

இ
யந்திரமயமான இன்றைய நவீன யுகத்திலும் ஈர மனதுக்காரர்கள் பலர் சமூக சேவையில் ஈடுபடுகின்றனர். பலரும் பல தளங்களில் சேவையை மேற்கொள்கின்றனர். இவர்களை ஒருங்கிணைத்தால் சரியான நபருக்கு சரியான உதவியை வழங்க முடியும், சேவையின் வட்டமும் விரிவுபடும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது ‘மூன்றாவது சக்தி’.
சென்னை கோடம்பாக்கத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வந்த பாலசுப்பிரமணியன்தான் இதற்கு விதை போட்டவர். இவரின் இந்த பணியை அறிய அவரை சந்தித்தோம். மூன்றாவது சக்தி என பெயருக்கான விளக்கத்தை கேட்டோம். “மக்களுக்கு தற்போது அரசு சக்தி, அரசியல் சக்தி உதவுவதுபோல மூன்றாவது ஒரு சக்தி உதவ வேண்டும் என்ற நோக்கில் தான் எங்களது இந்த சேவைப் பணிக்கு மூன்றாவது சக்தி என பெயரிட்டுள்ளோம்” என்றார்.
தொடர்ந்து நம்மிடம் அவர் பேசியது:
பலரின் சமூக சேவை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே உள்ளது. அவர்களை ஒருங்கிணைக்க முதலில் நல்லோர் வட்டம் என்ற அமைப்பை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தினேன். இப்போது மூன்றாவது சக்தி ஆகி இருக்கிறது. இதன்மூலம் சமூக சேவையாற்றும் சுமார் 100 பேரை ஒருங்கிணைத்தேன். மாதம்தோறும் கடைசி சனிக்கிழமை சந்திப்போம். அதில் ஒருமாத கால பணிகள் பற்றி பரிசீலிப்போம். இந்த சந்திப்பின் மூலம் புதிய புதிய சமூக சேவையாளர்களின் அறிமுகமும், தொடர்பும் கிடைக்கும். சரியான பயனாளிக்கு சரியான உதவியை வழங்க இந்த சந்திப்பு பயன்படும். இவ்வாறு பயனடைந்தோர் 10 ஆயிரம் பேர் என்கிறார் பெருமையுடன்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள இச்சேவை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என கூறிய அவர், பள்ளி மாணவர்களை தலைவர்களாக உருவாக்க ‘மாணிக்க மாணவர்கள்’ என்ற விருதை ஏற்படுத்தி வழங்கி வருகிறார். தூய்மை, சமூக தொடர்பு உள்ளிட்டவற்றில் சிறந்த பள்ளிகளுக்கு ‘கல்வி கோயில் விருது’ வழங்குகிறார். இதுவரை 4 பள்ளிகள் விருதை வென்றுள்ளன. சமூக சேவையின் மூன்றாவது சக்தியாக சமூக சேவையாளர்கள் இருக்கிறார்கள். சிறுசிறு உதவிகளை ஒருங்கிணைத்து பேருதவியாக மாற்றும் மாயாஜாலத்தை நிகழ்த்தி வரும் பாலசுப்பிரமணியன் பாராட்டுக்குரியவர்.