Last Updated : 26 Dec, 2017 10:39 AM

 

Published : 26 Dec 2017 10:39 AM
Last Updated : 26 Dec 2017 10:39 AM

வலியைக் கடத்திய ‘அகதி’ நாட்டிய நாடகம்

நாடுகளுக்கு இடையேயான போர், உள்நாட்டிலேயே இரு இனக் குழுக்களுக்கு இடையே மூளும் போர் மற்றும் சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்களால் சொந்த மண்ணைத் துறந்து, உலகின் எங்கோ ஒரு மூலையில் மனித குலம் வேறொரு அந்நிய மண்ணுக்கு அகதிகளாக மக்கள் இடம்பெயரும் அவலத்தை பதைபதைப்போடு ரசிகர்களுக்குக் கடத்துகிறது சிங்கப்பூர் அப்சரா ஆர்ட்ஸ் குழுவினர் வழங்கிய ‘அகதி’ நாட்டிய நாடகம்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவன் அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டிய தர்ஷன் நிகழ்ச்சியின் இறுதியாக ‘அகதி’ நாட்டிய நாடகம் அரங்கேறியது. அது, உலக அளவில் அகதிகளின் நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.

அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு (யு.என்.ரெஃப்யூஜி ஏஜென்ஸி) பதிப்பித்த ‘எக்ஸ்பிரஷன் ஃபிரம் அவர் யூத்’ புத்தகத்தில் அகதிகளின் குழந்தைகளே எழுதிய கவிதைகள்தான் இப்படியொரு நாட்டிய நாடகத்தை எடுக்கத் தூண்டியது என்கிறார் நாடகத்தை எழுதி இயக்கியுள்ள அப்சரா ஆர்ட்ஸ் குழுவின் இயக்குநர் அரவிந்த் குமாரசாமி.

நடன இயக்கத்தை மோகனப்ரியன் தவராஜா, ரெஞ்சித் பாபு, விஜ்னா வாசுதேவன் அபாரமாக வடிவமைத்திருந்தனர். சித்ரா பூர்ணிமா, கார்த்திக் ரவீந்திரனின் இசை, நாடகத்தோடு ரசிகர்கள் ஒன்றுவதற்கு பேருதவியாக இருந்தது. அரங்கில் ஒளியைக் கொண்டே சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் கச்சிதமாக உருவாக்கினார் கியன்தேவ் சிங். பானுப்ரியா பொன்னரசு, சாத்விகா சங்கர், மீரா பாலசுப்ரமணியன், நிகிதா மேனன் ஆகியோரது நளினமான நடனம் காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப இருந்தது.

‘அவன் இனி அவனில்லை’ போன்ற உணர்ச்சிமயமான வரிகளுடன் பாரதியின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி எழுதிய பாடல் முத்தாய்ப்பாய் இருந்தது.

‘தோட்டத்தில் மேயுது வெள் ளைப் பசு’, ‘ஆசை முகம் மறந்து போச்சே’, ‘துன்பம் நேர்கையில்’, ‘மவுனமே பார்வையால்’, ‘அன் றொரு நாள் இதே நிலவில்’, ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ உள்ளிட்ட பாடல்களை காட்சிக்கேற்ப பொருத்தமாக பயன்படுத்தியதும், அந்தப் பாடல்களுக்கு நடனக் கலைஞர்கள் வெளிப்படுத்திய முத்திரைகள், அபிநயங்களும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தந்தன.

இந்த வகையில் மகாகவி பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதிதாசன், கவியரசு கண்ணதாசன் ஆகிய கவிஞர்களும் காட்சிகளோடு மானசீக மாக இரண்டறக் கலந்ததுபோல இருந்தது.

ஏழை, பணக்காரர், சாதி, மத பேதமில்லாமல் சொந்த மண் ணில் மகிழ்ச்சியோடு அவரவர் பணிகளில், குடும்பத்தோடு, உறவுகளோடு, நண்பர்களோடு, காதல் துணையோடு இருப்பதைக் காட்சிப்படுத்தி, அதைத் தொடர்ந்து பல்வேறு இயற்கைப் பேரிடர்களாலும், போர்களாலும் சொந்த மண்ணைவிட்டு வெளியேறும் அகதிகளின் வாழ்க்கை எப்படி துண்டாடப்படுகிறது? இன்னொரு நாட்டுக்கு குடியேறும் அகதிகள் எப்படி பார்க்கப்படுகின்றனர்? அவர்களை எப்படி பார்க்க வேண்டும்? எப்படி மரியாதையுடன் நடத்த வேண் டும் என்னும் விழிப்புணர்வையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது நாட்டிய நாடகம்.

அந்நிய நாட்டில் ஓர் அகதி உழைத்து எல்லா வளங்களை யும் கொண்டிருந்தாலும், அவரது நிலை எப்படி இருக்கிறது? ‘மண் இருந்தும் மரம் இருந்தும் வேர் அறுந்து நிற்கிறோம்’ என பாத்திரங்கள் பேசும் வரிகளில், ஒட்டுமொத்த அகதிகளின் வலியும் வெளிப்பட்டது.

வழக்கமாக கலை, ஆன்மிகம் போன்றவற்றையே நாட்டிய உருப்படிகளில் கண்ட கண்களுக்கு, உலகம் முழுவதும் வதைபடும் அகதிகளின் வலி, வேதனையை நாட்டிய வடிவில் கொடுத்த சிங்கப்பூர் அப்சரா ஆர்ட்ஸ் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உலகின் எந்தப் பகுதியிலும் அரங்கேற்ற தகுதி படைத்தது இந்த நாட்டிய நாடகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x