

நமது இயக்கம் பெரும்பாலும் கால்களை நம்பியே இருக்கிறது. நாம் அதிகம் பயன்படுத்தும் உறுப்பான முழங்கால் மூட்டுதான் உடலின் பெரும்பாலான எடையைத் தாங்குகிறது. பருமனாக உள்ளவர்கள், பலவித உடற்கூறு பலவீனமானவர்கள் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு எலும்புத் தேய்மான நோய்க்கு ஆளாகிறார்கள். எலும்பு வளர்ச்சியில் பற்றாக்குறை இருந்தாலோ, எலும்பு திசுக்கள் அழிந்தாலோ ஆஸ்டியோ போரோசிஸ் ஏற்படுகிறது. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்டிரோன் சுரப்பு குறைவதாலும் மூட்டுவலி, எலும்பு திசு அழிவு (osteoporosis) வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மது, புகையிலை பழக்கங்கள், தைராய்டு பிரச்சினை, உடல் எடை அதிகரிப்பது, அதிக நேரம் நின்றுகொண்டே வேலை செய்வது ஆகியவை முட்டி தேய்மானம் மற்றும் பாத வலி வருவதற்கான காரணங்கள். ஒரு நாளின் பெரும் பகுதியை கணினி முன்பு செலவு செய்பவர்கள், இருசக்கர வாகனங்களில் தொடர்ச்சியாக அதிக தொலைவு செல்பவர்களில் பலரும் முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பு வலி, மூட்டுவலிப் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். குதிகால் உயர்ந்த காலணிகளை (high heels) அணிந்தாலும் இந்தப் பிரச்சினை வரலாம்.
ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள், முறையான உடற்பயிற்சி, சரியான யோகாசனங்கள் ஆகியவை நமது உடலில் ஏற்படும் முதுகு வலி, கழுத்து வலி மற்றும் ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டுவலிப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். கை, கால்களை நீட்டியும் மடக்கியும் செய்கிற சாதாரண stretching பயிற்சிகள் வருங்காலத்தில் வரக்கூடிய மிகப் பெரிய வலியை தடுத்து விடும்.
மூட்டு வலி தொடர்பான பாதிப்புகளுக்கு சுமார் 2,800 தோரணைகளை (postures) பதஞ்சலி தந்துள்ளார். அவற்றில் எளிமையான சிலவற்றைப் பார்க்கலாம்.
முதலில் சவாசன நிலையில் ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். இரு கைகளையும் ஊன்றி, ஒரு பக்கமாக ஒருக்களித்துதான் சவாசன நிலைக்குச் செல்ல வேண்டும். அதேபோல, இரு கைகளையும் ஊன்றி ஒருக்களித்துதான் எழுந்திருக்கவும் வேண்டும். சவாசனத்தில் ரிலாக்ஸ் செய்துகொண்ட பிறகு, இரு கால்களையும் நன்றாக நீட்டி அமர்ந்துகொண்டு, இரு கைகளையும் பக்கவாட்டில் ஊன்றிக்கொள்ள வேண்டும். தலை, முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். தொடர்ந்து செய்ய வேண்டிய பயிற்சிகள், படங்களில் காட்டப்பட்டுள்ளன. இப்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தால், மூட்டு, முதுகு, கழுத்து, கால் வலியில் இருந்து விடுபடலாம். மகராசனத்தில் குப்புறப்படுத்து, இடது, வலது கால்களை மாற்றி மாற்றி மடக்கி, கீழே இறக்கலாம். பவன முக்தாசனம் செய்யலாம். பாதம், முட்டி வலி இருக்கும்போது சூர்ய நமஸ்காரத்தை தவிர்ப்பது நல்லது.
மூட்டுவலி, ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் இருக்க உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும். தரையில் சம்மணம் போட்டு உட்காரப் பழக வேண்டும். உயரமான காலணிகளைத் தவிர்க்க வேண்டும்.
- யோகம் வரும்...
எழுத்து: ப.கோமதி சுரேஷ்
படங்கள்: எல்.சீனிவாசன்