

திருச்சி மிளகுபாறை பகுதியில் அமைந்துள்ள ஆர்பிட் என்கிற சிறு தொழிற்சாலை நாட்டின் மிக முக்கிய ஆலைகளுக்கு தரமான, கடினமான உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வழங்குகிறது.
இதிலென்ன ஆச்சரியம் என்றால், இந்த உதிரி பாகங்களை உற்பத்தி செய்பவர்கள் பார்வையற்ற தொழிலாளர்கள். பார்வைத் திறன் உள்ளவர்களே செய்ய இயலாத பல தொழில்நுட்பப் பணிகளை சர்வசாதாரணமாக செய்து முடிக்கின்றனர் இங்குள்ளவர்கள்.
1974-ம் ஆண்டு இந்த தொழிற் சாலையை உருவாக்கியவர் திருச்சியைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவர் ஜோசப் ஞானாதிக்கம். பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு முறையான பயிற்சியளித்தால் பல பணிகளை சிறப்பாக செய்யவைக்க முடியும் என நம்பிய அவர், அரசுக்குச் சொந்தமான இடத்தை நீண்டகால குத்தகைக்கு வாங்கி ஆர்பிட் என்ற சிறு தொழிற்சாலையை உருவாக்கினார்.
அவரது மறைவுக்குப் பிறகு திருச்சியிலுள்ள சேவை மனப் பான்மை கொண்ட 10 நபர்களை நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களாகக் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது ஆர்பிட். லாபத்தில் 50 சதவீதம் தொழிலாளர்களுக்கும், 25 சதவீதம் தொழிலக மேம்பாட்டுக்காகவும், 25 சதவீதம் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காகவும் செலவிடப்படுகிறது.
திருச்சியிலுள்ள பாய்லர் ஆலைக்கு தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்து தர ஆரம்பித்து இப்போது அறுபது விதமான உதிரி பாக உற்பத்தி பணிகளை செய்கிறது ஆர்பிட். ஆண்டுக்கு ரூ.4 கோடிக்கு இங்கு உதிரி பாகங்கள் உற்பத்தியாகின்றன. இப்போது பாய்லர் ஆலையின் மதிப்புக்குரிய சிறுதொழில் உற்பத்திக் கூடமாக உருவெடுத்திருக்கிறது ஆர்பிட்.
இந்த நிறுவனத்தின் செயல்பாடு கள் குறித்து, இந்நிறுவன மேலாளர் ராஜா முகமது கூறியது: “பாய்லர் ஆலைக்கு வெளிச் சந்தையில் போதிய ஆர்டர்கள் இல்லாததால், தற்போது மாற்று நிறுவனங்களை (ஐ.சி.எஃப், ரயில்வே, ஓ.எஃப்.டி) அணுகி உற்பத்தி ஆணைகளைப் பெற்று வருகிறோம். நாளொன்றுக்கு 200 டன் எடை கொண்ட தளவாடப் பொருட்களை உற்பத்தி செய்யும் சக்தி கொண்ட தொழிலாளர்கள் இங்குள்ளனர். எங்களிடம் ஆர்டர் கொடுத்த எந்த நிறுவனத்துக்கும் நாங்கள் நேரம் தவறி பொருட்களை சப்ளை செய்ததேயில்லை.
பார்வையற்றவர்கள் 78 பேர் பணியில் ஈடுபட, அவர்களுக்கு உதவிபுரிய 22 மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு திருச்சி தொழிற்கூடம் இயங்கி வருகிறது. நிர்வாகம், காவல், பணிகளுக்கு சாதாரணப் பணியாளர்கள் 13 பேர் உள்ளனர். 40-வது ஆண்டை எட்டிப்பிடித்துள்ள எங்கள் நிறுவனம் சூரிய ஒளி மின்சக்தி சாதனங்களையும், சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் பொருட்களையும் உற்பத்தி செய்ய முடிவு செய்து அதற்காக திருச்சி உடையான்பட்டியில் 2 ஏக்கர் நிலம் வாங்கி புதிய தொழிற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தொழிற்சாலை இயங்க ஆரம்பித்தால் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார் ராஜா முகமது.
இங்குள்ள தொழிற்கூடத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 மாத இலவச பயிற்சியளித்து அவர்களை தொழில்நுட்ப தகுதியுடையவர்களாக மாற்றி பணியமர்த்தி பிழைக்க வழியேற்படுத்துகின்றனர். பார்வையற்றவர்களை இந்த சமூகத்தின் சராசரி மனிதனாக மாற்ற விரும்பும் நபர்களுக்கு வழிகாட்டும் ஆர்பிட் போன்ற ஆலைகள் நாடெங்கிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே இங்குள்ள தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருச்சி பாய்லர் ஆலை ஆண்டுதோறும் தமக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து தரும் நிறுவனங்களுக்கு விருது வழங்குவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து சிறந்த உதிரி பாக உற்பத்தியாளர் விருதை பெற்று மற்ற தொழிற்கூடங்களின் பொறாமையைச் சம்பாதித்திருக்கிறது ஆர்பிட். இது தவிர 2010-ம் ஆண்டு சிறந்த நிறுவனம் என மத்திய அரசின் தேசிய விருதை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடமிருந்து இந்நிறுவனம் பெற்றுள்ளது. 2010-ம் ஆண்டு மத்திய சமூக நீதித் துறையால் சிறந்த சமூக சேவை அமைப்புக்கான விருதையும், 2 முறை தமிழக அரசு விருதையும், 2012-ம் ஆண்டு ஐ.எஸ்.ஓ உலகத் தர நிர்ணய சான்றையும் பெற்றுள்ளது ஆர்பிட்.