புறநகர் நிலவரம்: பெருங்களத்தூர் டூ மறைமலை நகர்

புறநகர் நிலவரம்: பெருங்களத்தூர் டூ மறைமலை நகர்

Published on

சென்னையின் மையப் பகுதியில் வீடோ, நிறுவனமோ அமைப்பது சாத்தியம் அல்ல. ஒன்று நிலத்தின் மதிப்பு அதிகம். இரண்டாவது சென்னை நகருக்குள் பெரிய அளவுக்கு இடங்கள் இல்லை. புறநகர் பகுதிக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

அந்த வகையில் நிறுவனங்களின் குறி இப்போது ஜிஎஸ்டி (கிராண்ட் சதர்ன் ட்ரங்) சாலை பக்கம் திரும்பியிருக்கிறது. வளர்ந்து வரும் மென்பொருள் நிறுவனம் பொத்தேரிக்கு அருகே 20 ஏக்கருக்கு மேல் இடம் வாங்கிக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

அதனால் பெருங்களத்தூர் முதல் மறைமலைநகர் வரையிலான பகுதி எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய அந்தப் பகுதிக்குச் சென்றோம்.

இது முக்கியச் சாலை என்பதால் சாலையின் அருகே குடியிருப்புகள் பெரிதாக இல்லை. சாலையின் உள்ளேதான் குடியிருப்புகளை அமைத்து வருகிறார்கள்.

இருந்தாலும் ஃபிளாட் கலாச்சாரம் இந்தப் பகுதியில் பெரியதாக இல்லை. அதேபோல பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளும் நடைபெறவில்லை.

ஊரப்பாக்கம் பகுதியில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிக்குச் சென்றோம்.

அந்தக் குடியிருப்பில் சுமார் 200 வீடுகள் இருக்கும், சதுர அடி 3,500 ரூபாய் அளவுக்கு விற்கப்படுகிறது. ஆனால் இந்த வீடுகள் ஆரம்பித்த புதிதில் சதுர அடி 2,500 ரூபாய்க்குதான் விற்கப்பட்டிருக்கின்றன.

மேலும் இங்கு வீடு வாங்கியிருக்கும் பலரும் முதலீட்டுக்காகவே வாங்கி இருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் பகுதியில் 650 சதுர அடிக்கு இரண்டு படுக்கை அறை வசதி கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளும் இருக்கின்றன. கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய சொகுசு அடுக்குமாடி வீடுகளும் கட்டப்படுகின்றன.

சென்னை நகருக்குள் வேலை பார்ப்பவர்கள் இந்தப் பகுதியில் குடியிருப்பதில்லை. ஆட்டோமொபைல் நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வேலை செய்பவர்களுக்கு இது வசதியாக இருப்பதால் இங்கு தங்குகிறார்கள்.

பொத்தேரி பகுதிகளில் வீட்டு மனைகள் காலியாக இருக்கின்றன. அங்கு சில தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த இடத்தில் யார் வந்து தங்குவார்கள் என்று விசாரித்தால், குடும்பங்களை நம்பி யாரும் இங்கு வீடு கட்டுவதில்லை. படிக்கும் கல்லூரி மாணவர்களை நம்பி அங்கு வீடு கட்டுகிறார்கள், குறிப்பாக வெளி மாநில, வெளிநாட்டு மாணவர்களுக்கு எப்படியும் வீட்டை வாடகைக்கு விடலாம் என்ற எண்ணத்தில் அங்குக் குடியிருப்புகள் உருவாகின்றன.

அந்தப் பகுதியில் அரசாங்கத்தின் வழிகாட்டி மதிப்பு 1,000 ரூபாய். சந்தை மதிப்பில் 1,300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மனை வாங்கி அதற்குப் பிறகு கட்டிடம் கட்ட சதுர அடிக்கு 1,500 ரூபாய்க்கு மேல் ஆகும். இதற்கு ஃபிளாட் வாங்கலாம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் மனை வாங்கும்போது மொத்த நிலமும் கிடைக்கும். ஆனால் ஃபிளாட் வாங்கும் போது அதற்கேற்ப யூடிஎஸ்(undivided share) கிடைக்கும். ஆனால் இப்போதைக்குக் குடியிருப்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.

மேலும் கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வண்டலூரில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று 2013-ம் ஆண்டு மே மாத தொடக்கத்தில் முதல்வர் அறிவித்திருந்தார்.

இதற்கான கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டால் இந்த இடத்தின் மதிப்பு இன்னும் உயர வாய்ப்பு இருக்கிறது.

முதலீட்டுக்கு என்ன காரணம்?

முக்கியமான கல்லூரிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிர சிறப்புப் பொருளாதார மண்டத்தில் வேலை நடந்து வருகின்றன. புதிதாக ஒரு நிறுவனம் செயல்பட ஆரம்பிக்கும் பட்சத்தில் அந்த இடம் கொஞ்சம் பரப்பரப்பாகி விடும். பேருந்து வசதி இருப்பது மட்டுமல்லாமல், சென்னையை இணைக்கும் ரயில் வசதியும் இருக்கிறது.

ஓட்டல்கள் இப்போது வர ஆரம்பித்திருகின்றன. ஷாப்பிங்மால்கள் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. சென்னை நகரில் இருப்பது போல திரையரங்கு அங்கு அமையவிருப்பதாக அந்தப் பகுதி நபர்களிடம் பேசியதிலிருந்து தெரிகிறது.

பாதகங்கள்

ஆனாலும் சில பாதகங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஜிஎஸ்டி சாலையில் இருக்கும் தரத்தில் கொஞ்சம் கூட உட்புறச் சாலைக இல்லை. மேலும் உடனடியாகக் குடியேறுவதற்கு ஏற்ற சூழ்நிலையும் இல்லை.

இருந்தாலும் வளர்ந்து வருவதற்கான சூழ்நிலையில் வளர்வதற்கு முன்பே வாங்குவதுதான் புத்திசாலித்தனம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in