சுய கொள்ளிக்கு விடைகொடுங்கள்: ஆகஸ்ட் 1 - நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு நாள்

சுய கொள்ளிக்கு விடைகொடுங்கள்: ஆகஸ்ட் 1 - நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு நாள்
Updated on
1 min read

இந்தியாவில் நான்காவது இடத்திலிருந்த நுரையீரல் புற்று முதல் இடத்துக்கு வந்திருக்கிறது என சமீபத்தில் டாக்டர் சாந்தா வருத்தத்துடன் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். இதிலிருந்தே நுரையீரல் புற்றுநோயின் தீவிரத்தை புரிந்துகொள்ளலாம்.

பெங்களூர், செயின்ட் ஜான்ஸ் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவத் துறையில் இணைப் பேராசிரியராக இருப்பவர் டாக்டர் உமா தேவராஜ். மருத்துவ இணையதளங்களில் நுரையீரல் புற்று தொடர்பாக எண்ணற்ற கட்டுரைகளை எழுதி வருபவர். மருத்துவம் சார்ந்த நோயாளிகளின் கேள்விகளுக்கு பல மக்கள் தொடர்பு சாதனங்களின் மூலம் பதில் அளித்து வருபவர். நுரையீரல் புற்றுநோயின் தாக்கங்கள், அதைத் தவிர்க்கும் வழிகள் குறித்து ‘தி இந்து’விடம் அவர் பேசியதிலிருந்து…

உயிர் இழப்புக்கு காரணமாகும் நோய்களில் நுரையீரல் புற்றும் ஒன்று. 85 சதவீதம் பேருக்கு இந்த நோய் புகைப் பிடிப்பதனால் மட்டுமே வருகிறது. நீண்டகால புகைப் பழக்கம் இருக்கும் 10 சதவீதம் பேருக்கு இந்நோய் உறுதியாக வருகிறது.

புகைப் பழக்கம் இல்லாதவர் களுக்கும் கதிர்வீச்சு தாக்குதல், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீடுகளில், பணியிடங்களில் இருப் பவர்களுக்கும் நுரையீரல் புற்று வருகிறது. நெசவு, பஞ்சு பொதி மெத்தைகள் தயாரிக்கும் தொழிலில் இருப்பவர்களும் பீடி சுற்றும் தொழிலில் இருப்பவர்களும்கூட நுரையீரல் புற்றுக்கு ஆளாகின்றனர்.

வெளிப்புற காற்று மாசு காரண மாக 2 சதவீதம் பேர் நுரையீரல் புற்றுக்கு ஆளாகின்றனர். வீட்டின் உள்ளே சமையல் அறையில் கரியைக் கொண்டு பற்றவைக்கும் அடுப்பு, சாண வறட்டியை எரிப்பதன் மூலம் உண்டாகும் புகையை சுவாசிப்பதின் மூலம் நுரையீல் புற்று வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறது மருத்துவ ஆய்வு. சமையலறையில் உருவாகும் காற்று மாசு காரணமாக தொடர் தும்மல், ஆஸ்துமா போன்ற மூச்சு தொடர்பான நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

நுரையீரல் புற்றைத் தவிர்க்க சில எளிய வழிகள்

புகைப் பிடிப்பதை நிறுத்து வதற்கு நல்ல நாள் பார்க்காதீர் கள். உடனே நிறுத்துங்கள். நீங்களும் உங்களின் புகைப் பிடிக்கும் நண்பரும் இணை பிரியாதவர்களாக இருந்தாலும் சரி, அவர் புகைப்பிடிக்கும் நேரத்தில் அவருக்கு `கம்பெனி’ கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். இப்படி புகைப் பிடிப்பாளருடன் `கம்பெனி’ கொடுப்பவர்களுக்கு 24 சதவீதம் நுரையீரல் புற்று வருகிறது என்கிறது ஆய்வு. முகமூடி போன்ற தற்காப்பு சாதனங்களை தொழில் புரியும் இடங்களில் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இவற்றை சில நிறுவனங்கள் முறையாகக் கடைபிடிப்பதில்லை.

குப்பைகளை எரிக்காதீர்கள். பிளாஸ்டிக், டயர் போன்றவற்றை மறுசுழற்சி முறையில் வேறு பயன்பாட்டுக்கு உட்படுத்துங்கள். உங்களின் வீட்டு சமையலறையை காற்றோட்டமானதாக அமையுங்கள். திடப் பொருட்களை எரியவிடாதீர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in