Last Updated : 16 Feb, 2018 09:05 AM

 

Published : 16 Feb 2018 09:05 AM
Last Updated : 16 Feb 2018 09:05 AM

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு என்னதான் பிரச்சினை?: உற்பத்தி செய்த விளைபொருட்களை விற்க திண்டாடும் விவசாயிகள்

விற்பனை குழுக்கள் மூலம் வேளாண் விளை பொருட்களை வாங்கவும் விற்கவும் அதை முறைப்படுத்தவும் தமிழக அரசால் 1987-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளை பொருள் விற்பனை (ஒழுங்கு முறை) சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்டவை தான் வேளாண் விற்பனை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள்.

தமிழகத்தில் 21 விற்பனை குழுக்கள் செயலில் உள்ளன. இந்த குழுக்களின் கீழ் 268 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், 15 சோதனை சாவடிகள், 108 ஊரக சேமிப்பு கிடங்குகள் மற்றும் 108 தரம் பிரிக்கும் மையங்கள் செயல்படுகின்றன.

மறைமுக ஏல முறையின் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களான நெல், உளுந்து, பருத்தி, தட்டைப் பயிர், மணிலா, கம்பு, கேழ்வரகு, சோளம்,எள், தேங்காய், மரவள்ளி உள்ளிட்டவை இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

தரம்பிரிக்கும் வேளாண் விளைபொருட்களுக்கு இலவசமாகவும், விற்பனை அதிகமாக இருக்கும் பட்சத்தில் பற்றுறுதி கடனையையும் விற்பனை கூடம் வழங்குகிறது.

போராட்டக் களமான

கொள்முதல் நிலையங்கள்

அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியிலும் உள்ள விவசாயிகள், தங்களது விளைபொருட்களை இங்குள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சம்பா மற்றும் குறுவை சாகுபடி காலங்களில் விற்பனைக் கூடங்களில் விளைபொருட்கள் வரத்து வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும். தற்போது சம்பா சாகுபடி முடிந்த நிலையில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஆனால் கொண்டு வரப்படும் விளைபொருட்களை விற்பதற்குள் படாதபாடு படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த 15 நாட்களாக விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் சாலை மறியல், முற்றுகைப் போராட்டம் என ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன் உச்சகட்டமாக உளுந்தூர்பேட்டை கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வாயில் கதவை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தினங்களுக்கு முன் விருத்தாசலம் கொள் முதல் நிலையத்தில் மேலப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த மணிக்கண்ணன் என்ற விவசாயி, தான் கொண்டு வந்த நெல் மூட்டைகள் 10 தினங்களுக்குப் பின் எடை போடப்பட்டு, அதில் 7 மூட்டைகளை நிராகரித்ததால், மனமுடைந்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை தடுத்து மீட்டுள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால், விவசாயிகள் வேதனையின் விளிம்பிற்கே சென்றுள்ளனர்.

வாரக் கணக்கில் காத்திருப்பு

விருத்தாசலம் விற்பனைக் கூடத்திற்கு வந்திந்த காவனூரைச் சேர்ந்த விவசாயி என்.முத்துசாமி என்பவர் இதுதொடர்பாக கூறும்போது, “கடந்த புதன்கிழமை 65 நெல் மூட்டைகளை கொண்டு வந்தேன். இதுவரை எடை போடவில்லை.

விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை எடை போடவோ, சாக்கு மற்றவோ கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் நிர்வாகம் அறிவித்திருக்கும் நிலையில், ஒரு மூட்டைக்கு எடை போட ரூ.9-ம், சாக்கு மாற்ற ரூ.8-ம் வசூலிக்கின்றனர்.

எடையாட்கள். மேலும் வெளியூர் வியாபாரிகள் வந்தால் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும், ஆனால் உள்ளூர் வியாபாரிகள் அதை தடுக்கும் வகையில் செயல்பட்டு, வெளியூர் வியாபாரிகளை ஏலத்தில் பங்கேற்க விடாமல் தடுக்கின்றனர். இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் நிலவுவதால் பாடுபட்டு உற்பத்தி செய்த நெல்லை விற்பதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது’’ என்று தெரிவித்தார்.

கீரனூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் கூறுகையில், “120 நெல் மூட்டைகள் கொண்டு வந்து 8 நாட்களாகிறது. இதுவரை எடை போடவில்லை. 8 நாட்களாக இரவு பகலாக கொசுக்கடியில் காவல் காத்துக் கொண்டிருக்கிறேன். 8 நாட்களாக வெளியில் தான் சாப்பாடு. காத்திருந்தாலும், விற்ற பொருளுக்கு கையில் காசு கிடைக்குமா என்றால், அதுவுமில்லை.பேங்க்லதான் பணம் போடுவோம்னு சொல்றாங்க. பேங்க் போனா, ‘பணம் இன்னும் வரல’ன்னு சொல்லி அலைக்கழிக்கிறாங்க! எடை போடுவதற்கு வெளியாட்களை அனுமதிக்கிறதில்லை.நெல் மூட்டைகளை திறந்த வெளியில் வைத்திருப்பதால், விஷ ஜந்துக்கள் மூட்டைகளுக்கு இடையே பதுங்குவதால், விவசாயிகள் பாம்பு கடிக்கும் ஆளாகின்றனர். இயற்கை உபாதைக்கான கழிப்பறைகள் இல்லை. உணவு கூடம் கிடையாது.

ஆன்லைன் பண பரிவர்த்தனையை கைவிட்டு, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு உடனடியாக பணத்தை வழங்க வேண்டும், நெல் எடையிடுதலை வரிசைப்படுத்த வேண்டும், எடை போட வசூலிக்கும் பணத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கை’’ என்கிறார்.

இதுதொடர்பாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பன்னீர்செல்வத்திடம் பேசியபோது, “குறுவையைக் காட்டிலும் சம்பா பருவத்தில் அறுவடை கூடுதலாக இருக்கும். அனைவரும் ஒரே நேரத்தில் கொண்டு வந்து உடனடியாக விற்பனை செய்ய வேண்டும் என கோருவது எந்த விதத்தில் நியாயம்? 11 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தில் குடோன்களில் 11 ஆயிரம் மூட்டைகளும், திறந்த வெளியில் 8 ஆயிரம் மூட்டைகளும் வைக்க முடியும். ஆனால் தற்போது வளாகத்தினும் 23 ஆயிரம் மூட்டைகள் உள்ளன. இது தவிர தினசரி 15 ஆயிரம் மூட்டைகள் வரத்தும், 10 ஆயிரம் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு வியாபாரிகள் மூலம் வெளியே அனுப்பப்படுகிறது.

கொள்முதல் நிலையத்தின் நிலைமை விவசாயிகளுக்குத் தெரிந்தும், அவர்கள் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல. கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எடை போடுவதற்கு கட்டணம் கேட்டால், புகார் செய்ய வலியுறுத்தி வருகிறோம். இதுவரை எவரும் புகார் அளிக்கவில்லை. கூடுமானவரை அவர்களுக்கு உதவவே நாங்கள் உள்ளோம். விவசாயிகள் கொஞ்சம் பொறுமை காத்து, ஒத்துழைத்தாலே அவர்களது பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். உள்ளூர் வியாபாரிகள், வெளியூர் வியபாரிகள் என நாங்கள் எவரையும் பிரித்துப் பார்ப்பதில்லை’’ என்று கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x