Last Updated : 14 Jul, 2014 10:40 AM

 

Published : 14 Jul 2014 10:40 AM
Last Updated : 14 Jul 2014 10:40 AM

அலுவலகம் உள்பட அனைத்து இடங்களுக்கும் வேட்டி அணிந்து செல்ல வேண்டும்: கோ-ஆப்டெக்ஸ் இயக்குநர் உ.சகாயம் வலியுறுத்தல்

தமிழ் ஆடவர்களின் ஆடை மரபின் அழகிய வெளிப்பாடான வேட்டிக்கு எதிரான கிளப்புகளுக்கு பதிலடி கொடுக்க, தமிழர்கள் அலுவலகம் உள்பட அனைத்து இடங்களுக்கும் வேட்டி அணிந்து செல்ல வேண்டும் என தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் இயக்குநர் உ.சகாயம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற புத்தக வெளியீட்டு விழா வுக்கு வேட்டி அணிந்து சென்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன், மூத்த வழக் கறிஞர் ஆர்.காந்தி, வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரை விழாவில் பங்கேற்கவிடாமல் தடுத்து கிளப் காவலர்கள் வெளியே அனுப்பினர்.

இந்த சம்பவம் குறித்து, தமிழகத்தில் கோ-ஆப்டெக்ஸ் துணி விற்பனைக்காக வேட்டி தினம் நடத்திவரும், கோ-ஆப்டெக்ஸ் இயக்குநர் உ.சகாயம் ‘தி இந்து’ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் கூறியதாவது:

சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா, கிளப் சார்பில் நடத்தப்பட வில்லை. தனியார் நிகழ்ச்சிக்கு சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் 2 வழக்கறிஞர்களை வேட்டி அணிந்து வந்த காரணத்துக்காக கிளப்பைவிட்டு வெளியே அனுப் பிய செயல் உண்மையிலேயே அதிர்ச்சிகரமான, அவமானகர மான செயலாகும். வெள்ளைக் காரன் விதியை சுட்டிக்காட்டி தமிழர் களின் ஆடை கலாச்சார மரபின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். தமிழ்ச் சமுதாயத்தின் ஆடை மரபுக்கு எதிரான உளவியல் வன் முறையாகவே இந்த செயலைக் கருத வேண்டும். இது கண்டனத் துக்குரியது.

தனிப்பட்ட மூவருக்கு எதிரான அவமானமாக இதைக் கருதமுடி யாது. ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கு எதிரான அவமானமாகக் கருதப்பட வேண்டும்.

இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவோர் மீது 3 விதங்களில் நம்மால் தாக்குதல் தொடுக்க முடியும். அதில் முதலாவது சம்பந்தப்பட்ட கிளப்புக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது, சுதந்திர சிந்தனையுள்ள தமிழர்கள் இதுபோன்ற கிளப்புகளைப் புறக்கணிப்பது, மூன்றாவது வேட்டி என்பது தமிழ் ஆடவர்களின் ஆடை மரபின் அழகிய வெளிப்பாடு என்பதால், தமிழர்கள் அனைவரும் எல்லா இடங்களுக்கும், வேலை செய்யும் அலுவலகங்களுக்குக்கூட வேட்டி அணிந்து செல்வது. இவ்வாறு செய்வது, சுதந்திர நாட்டில் ஆடை பற்றிய அடிமை சிந்தனை கொண்டிருப்பவர்களுக்கு நாம் சொல்லக்கூடிய பாடமாக இருக்கும். வேட்டி இயக்கமாக இதை செய்ய வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x