

தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு ஆண்கள் வர மறுப்பதால், அவர்களை அழைத்து வர தரகர்களுக்கு சுகாதாரத் துறையினர் தங்கள் சொந்தப் பணத்தை வழங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பெரும் சவாலாக உள்ள மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 1952-ம் ஆண்டு முதலே, ஆண்கள், பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆரம்ப காலத்தில் பெண்களை விட, ஆண்களே அதிக அளவு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டனர். 1956-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை, இந்தியாவில் 32.7 மில்லியன் பேர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் ஆண்கள் மட்டும் 65 சதவீதம் பேர்.
1980-ம் ஆண்டுக்குப் பின், தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொள்வதில் ஆண்கள் ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வோர் ஆண்டும் 3 லட்சத்துக்கு மேளான பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும், ஆண்கள் அரிதாகவே குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். கடந்த 2012-13ல் 1,270 ஆண்களும், 2013-14ல் 1,384 பேரும், 2014 ஜனவரி முதல் ஜூன் வரை 167 பேரும் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளனர். ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு ரூ.1,050 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. ஆனாலும் ஆண்கள் சிகிச்சைக்கு வர மறுக்கின்றனர்.
கடந்த 2005-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை குறைத்துக்கொண்டு, ஆண்களுக்கான சிகிச்சையை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதனால், ஆண்களை சிகிச்சைக்கு அழைத்து வர, மருத்துவப் பணியாளர்கள் தரகர்களுக்கு தங்கள் பணத்தை வழங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது, ‘‘ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வாசக்டமி (ஆண் குடும்பக் கட்டுப்பாடு. அறுவை சிகிச்சை) முகாம் நடத்தி விருப்ப இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், தற்போது ஆண்கள் சிகிச்சை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. கடந்த வாரம், காஞ்சிபுரம் மேடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரே நாளில் 26 ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளனர். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆண்கள் அதிக அளவில் சிகிச்சைக்கு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார்.
ஆண்கள் செய்துகொள்வதே நல்லது
இதுகுறித்து மனநல மருத்துவர் ஆ.காட்சன் கூறும்போது, ‘‘அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆன்மைத் தன்மை பாதிக்கப்படும், தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்கிற அச்சத்தால்தான் ஆண்கள் சிகிச்சைக்கு வர மறுக்கின்றனர். மற்றவர்களின் கேலிக்கு ஆளாக நேரிடும் என்பதாலும் வர மறுக்கின்றனர். பல பெண்கள் தங்கள் கணவர் அறுவை சிகிச்சை செய்துகொள்வதை விரும்புவதில்லை.
ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்வதால், தாம்பத்திய வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெண்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்டால், ஒரு மாதமாவது ஓய்வெடுக்க வேண்டும். கடினமான வேலைகளைச் செய்ய முடியாது. ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு தழும்பில்லா அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் ஒரு நாளில் வழக்கமான பணிகளைத் தொடரலாம். அதனால், பெண்களைவிட ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையை செய்துகொள்வதே நல்லது'' என்றார்.