

மதுரை ஆதீனம் கனவில் சிவபெருமான் வந்தாராமே(?!).. அதுபோல மற்ற அரசியல் தலைவர்கள் கனவில் யார் வருவார்கள் என்று ஒரு கற்பனை...
கலைஞர்:
இப்போதெல்லாம் பல பிரச்சினைகளால் தூக்கமில்லாமல் தவித்து கொண்டிருக்கும் வேளையில் நேற்று என்னையும் அறியாமல் உறங்கிவிட்டேன். அப்போது என் கனவில் ஒரு அம்மையார் வந்தார். யார் என்று கேட்டேன் பராசக்தி என்றார்.
நான் வசனம் எழுதிய முதல் படத்தின் பெயர் உள்ளவர் என்ற அளவிலே சற்று மகிழ்வுற்று, ‘அம்பாளா பேசுவது’ என்றேன்... பதிலுக்கு அவர் ‘அம்பாள் எப்போதய்யா பேசினாள்’ என்று என் வசனத்தையே பேசாமல் ‘ஆம்’ என்றார். ‘நாத்திகன் என் கனவில் எதற்கு வந்தீர்?’ என்றேன். ‘அப்போதாவது நான் இருக்கிறேன்’ என்று சொல்வீரே என பதிலுரைத்தார்..! பெரியார் வழி வந்த நான் சட்டென அதற்கு ‘நீங்கள் நிஜத்தில் அல்லவா வரவேண்டும்..!’ என்று அவரை மடக்கினேன்... அதற்கு மறுமொழி சொல்ல முடியாமல் அவர் தடுமாறினார்...!
‘எத்தனையோ சிக்கலான வேளைகளில் உங்கள் கிடுக்கிப்பிடி கேள்விகளால் எதிர் கட்சியினரை மடக்குவது போல எம்மை மடக்கிவிட்டீர்’ என்றார்.. அந்த புகழுரையில் மயங்கிடாது ‘வந்த காரணமென்ன’ என்றேன். உமக்கு என்ன வரம் வேண்டுமென்றார்..!
கடவுள் மறுப்பு கொள்கையுடைய நம்மை இவர் எள்ளல் செய்கிறாரோ என ஐயமுற்று, ‘என்ன வரம் வேண்டுமானாலும் தருவீரா’ என்று கேட்டேன்..! அவரும் ‘என்னால் முடியாததில்லை. உமக்கு என்ன வேண்டும் கேள்’ என்றார் மிகுந்த அகம்பாவத்துடன். அவர் கொட்டமடக்க. நானும் சற்றும் தளராது கேட்டேன், ‘அப்படியா நீங்கள் நம் அழகிரியை சமாதானப் படுத்துங்கள்’ என்றேன். சட்டென்று மறைந்துவிட்டார் அந்த பராசக்தி..! கழகக் கண்மணிகளே உங்களுக்கு இதிலிருந்தே உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியவில்லையா கடவுள் இல்லையென்று..!
ஜெயலலிதா:
என் கனவில் நேற்று.. “நீங்கள் வருவீர்களா.. வருவீர்களா..” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்... ஹெலிகாப்டரே இன்றி வானத்திலிருந்து ஒரு பெண் இறங்கினார்.. அவர் மேரி மாதா போலவும் இருந்தார் ஜெகமாளும் ஆதிசக்தியாகவும் தெரிந்தார்.. ஆனால் இந்த முகம்..! இந்த முகத்தை எங்கு பார்த்தோம் என நான் வியப்போடு, யோசித்தேன்.. அடடா இது நம் முகம் அல்லவா..! நம் முகம் எப்படி? என யோசித்தேன்.. நமது ரத்தத்தின் ரத்தங்கள் பிளக்ஸ் பேனரிலும், போஸ்டரிலும் அவ்வப்போது நம்மை இப்படி புகழ்வதால் கனவில் வந்தவரும் என்னைப்போலவே தோன்றியது காலத்தின் கட்டாயம்.. அடடா வந்தது நானே தான்... நானே முதல்வர், நானே பிரதமர், நானே கடவுள்..!
அவர் என்னிடம் ‘நீங்கள் தான் அடுத்த பிரதமர்’ என பெண் சம்பத் போல் கூறி(வி)னார்.. இது போன்ற புகழுரைகளை கொஞ்சமும் விரும்பாத நான்... போனால் போகட்டும் என விரும்புவதுபோல நடித்தேன்.. ‘அடுத்த பிரதமர் நான்தானே’ என்று மீண்டும் அவரிடம் கேட்டேன்.. ‘மதுரை ஆதீனத்தின் கனவில் சிவனே அதை கன்பார்ம் செய்துவிட்டாரே’ என்பதை எனக்கு இன்பார்ம் செய்தார்.. பதவியேற்பு விழாவிற்கு வருகிறேன் எனக் கூறி மின் வெட்டாய் மறைந்தார்..!
விஜயகாந்த்:
மக்களே நேத்து என் கனவுல யாரு வந்தாங்கன்னு கேட்டா தெகய்ச்சு போய்டுவிங்க..! யோவ் அந்த கொடிய இறக்கு. மூஞ்சிய மறைக்குதில்ல.. இப்படி செஞ்சா நான் பேச வந்தது மறந்துடும்... ஆங்ங்... இப்ப நான் என்ன சொல்லிகிட்டு இருந்தேன்...? (அனைவரும் “கனவுல... உங்க கனவுல...”)
ஆங்ங் கரக்ட்டு... எங்கனவுல பாண்டி முனி சாமி வந்தாரு வந்து...ஏலே கருப்பு எம்ஜியாரே.. நீ கலக்குறய்யான்னாரு...நான் ஒண்ணுஞ்சொல்லலை.. என்னய மாதிரியே நீயும் நாக்க துருத்தி கண்ணு செவக்க பாத்து எப்பவும் ஆவேசமா பேசிகிட்டு இருக்கறத பாத்தா அப்படியே என்னய பாக்குற மாதிரியே இருக்குன்னாரு..! அதுக்கும் நான் ஒண்ணுஞ்சொல்லலை.. “தப்பு நடந்தா பட்டுன்னு போடணும்.. கோவம் வந்தா அடக்க கூடாதுன்னு அப்படியே நம்மளை பாலோ பண்ற நீ’’ அப்படின்னார்.. எல்லாத்தையும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா பேசிடுற அப்படின்னாரு..! அது என் குணஞ்சாமின்னேன்..! ரொம்ப சந்தோசப்பட்டாப்டி...!
கொஞ்சம் கோவத்தை கொறச்சா அடுத்த பிரதமர் யாருன்னு கை காட்டுற தகுதி உனக்கு வந்துடும்ன்னாரு..! 14 தொகுதியும் ஜெயிக்க ஆசீர்வாதம் கொடுங்க சாமின்னேன்... அவரும் கொடுத்திருக்காரு. அதனால் மக்களே நாமதான் ஜெயிக்கப்போறோம்.
ராகுல்:
நேற்று ஒரு குட்டிக்கனவு தமிழகத்தில் நடப்பது போல்.. அதில் கடவுள் யாரும் வரவில்லை... எங்களுக்கு கடவுளாய் தெரியும் தமிழக மக்கள் நிறைய பேர் வந்தார்கள்.. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண வேண்டும் என்ற உயரிய நோக்கத்தால் ஏழ்மையை ஒழிக்காமல் இருக்கும் இயக்கம் எமது காங்கிரஸ் பேரியக்கம்..!
அந்த இயக்கத்தின் பல ஆணிகளில் ச்சே... ஆணிவேர்களில் ஒருவரான சிதம்பரம்ஜியின் தொகுதிக்குள் நிற்கிறேன்.. சுற்றிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூட்டம் (இது கனவு என்பதால் ஏற்றுக்கொள்ளவும்) ஏராளமான மூதாட்டிகள் முகத்தில் மகிழ்ச்சியோடு ‘கை’ அசைத்தார்கள்...!
நானும் கை அசைத்துக் கொண்டே..கார்த்தி சிதம்பரம்ஜியிடம் யார் இவர்கள் என்றேன்.. இவர்கள் எங்கள் ஊர் ஆச்சிமார்கள் என்றார்.. வழக்கம் போல் பாதுகாப்பு வளையம் தாண்டி அவர்களுடன் கை குலுக்க மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்தேன்! பாட்டிகள் அத்தனை பேரும் மோடிகளாக மாறினர். நான் சட்டென திரும்பிவிட்டேன். கனவும் கலைந்தது.!