சாமியாத்தாள் என்கிற மூலிகைத்தாய்

சாமியாத்தாள் என்கிற மூலிகைத்தாய்
Updated on
2 min read

லை தாங்கி, கோபுரம் தாங்கி, முதியோர் கூந்தல், கள்ளு முலியான், மிளகு தக்காளி, தைவேளை, ஈஸ்வர மூலி, செந்நாயுருவி, மூக்கிரட்டை, ஆனை நெருஞ்சி முள், செருப்படை, உனிபூடு, தவசி முருங்கை, ஆகாச கருடன், வெள்ளை குண்டுமணி, ஈஸ்வர மூலிகை இப்பெயர்கள் நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இவை அனைத்தும் மூலிகைப் பெயர்கள். பெயர்களே அறியாத நிலையில் அந்தச் செடிகளை அடையாளம் காண்பதும் அரிது.

இதுபோன்ற பல்வேறு மூலிகைகளை அடையாளம் கண்டு, அதை அறிமுகம் செய்வதோடு, மூலிகைகளுடன் தள்ளாத வயதிலும், தளராமல் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார் ஈரோடு மாவட்டம் கணபதிபாளையத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் (64). அவரது பயணம் குறித்து கேட்டபோது, கண்களில் மகிழ்ச்சி பொங்க, வெகுளியாக தன்னைப் பற்றி பகிரத் தொடங்கினார்.

எனக்கு பெற்றோர் வைத்த பெயர் சாமியாத்தாள். ஆனால் எனக்கு ‘மூலிகைத் தாய்’ என்றொரு கவுரவப் பெயரும் உண்டு. எனது சின்ன தாத்தா, பெரிய தாத்தா மூலிகை சிகிச்சை அளித்து வந்தனர். மூலிகைகளை தேடி அவர்கள் செல்லும்போது, சிறுமியாக இருந்த நானும் அவர்களுடன் செல்வேன். அதனால், சிறுவயதிலேயே ஏராளமான மூலிகைகளை பற்றியும், அவை குணப்படுத்தும் நோய் குறித்தும் அவை கிடைக்கும் இடங்களும் எனக்கு தெரிந்தது.

அவர்களுக்குப் பின்னர் என் குடும்பத்தில் யாரும் மூலிகை வைத்தியம் பார்க்கவில்லை. என் கணவர் சண்முகம் விவசாயி. நோயால் அவதிப்பட்டவர்களைப் பார்த்தபோது, எனக்கு தெரிந்த மூலிகைகளை அவர்களுக்கு கொடுக்க தொடங்கினேன். என் கணவர் மறைவுக்குப் பின்னர் மூலிகையே என் வாழ்க்கையாகிவிட்டது என்றார் நீண்ட பெருமூச்சுடன்.

தற்போது, தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருக்கக்கூடிய சித்த மருத்துவர்களுக்கெல்லாம் மூலிகை விநியோகம் செய்கிறார். உயிரை பணயம் வைத்து பல மூலிகைகளை எடுத்து வருகிறார். அதுபற்றி அவர் நம்மிடம் மேலும் சொன்னது:

பெரும்பாலான மூலிகைகள் வனப்பகுதி, மலைப்பகுதியிலும் மட்டுமே கிடைக்கும் என்பதால், மூலிகைகளைத் தேடி கடுமையான பயணங்களை மேற்கொள்ள வேண்டும். அதிலும் அடர்ந்த காடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும், சில நேரங்களில் வன விலங்குகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

என்னை 3 முறை நாகப்பாம்பு தீண்டியுள்ளது. மூலிகை சிகிச்சையால் மீண்டேன். இருப்பினும், மூலிகைகளைத் தேடி இனி செல்லக்கூடாது என எனது மகன்கள் தடை போட்டனர். ஆனால், பலரது நோய்களை குணப்படுத்தி அவர்களை வாழ வைக்க உதவும் பணி என்பதால், மரணம் வந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் என கூறிவிட்டு என் பயணத்தை தொடர்கிறேன்.

ஒருமுறை டெல்லியில் நடந்த கண்காட்சிக்கு சென்றிருந்த போது, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நான் காட்சிக்கு வைத்திருந்த மூலிகைகளை பார்த்தார். பின்னர் திடீரென என்னை மேடைக்கு அழைத்து, அரிய மூலிகைகளைத் தேடிச் சேகரித்து வரும் இவரது உழைப்பு அபாரமானது. இவருக்கு ‘மூலிகைத் தாய்’ என்ற கவுரவப் பெயரை அளிக்கிறேன்’ எனக் கூறி என்னை பெருமைப்படுத்தினார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியும் எனக்கு கவுரவப் பட்டம் வழங்கியுள்ளார்.

கண்ணீர்விட்டான் கிழங்கு எலும்புருக்கி நோய்க்கு சிகிச்சையளிக்க உதவும். ஆகாச கருடன் வீட்டுக்குள் கெட்ட சக்திகள் வராமல் பாதுகாக்கும். இந்த மூலிகைகள் கிடைப்பது கடினமாக இருக்கும். கருநாகம் இருக்கும் இடத்தில் காணப்படும் கருநொச்சியை தேடிச் செல்வதில் எனக்கு அச்சமாக இருந்தாலும், என் வாழ்நாள் முழுவதும் மூலிகைகளை சேகரிக்க வேண்டும் என்பதே ஆசை என்கிறார் இந்த மூலிகைத் தாய்.

உயிர் காக்கும் பல மூலிகைகள் அருகில் இருந்தாலும் அதுபற்றி நமக்கு தெரிவதில்லை. ஆங்கில மருத்துவத்தின் ஆளுமைக்குள் சிக்கி, சித்த வைத்திய முறையின் மகத்துவம் பலருக்கு புரிவதும் இல்லை. மூலிகைத் தாய் மூதாட்டிக்கு தெரிந்த மூலிகைகளை ஆவணப்படுத்துவதும், அவற்றை காப்பதும் காலத்தின் கட்டாயம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in