

இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள், வாரத்தில் ஒரு நாள் கூட ஓய்வின்றி, ஒரு நாளுக்கு 8 மணி நேரத்திற்கும் அதிகமாகப் பணிபுரிகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.
உலகிலேயே மிக அதிகமான குழந்தை தொழிலாளர்களைக் கொண்டுள்ள இந்தியாவில், குழந்தைகள் உரிமைக்காக குரல் கொடுக்கும் ’குழந்தைகள் உரிமைகளும் நீங்களும்’ (Child Rights and You - CRY) என்ற அரசு சாரா அமைப்பு மற்றும் ஃபிலிப்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ‘க்ரை’ அமைப்பு சமீபத்தில் குழந்தை தொழிலாளர்களின் அவல நிலை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் முயற்சியாக ‘Click Rights Campaign’ என்ற பிரச்சாரத்தின் முடிவாக வெளியிடப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு, பல்வேறு துறைகளில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களின் அறிவு, இயல்பு, பழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களிடம் உள்ள கல்லாமை, அவர்களின் உரிமைகளில் வழிமுறைகள் வகுக்கப்படாதமை போன்றவை இதற்கான காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதுகுறித்து 'க்ரை' அமைப்பைச் சேர்ந்த பிராந்திய இயக்குநர் (வடக்கு) சோஹா மொய்த்ரா கூறுகையில், “ஒரு காலத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருப்பவர்கள், பின் தொழிலாளர்களாக மாறுகின்றனர். இதனால், அவர்களுக்கு படிப்பறிவோ அல்லது தங்களது உரிமைகளை தட்டிக்கேட்கும் வழிமுறைகளோ தெரியாமல் போகிறது.
இதில், மிக மோசமாக பாதிக்கப்படுவது குழந்தைகளே. ஏனெனில், அவர்கள் மிகக் குறைவான ஊதியத்தில், எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல், மிக நீண்ட நேரம் பணிபுரிய வைக்கப்படுகிறார்கள்.”, என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.