Last Updated : 02 Jan, 2018 11:59 AM

 

Published : 02 Jan 2018 11:59 AM
Last Updated : 02 Jan 2018 11:59 AM

மாணவர் தோழர் சின்னப்பன்: ஒரு பேராசிரியருக்குப் பின்னால்..

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் கல்வியியல் துறை தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன். சக ஆசிரியர்கள் இவரை சின்னப்பன் என்கிறார்கள் ஆனல், மாணவர்கள் இவரை தோழர் என்றே விளிக்கிறார்கள்!

சிரமப்பட்டவர் சின்னப்பன்

இளம் வயதில், கல்வி கற்க வசதியில்லாமல் ரொம்பவே சிரமப்பட்டவர் சின்னப்பன். படிப்புக்கு பணம் திரட்ட மதுக்கூடங்களில்கூட வேலை செய்தவர். அதனால், இயல்பாகவே படிப்பின் அருமையையும் அதற்காக பொருளீட்டுவதில் உள்ள கஷ்டங்களையும் இவர் நன்றாகவே உணர்ந்திருந்தார். பேராசிரியராக வந்தபிறகு, தமிழ் திரைப்படங்களில் திருநங்கைகள், கல்வியியல் துறையில் குழந்தைகள் உரிமைகள், நாடகத் துறையில் ஒடுக்கப்பட்டோர் அரங்கு என பத்துத் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி முனைவர் பட்டங்களை பெற்ற இவர், இருபது நூல்களையும் எழுதியுள்ளார்.

இவரது ‘நீ நினைத்தால்’ என்ற நாடகத் தொகுப்பு நூல் சென்னை எத்திராஜ் கல்லூரி மற்றும் திருச்சி தூய வளனார் கல்லூரிகளில் இலக்கியப் பாடமாக உள்ளது. சென்னை லயோலா கல்லூரியில் பயின்ற செல்லதுரை என்ற மாணவர், ‘கு.சின்னப்பன் எழுத்துக்களில், பேச்சுக்களில் விளிம்புநிலை மக்கள் நோக்கு’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

மாணவர்களுக்கு உதவி

வறுமையை தனது உழைப்பால் வென்று கல்வியில் சாதித்த சின்னப்பன் இப்போது, விளிம்பு நிலையிலிருக்கும் ஏழை மாணவர்களின் கல்விக்காக இயன்றவரை உதவி வருகிறார். இதற்காகவே தனது ஊதியத் தில் ஐந்தில் ஒரு பகுதியை எடுத்து வைக்கும் இவர் கடந்த சில ஆண்டுகளில், 275 மாணவ - மாணவியரின் கல்விக்கு உதவியிருக்கிறார்.

தமிழ் பல்கலைக்கழகத்தில் மட்டுமில்லாது தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் திருவதிக்குன்னத்திலும் கல்விக்கான இவரது சேவை நீள்கிறது. அங்கு, ‘கல்வி வழிகாட்டி மையம்’ என்ற அமைப்பை 18 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கியிருக்கிறார் சின்னப்பன். இதன் மூலமும் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டி வருகிறார்.

chinnapan_1.jpg சின்னப்பன் வறுமை என்னை துரத்தினாலும்

“ஐந்தாம் வகுப்பு படிக்கிறப்பவே அம்மாகூட வேலைக்குப் போவேன். கிடைக்கிற காசுல எனக்கான நோட்டு, பேனா வாங்கிப்பேன், அம்மாவுக்கு பொங்கலுக்கு கிடைக்கும் புடவையை சட்டையா தெச்சுப் போட்டுட்டு ஸ்கூலுக்குப் போயிருக்கேன். சில நேரத் துல, பரீட்சை ரிசல்ட் அனுப்புறதுக்கு கார்டு வாங்கிக் குடுக்கக்கூட கையில காசில்லாம அவமானப் பட்டுருக்கேன்.

இப்படி, வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வறுமை என்னைத் துரத்தினாலும் கல்விதான் நம்மை உயர்த்தும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் படிச்சுக்கிட்டே அங்கே விடுதிக் காப்பாளர் வேலையும் பார்த்தேன். அப்ப அங்கே, என்னைப் போலவே வறுமையில் இருந்த பல மாணவர்கள் நோட்டு, பேனாகூட வாங்க முடியாம இருந்தாங்க. அவர்களுக்காக என்னோட 300 ரூபாய் சம்பளத்துலருந்து அம்பது ரூபாயைத் தந்தேன்.

இப்படித்தான் என்னையும் கல்வியில் வளர்த்துக்கிட்டு மத்தவங்களுக்கும் ஏதோ என்னாலான உதவிகளை செய்ய ஆரம்பிச்சேன் ” என்று தான் கஷ்டப்பட்டு வந்த பாதையை விவரித்தார் சின்னப்பன்.

தன்னம்பிக்கை பேரொளி

தொடர்ந்து பேசிய அவர், “படிக்காத குழந்தையோ, குடும்பமோ, ஊரோ இருக்கக் கூடாது என்று விசாலப் பார்வை பார்ப்பவன் நான். தினம் ஒருவர் மற்றவருக்காக ஒரு ரூபாய் செலவழித்தால், ஒருவர் இன்னொருவருக்கு கல்விக்காக உதவி செய்தால் நாட்டில் படிக்காத ஏழை மாணவர்களே இருக்க மாட்டார்கள்” என்று சொன்னார்.

இலக்கிய மேடைகளிலும் கல்லூரி விழாக்களிலும் தன்னம்பிக்கை உரைகளால் மாணவர்களைக் கவர்ந்திருக்கும் சின்னப்பன், சுயமுன்னேற்றப் பயிலரங் குகள், வாழ்க்கைத்திறன் பயிலரங்குகளிலும் தொடர்ந்து பேசிவருகிறார். அதற்காக இவர், ‘தன்னம்பிக்கை பேரொளி’ உள்ளிட்ட ஏழு விருதுகளாலும் கவுரவிக்கப்பட்டுள்ளார்.

பொறுப்புள்ள ஒரு ஆசானாய் மட்டுமின்றி மாணவர்களின் பிரச்சினை எதுவாக இருந்தாலும் ஒரு தோழனைப் போல பொறுமையாகக் கேட்டு தீர்த்து வைக்கிறார் சின்னப்பன். அதனால் தானே இவரை மாணவர்கள் தோழர் என்று தோழமையுடன் அழைக்கிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x