகர்கள் சங்க நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். மயானத்தில் மேடை அமைக்கப்பட்டு அரசு விழா நடக்கும். அன்றைய தினம் இரவு, புதுச்சேரியின் ஏதாவது ஒரு பகுதியில் சுவாமிகள் எழுதிய நாடகமும் அரங்கேறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x